செவ்வாய், 15 ஜனவரி, 2019

சயன், மனோஜ் விடுவிப்பு; எடப்பாடியை விசாரித்தீர்களா? நீதிமன்றம் கேள்வி!

minnambalam.com :கொடநாடு ஆவணப் பட விவகாரத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க மறுத்து, விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டது தமிழக அரசை அதிர வைத்துள்ளது.
நேற்று (ஜனவரி 14) மாலை சயன், மனோஜ் இருவரையும் சுமார் பத்து மணி நேர விசாரணைக்குப் பின் எழும்பூர் நீதிமன்றத்துக்குப் பலத்த பாதுகாப்போடு ஆஜர்படுத்தினார்கள் போலீஸார். நீதிமன்றத்தின் வெளிக்கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டன. செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
நேற்று மாலை நீதிமன்றத்துக்குள் சென்ற போலீஸார் இருவரையும் ஆஜர்படுத்தினர். சில மணி நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் செய்தியாளர்கள் காத்திருந்தனர். இரவு 9.50 மணிக்கு போலீஸார் வெளிறிய முகத்தோடு இருவரையும் மீண்டும் போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

புழல் சிறைக்குச் செல்கிறார்களா என்று விசாரித்தபோதுதான் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சரிதாவின் அதிரடி கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், சயன், மனோஜ் இருவரையும் கூட்டிக்கொண்டு மீண்டும் மத்தியக் குற்றப் பிரிவு அலுவலகத்துக்கே திரும்பினார்கள் போலீஸார்.
விசாரணையில் போலீஸாரைச் சரமாரியாகக் கேள்விகள் கேட்ட நீதிபதி சரிதா, அந்த இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.
இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றத்திலேயே மாத்யூஸ் சாமுவேல் தயாரித்து வெளியிட்ட அந்த ஆவணப்படத்தை முழுமையாகப் பார்த்தார் நீதிபதி சரிதா. அதைப் பார்த்துவிட்டு போலீஸார் பக்கம் திரும்பி, “இவர்கள் கொடுத்த பேட்டியால் தமிழகத்தில் எங்கே கலவரம் ஏற்பட்டது?” என்று கேட்டார். போலீஸார் பதில் அளிக்க முடியாமல் தவித்தனர்.
மேலும், “இந்த இருவரும் ஆவணப்படத்தில் குற்றம்சாட்டியிருக்கும் திரு.எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து விசாரித்தீர்களா?” என்று நீதிபதி சரிதா கேட்டபோது, போலீஸாரால் அதற்கும் பதில் சொல்ல இயலவில்லை.
“என் கேள்விகளுக்குப் பதில் இல்லை, சரியான ஆவணங்கள் இல்லை. இதனால் இவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட முடியாது. அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறிய நீதிபதி சயன், மனோஜ் இருவரையும் பார்த்து, “உங்களுக்கு வக்கீல்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டார்.
“இப்போது யாரும் இல்லை. டெல்லியில் இருந்துதான் வர வேண்டும்” என்றனர்.
பிறகு அவர்கள் இருவரையும் அழைத்துச் செல்லும்படி உத்தரவிட்டார் நீதிபதி. இதனால் கடுமையான ஏமாற்றத்தோடு இரவு 9.50 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த போலீஸார் சயன், மனோஜ் இருவரையும் மீண்டும் எழும்பூர் மத்தியக் குற்றப் பிரிவு அலுவலகத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டனர்.
அங்கிருந்தபடி மேலிட உத்தரவுகளைப் பெற்று மீண்டும் இரவு 11 மணிக்கு மேல் இருவரையும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி சரிதாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
‘நீங்கள் கேட்ட ஆவணங்கள் இருக்கின்றன’ என்று சொல்லி அந்த இரண்டு மணி நேர இடைவெளியில் இருவர் மீதும் குற்றம்சாட்டும் வகையில் அவசர அவசரமாகச் சில ஆவணங்களைத் தயாரித்து நீதிபதியின் முன் அளித்தனர் போலீஸார்.

நீதிபதி வீட்டிலேயே நள்ளிரவு கடந்து விசாரணை நீடித்தது. முடிவில் இன்று அதிகாலை, போதிய ஆதாரங்கள் இல்லாததால் சயன், மனோஜ் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார் நீதிபதி சரிதா. இதனால் போலீஸார் கடுமையான ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட சயன், மனோஜ் வரும் 18ஆம் தேதி ஆஜராக தங்களது வழக்கறிஞருடன் ஆஜராக வேண்டும் என்றும் பிணைத் தொகை 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி சரிதா தெரிவித்தார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சயன், மனோஜ் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டதன் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: