சனி, 13 அக்டோபர், 2018

சிவசேனா : சபரிமலைக்கு பெண்கள் வந்தால் தற்கொலை செய்வோம்! ..செய்யுங்கோ செய்யுங்கோ .


தற்கொலை செய்வோம்: சிவசேனா!மின்னம்பலம் : சபரிமலை ஆலயத்திற்குள் இளம் பெண்கள் நுழைந்தால், தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று சிவ சேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் இருந்து வருகிறது. பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள போதிலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தசரா முடிந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் 42 நாட்கள் வரை, அங்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

பெண்களுக்கென்று தனியாகக் கழிவறைகள் மற்றும் குளியலறைகள் அமைத்துத் தரப்படும். பதினெட்டாம்படி பகுதியில் கூடுதலாகப் பெண் போலீஸ் பணியமர்த்தப்படுவார்கள். தன்னார்வத் தொண்டு வேலைகளிலும் பெண்கள் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். பெண்களுகென்று, தனியாகக் காத்திருப்பு அறை அமைக்கப்படும். பேருந்தில் 25 சதவிகித ஒதுக்கீடு செய்யப்படும். அந்த பேருந்தில் பெண் நடத்துநர்கள் பணியமர்த்தப்படுவார்கள். படிகளில் ஏற்றி விடுவதற்கு, கூடுதல் பெண் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐயப்பன் கோயிலுக்குள் இளம் பெண்கள் நுழையக்கூடாது என சிவ சேனா சார்பில் தற்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு இன்று (அக்டோபர் 13) பேட்டியளித்த கேரள சிவ சேனா உறுப்பினர் பெரிங்கமல்லா அஜி, “தற்கொலைக் குழுவின் ஒரு பகுதியாக எங்கள் பெண்கள் ஆர்வலர்கள் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பம்பா நதிக்கு அருகே கூடுவார்கள். எந்த இளம் பெண்ணாவது சபரிமலைக்குள் செல்ல முயன்றால், எங்கள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மலையாள நடிகரும் பாஜக உறுப்பினருமான கொல்லம் துளசி, சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்கள் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு ஒரு துண்டு டெல்லியிலும் மற்றொரு துண்டு கேரள முதல்வர் அலுவலகத்திலும் வீசப்படும் என்று பேசியிருந்தார். இதற்காக அவர் மீது சவரா காவல் நிலையத்தில் இன்று வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: