புதன், 16 ஜனவரி, 2019

சென்னையில் களை கட்டிய காணும் பொங்கல்


சென்னையில் களை கட்டிய காணும் பொங்கல்மாலைமலர் : சென்னையில் உள்ள பூங்காக்கள், கேளிக்கை மையங்கள் என பொழுதுபோக்கு இடங்களில் கூட்டம் திரண்டதால் காணும் பொங்கல் களை கட்டியது.
 சென்னை: காணும் பொங்கல் பண்டிகையான இன்று மக்கள் பொழுதுபோக்கு இடங்களில் திரண்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர். மெரீனா கடற்கரையில் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகி கொண்டே சென்றது. இதனால் மெரீனாவில் திரும்பும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது.< கடற்கரை மணலில் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் பந்து விளையாடுவது, ஓடி பிடிப்பது, மணலில் வீடு கட்டுவது போன்ற விளையாட்டுகளை ஆடி குதூகலமாக இருந்தனர்
மெரீனாவில் அமைக்கப்பட்ட கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கினர்.


பொதுமக்கள் கடலில் இறங்கிவிடாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 6 உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணித்தனர். அவசர மருத்துவ உதவிக்காக 2 ஆம்புலன்சில் மருத்துவ குழுவினரும், மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

நேற்று வாகனங்களில் போலீசார் சுற்றி வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரைக்கு வந்த குழந்தைகளுக்கு அடையாள அட்டையில் பெற்றோர் பெயர், செல்போன் எண் ஆகியவற்றை எழுதி கையில் மாட்டி விட்டனர்.



இதேபோல் பெசன்ட்நகர், எல்லியட்ஸ் கடற்கரை ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் அதிகாலையிலேயே கூடினர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கிண்டி சிறுவர் பூங்காவிலும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடு விளையாடி பொழுது போக்கினர்.

சென்னையில் உள்ள பூங்காக்கள், கேளிக்கை மையங்கள் என பொழுது போக்கு இடங்களில் கூட்டம் திரண்டதால் காணும் பொங்கல் களை கட்டியது.

இதையொட்டி சென்னை நகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

கருத்துகள் இல்லை: