புதன், 4 செப்டம்பர், 2019

நியூயார்க் நகரில் 'யாதும் ஊரே' திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

eps-in-newyork
hindutamil.in : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொழில் முனைவோர்களுக்கான 'யாதும் ஊரே' திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
14 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதல் நாள் (29.08.19) சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டாவாது நாளில் (30.08.2019) லண்டன் நாடாளுமன்ற எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி. இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், தமிழ்நாட்டில் செயல்படுத்தும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த முதல்வர், நகர உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
3-வது நாளில் லண்டனில் அள்ள காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை, எளிய வழியில் மின்கட்டமைப்பில் சேர்ப்பது எப்படி என்பது குறித்து, முதல்வர் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து செப். 1-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தொழிலபதிபர்களிடம் கலந்துரையாடிய அவர், அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பஃபல்லோ நகருக்குச் சென்ற அவர், கால்நடைப் பண்ணைகளை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், யாதும் ஊரே திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தபடி, யாதும் ஊரே திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளை முதல்வர் சந்தித்துப் பேசினார், அதைத் தொடர்ந்து இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, முதலீட்டுத் தூதுவர்களை உருவாக்கி யாதும் ஊரே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, ரூ.60 லட்சம் செலவில், தனியாக ஒரு வலைதளம் உருவாக்கப்படும். இதன்மூலம் உலகெங்கும் உள்ள தொழில் முனைவோர்கள், தங்களின் முதலீடுகளை தமிழகத்தில் ஏற்படுத்த முடியும். அதேபோல 'தொழில் வளர் தமிழகம்' என்ற பெயரில் தொழில் நிகழ்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: