ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

மின்சார ரயில் கொள்ளையர்கள் வாக்குமூலம் : 5 நிமிடம்தான்; முதலில் இடிப்போம், அடுத்து அடிப்போம்’-

accused எஸ்.மகேஷ் விகடன் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கிய கொள்ளையர்களின் வாக்குமூலத்தைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘5 நிமிடத்தில் கொள்ளையடித்துவிட்டு தப்பிவிடுவோம்’ என்று கொள்ளையர்கள் கூறியுள்ளனர். சென்னை சென்ட்ரல் காவல் நிலையத்தில், வசந்தா என்பவர் புகார் அளித்தார். அதில், `கடந்த 28-ம் தேதி மகளுடன் மின்சார ரயிலில் சென்ட்ரலுக்கு வந்தேன். அப்போது, ரயிலில் கூட்டம் அலைமோதியது. ரயிலை விட்டு ரயில் நிலையத்தில் இறங்கியபோது, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினைக் காணவில்லை. எனவே, அதை கண்டுப்பிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, டிஎஸ்பி முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், ராதாகிருஷ்ணன், தலைமைக் காவலர் சிவகுருநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அதில், வசந்தாவிடம் செயினைப் பறித்தவர்கள் குறித்த தகவல் கிடைத்தது. அவர்களைப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேற்கு வங்க மாநிலம், பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பலாஸா ராய் (43) அவரின் கூட்டாளிகள் கௌத்தம் தாஸ் (42), சுமித் பட்டாக் (23), சங்கரல் அகர்வால், கோபால் மோதி, ரதோஸ்யாம் ராய் சவுத்திரி ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 4 சவரன் தங்கச் செயின், 5 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்செய்தனர்.


மேற்கு வங்க மாநில கொள்ளையர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “சென்னைக்கு வேலை தேடி நாங்கள் வந்தோம். சென்ட்ரல் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். வேலை கிடைக்காததால் கொள்ளையடித்தோம். காலையில் அலுவலகத்துக்கு செல்வதுபோல டிப்டாப்பாக உடையணிந்துகொண்டு விடுதியிலிருந்து செல்வோம். கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில்களில் பயணிப்போம். நாங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துகொள்வோம்.



accused
accused
ஒரு குழுவில் 3 பேர் இருப்பார்கள். சட்டை பாக்கெட்டில் செல்போன்களை வைத்திருப்பவர்கள்தான் எங்களின் டார்க்கெட். அவர்களின் அருகில் மூன்று பேரும் நிற்போம். சட்டை பாக்கெட்டில் செல்போனை வைத்திருக்கும் நபரை இடிப்போம். அதனால் அவர், ஏன் இப்படி இடிக்கிறீர்கள் என்று கேட்கும்போது இன்னொருவர் அவரின் செல்போனை எடுத்து மூன்றாவது நபரிடம் கொடுத்துவிடுவோம். செல்போன் கையில் கிடைத்தவுடன், நைசாக அங்கிருந்து மூன்றாவது நபர் சென்றுவிடுவார். உடனடியாக செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவோம்.




5 நிமிடத்தில் செல்போனை எடுத்துக்கொண்டு அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிவிடுவோம். இதைப்போல கூட்டமான ரயிலில் தங்கச் செயின் அணிந்து செல்பவர்களை முதலில் நோட்டமிடுவோம். பிறகு, அவர்களையும் எங்கள் டெக்னிக்படி இடித்து கவனத்தை திசைதிருப்போம். பிறகு, செயினை பறித்துக் கொண்டு தப்பிவிடுவோம். சென்னை பார்க், பரங்கிமலை, பல்லாவரம் ஆகிய ரயில் நிலையங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளோம்.



electric train
electric train
கொள்ளையடித்த செல்போன்கள், தங்க நகைகளோடு மேற்கு வங்கத்துக்கு செல்வோம். அங்கு, அதை விற்று பணத்தை சமமாகப் பங்கிட்டுக்கொள்வோம். அந்தப் பணத்தில் எங்கள் விருப்பம்போல வாழ்ந்துவந்தோம். பணம் செலவான பிறகு, மீண்டும் சென்னைக்கு வந்து கைவரிசை காட்டுவோம். ஆனால், இந்த முறை சிசிடிவி-யால் சிக்கிக்கொண்டோம்” என்று கூறியுள்ளனர்.
செல்போன், செயின் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் 16-வது பெருநகர குற்றவியல் நடுவர் இசக்கியப்பன் முன் போலீஸார் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “புகார் கொடுக்கப்பட்ட 4 மணி நேரத்தில், 6 பேரையும் கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கு துப்பு துலங்க முக்கியக் காரணமாக மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமரா பதிவுகள் உதவின. செல்போன், செயின்களைப் பறித்துவிட்டு 6 பேரும் விடுதிக்குச் செல்லும் வரையிலான சிசிடிவி பதிவுகள் அடிப்படையில்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.
vikatan.com

கருத்துகள் இல்லை: