சனி, 19 ஜனவரி, 2019

10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

10  சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!மின்னம்பலம் : மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இன்று (ஜனவரி 19) திக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. அதற்கு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் இந்த இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதுபோன்று திமுக சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னை, பெரியார் திடலில் பொது பிரிவினருக்கு பொருளாதார ரீதியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்துள்ளது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்னும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், அதனை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும், இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்னும் அளவுகோல் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தியும் பிரச்சாரக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டம், துண்டறிக்கை வெளியிடுவது, சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரணி நடத்துவது தொடர்பாக தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற் படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரை இணைத்து நாடு தழுவிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, திக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்திலும், விசிக சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: