வியாழன், 11 அக்டோபர், 2018

ஆளுநர் .. ஆண்டாள் .. சின்மயி ... வைரமுத்து .....

பகிரங்க புகார் எங்கே? tamil.oneindia.com - hemavandhana.;சென்னை: சின்மயி - வைரமுத்து விவகாரத்தை இரண்டு விதமாக பார்க்க வேண்டியுள்ளது. முதலில் சின்மயி தரப்பில் எடுத்து கொள்ளலாம்.
தன்னையும் தன் தாயாரையும் வைரமுத்து ஒரு ஓட்டலில் சந்திக்க சொன்னதாக சின்மயி சொல்கிறார். சந்திக்க தானே வைரமுத்து சொன்னார். இதில் எங்கே பாலியல் தொந்தரவு வந்தது? சின்மயியை தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்தான் வைரமுத்து சொன்னார். அதற்கு சின்மயி மறுத்துவிட்டாராம். அவ்வளவுதானே?
இங்கே எங்கே பாலியல் தொந்தரவு நடந்தது?
இன்றைய காலகட்டங்களில் நேரிடையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் போலீசிலும், கோர்ட்டிலும் நீதி தேடி அலையும் நிலையில், வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏன் வெளிவந்து பகிரங்க புகார் அளிக்கவில்லை?ஒரு சினிமா பிரமுகர், அதிலும் பிரபலமானவர் பாலியல் தொல்லை கொடுத்தால் எந்த பாதிக்கப்பட்ட பெண்ணாவது சும்மா விடுவார்களா சந்தி சிரிக்க வைக்க கிளம்பி விட மாட்டார்களா? இதை அப்பட்டமாக நிரூபித்து.. வழக்கு தொடுத்து... கோர்ட்டில் ஆதாரத்தை காட்டி இருக்கலாமே? அதைவிட்டுவிட்டு இப்படி பொத்தாம் பொதுவாக, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது சரியான செயலா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.




காலில் விழுந்து ஆசி

மேலும் இதே சின்மயி வைரமுத்துவின் வரிகளுக்கு பலமுறை பாராட்டு தெரிவித்திருந்தாரே அது எப்படி? இவ்வளவு காலம் கிட்டத்தட்ட 15 வருடத்திற்கும் மேலாகவே வைரமுத்து வரிகளில் சின்மயி பாடிக் கொண்டுதான் வந்தார். தன்னை படுக்கைக்கு கூப்பிட்டதாக சொன்ன சின்மயி, தன் திருமணத்திற்கு எதற்காக வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்?



நற்பெயரை குலைப்பதா?

13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு கூப்பிட்டதை சின்மயி ஏன் இவ்வளவு காலம் கழித்து இப்போது வந்து சொல்கிறார்? என்றும் யதார்த்த கேள்விகள் எழுந்து செல்கிறது. இன்னும் சொல்லப்போனால் வைரமுத்து இளமை, புதுமையோடு சினிமா உலகில் கால் வைத்த காலத்திலேயே இதுபோன்ற புகார்களில் சிக்காதவர். இப்போ வந்து வைரமுத்து மீது புகார்களை சொல்வது திட்டமிட்ட, பெயரை குலைக்க ஏற்படுத்தப்படும் சதியா என்ற கேள்வியும் எழுகிறது.



ஒரு பெண் இப்படி சொல்வாரா?

மறுபக்கம் பார்த்தால், வைரமுத்து திமுகவின் முழு ஆதரவாளர்... முழு விசுவாசி... அரசியல் செல்வாக்கால் பெண்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஒரு பெண் தன் வெட்கம், மானத்தை எல்லாம் விட்டுவிட்டு இப்படி பகிரங்கமாக சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்குமா? என்றும் எதிர்த் தரப்பில் வாதிடப்படுகிறது. இதனால்தான் நடிகை சின்மயிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.



நடிகர் சித்தார்த் ஆதரவு

பெண்கள் பலர் அவரது டிவிட்டர் பதிவுக்கு ஆதரவாக ரீட்வீட் செய்து வருகின்றனர். இதற்கு முதல் ஆதரவு நடிகர் சித்தார்த் அளித்துள்ளார். பொதுவாக பெண்கள் இப்படி துணிந்து தங்கள் அவலங்களை வெளியில் சொல்வதால், பலவித அவதூறுத் தாக்குதல்களுக்கும் இழிசொல்களுக்கும் நிறையவே ஆளாவார்கள் என்பதால் இது கிணற்றில் போட்ட கல்லாய் பல நேரங்களில் முங்கி விடுகிறது. இதுபோன்ற நேரத்தில் சின்மயி துணிந்து சொன்ன குற்றசாட்டு, ஏராளமானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.




ஆனால் இரு தரப்பிலும் யார் மீது தவறு என்று நமக்கு இன்னமும் பிடிபடவில்லை. திமுக என்ற பலம் பொருந்திய அஸ்திவாரத்தின் ஆதரவில் அன்றைய வைரமுத்துவின் சீண்டல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறதா அல்லது ஆண்டாள் விவகாரத்தில் இந்துத்துவா தலைகளின் கோபம் இன்னமும் தீராமல் அதை சின்மயி மூலமாக தங்களது ஆதங்கத்தை தீர்த்து கொள்ள முனையும் செயல்பாடுகள்தானா என்றும் தெரியவில்லை.
மொத்தத்தில் ஏதோ ஒன்று வெளியே வந்துள்ளது. அது பூனைக் குட்டியா அல்லது புஸ்வாணப் பெட்டியா என்பது மட்டுமே தெளிவாக வேண்டும்.

கருத்துகள் இல்லை: