செவ்வாய், 15 ஜனவரி, 2019

இந்தியா - இலங்கை மீண்டும் இணையுமா.. இராமர் பாலம் பற்றிய கட்டுகதைகள்


இராமர் பாலம் பற்றிய கட்டுக் கதைகளை
இக்கட்டுரை தகர்த்தெறிகிறது.
இக்கட்டுரையாளர் நண்பர் சிங்கநெஞ்சன் அவர்கள், இந்திய புவியியற் கழகத்தில் (Director, Geological Survey of India) இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
 Singanenjam Sambandam : இந்தியா - இலங்கை மீண்டும் இணையுமா...(நிறைவுப் பகுதி)
கடல்மட்டம் 15 மீ. தாழ்ந்தாலே இந்தியாவும் இலங்கையும் இணைந்துவிடும் எனப் பார்த்தோம். அப்படியென்றால் Last Glacial Maxima (LGM) வின் போது கடல்மட்டம் சுமார் 125 மீ.தாழ்ந்திருந்தபோது, நிச்சயமாக இரு நிலப்பகுதிகளும் இணைந்திருந்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை..
Last Glacial Maxima வைத் தொடர்ந்து, பூமியின் வெப்பம் அதிகரிக்கத் துவங்கியபோது, பனிக் கண்டங்கள் உருகி, கடல்மட்டம் சிறிது சிறிதாக உயரத் துவங்கியது. சுமார், 7000/8000 ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 110 மீ.உயர்ந்து, இன்றுள்ள அளவிற்கு 15 மீ. குறைந்த நிலையை அடைந்த போது பாக் நீரிணை தோன்ற ஆரம்பித்திருக்கும். கடல் மட்டம் மேலும் உயர்ந்தபோது, பாக் நீரிணை விரிந்து பரந்து இலங்கை தனித்தீவாக மாறியிருக்கும். பாக் நீரிணைப் பகுதியில் இருந்த உயரமான பகுதிகள்,சிறு சிறு தீவுகளாகவும் திட்டைகளாகவும் உருவெடுத்திருக்கும். நாம் இன்று காணும் ஆதாம் பாலம் அப்படி உருவானதே.

சரி, இன்றைய நிலை என்ன? இந்திய புவியியல் ஆய்வுத் துறை இருபது ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டது. அதிராம்பட்டினம் - கோடியக்கரை பகுதிகளில், கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில், கடல் சுமார் 55 கி.மீ. பின் வாங்கியிருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
“புவிக்கட்டமைப்பில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் காரணமாக, வேதாரண்யம்- கோடியக்கரை பகுதியில் நிலப்பகுதி உயர்ந்து வருகிறது. கடல் நீரோட்டங்கள் அப்பகுதியில் மணலைக் கொட்டி மேடாக்கி வருகின்றன, இதன் காரணமாக இப்பகுதியில் கடல் வேகமாகப் பின் வாங்கி வருகிறது” என்று பேராசிரியர் இராமசாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.
செய்கோள் பதிமங்களிளிருந்து பெறப்பட்ட தொலை உணர்வுத் தரவுகளின் அடிப்படையிலும், கோடியக்கரை பகுதியில் மேற்கொள்ளப் பட்ட கரிம ஓரகத் தனிம ஆய்வுகளின் அடிப்படையிலும் கிடைத்த தகவல்களை அவர் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார். (CURRENT SCIENCE Vol. 78,No.9, 10th Nov.1996). அதன்படி, சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன், கடற்கரை செட்டிபுலம் பகுதியில் இருந்ததாகவும், பிறகு அது தென்கிழக்கே 10 கி,மீ. பின்வாங்கி 5560 ஆண்டுகளுக்கு முன் மாறங்கநல்லூர் பகுதியில் இருந்ததாகவும், அடுத்த 2076 ஆண்டுகளில் 4 கி.மீ. பின்வாங்கி தொட்டக்குடி பகுதிக்கு வந்ததாகவும், அடுத்த 2270 ஆண்டுகளில் 8 கி.மீ. பின்வாங்கி வேதாரண்யம் பகுதிக்கு வந்ததாகவும், அடுத்த 220 ஆண்டுகளில் மேலும் 8 கி.மீ. பின்வாங்கி கோடியக்கரையை அடைந்ததாகவும் தெரிகிறது. கோடியக்கரை பகுதியில் கடந்த 1020 ஆண்டுகளில் கடலில் 28 கி.மீ. தூரத்திற்கு மணல் திட்டுகள் உருவாகியுள்ளன. இது இப்படியேப் போனால் கோடியக்கரை இலங்கையின் யாழ்ப்பாணத் தீபகற்பத்துடன் இணைந்துவிடும் என்று அக்கட்டுரை முடிந் திருக்கிறது.
இதன்படி, ஒட்டுமொத்தமாக, செட்டிப்புலம் – கோடியக்கரை பகுதியில் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் கடல் 58 கி.மீ. பின் வாங்கியுள்ளது..(சராசரியாக ஆண்டிற்கு 9.53 மீ. என்ற அளவில்). இதே சராசரி தொடர்ந்தால், இன்னும் சுமார் 1200 ஆண்டுகளில் யாழ் தீபகற்பமும் கோடியக்கரையும் இணையக் கூடும். வேறு வேறு புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த இணைப்பு ஏற்பட இன்னும் 2400 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது. மாறாக, ஆண்டிற்கு 29 மீ. எனும் அளவில் மணல்மேடுகள் உருவாகும்போது, இன்னும் 400 ஆண்டுகளில் இணைப்பு ஏற்படும் என்று பேராசிரியர் இராமசாமி தனது REMOTESENSING AND GEOMORPHOLOGY நூலில் தெரிவிக்கிறார்.
கடல் பின்வாங்கும் வேகம், மணல்மேடுகள் உருவாகு ம் வேகம் இவற்றைப் பொறுத்து இந்த இணைப்பு ஏற்படும் காலம் மாறக்கூடும்.
நிலங்கள் இணைந்தால் மட்டும் போதுமா ?

கருத்துகள் இல்லை: