வியாழன், 4 அக்டோபர், 2018

கருணாஸ் அதிரடியால் சபாநாயகர் தனபால் கடும் சிக்கலில் ...

சபாவுக்கு எதிராக கடிதம்: விதிகள் சொல்வதென்ன?
மின்னம்பலம்: தம்மை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்கக் கோரி திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தும் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் பேசியதாலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கருணாஸ் மீது மேலும் பல வழக்குகள் பாயும் நிலைமை உள்ளது.
இந்த நிலையில் கருணாஸ் உட்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 4 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலடியாக சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி சட்டசபை செயலாளரிடம் கருணாஸ் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் தகுதி நீக்கம் செய்யக் கோரி ஒரு எம்.எல்.ஏ. மனு கொடுத்துவிட்ட நிலையில் அந்த நிமிடம் முதல் பதவியில் சபாநாயகர் நீடிக்க முடியாது என்பது சட்டசபை விதி.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில் அத்தியாயம் 10- ”பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான தனித் தீர்மானம்” பற்றி விளக்குகிறது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
68. பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 179ஆவது பிரிவு (சி) உட்பிரிவின்படி தனித்தீர்மானம் கொடுக்க விரும்பும் உறுப்பினர் எழுத்து மூலமாக தீர்மான வரைவுடன் செயலாளருக்கு பதினான்கு நாட்கள் முன்னறிவிப்புடன் அதன் பிரதி ஒன்றை பேரவைத் தலைவருக்கும் கொடுக்க வேண்டும்.
எனினும், அவ்வாறு தனித்தீர்மானம் மொழிய இருக்கும் எண்ணம் பற்றி, செயலாளருக்கு குறைந்தது 14 நாட்கள் முன்னறிவிப்புக் கொடுக்கப் பெற்றாலன்றி, அதற்கான தனித் தீர்மானம் எதுவும் மொழியப் பெறுதல் கூடாது.
69. மேற்கண்ட 68ஆவது விதியின்படி முன்னறிவிப்பு வரப்பெற்றவுடன் அத்தனித் தீர்மானத்தை மொழிய பேரவையின் அனுமதி கோரும் தீர்மானம் ஒன்று உரிய உறுப்பினர் பெயரில், அரசமைப்புச் சட்டத்தின் 179ஆவது பிரிவின்படி தேவைப்படும் 14 நாட்கள் முன்னறிவிப்புக் காலம் முடிவடைந்தவுடன் கூட்டப்பெறும் முதல் கூட்ட நாளில் அலுவல் பட்டியலில் சேர்க்கப்பெற வேண்டும்.
இம்மாதிரியான தீர்மானம் வினா நேரம் முடிவுற்றதும் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பெற வேண்டும்.
70 (1) நிர்ணயிக்கப்பெற்ற நாளன்று, பேரவைக் கூட்டத்திற்கு தலைமைவகிப்பவர், அத்தனித் தீர்மானத்தைப் படித்துக் காட்டி, அதைக் கொண்டுவர இசைவளிக்கும் உறுப்பினர்களை அவரவர்கள் இடங்களில் எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். 35க்குக் குறையாத உறுப்பினர்கள் எழுந்து நின்று இசைவு அளிப்பின் பேரவைக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது என அறிவிக்க வேண்டும்.
35க்கும் குறைவான உறுப்பினர்கள் எழுந்து நின்றபின், அத்தீர்மானத்திற்கான முன்னறிவிப்பு கொடுத்த உறுப்பினருக்கு பேரவை அனுமதியை மறுத்து விட்டது எனத் தலைமை வகிப்பவர் தெரிவிக்க வேண்டும்.
(2) பேரவை அனுமதி அளித்துவிட்டால் அத்தனித் தீர்மானத்தின் மீதான விவாதம் உடனடியாகவோ அல்லது அனுமதித்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மேல் போகாத ஒரு நாளிலோ நடைபெறுமாறு பேரவை நாள் நிர்ணயிக்கலாம்.

71. விதிகள் 69,70 ஆகியவற்றில் குறிப்பிடப்பெற்றுள்ளவை கடைப்பிடிக்கப் பெறவில்லையெனில், பேரவை உறுப்பினர் ஒருவரால் கொண்டுவரப்பெறும் தீர்மானத்தின்மீது, 70-வது விதியின்கீழ் பேரவையின் நடவடிக்கைகளை நடத்தி வைப்பதற்காக பேரவைக்கு தலைமை தாங்க ஒருவரை பேரவை தேர்ந்தெடுக்கலாம்.
இவ்வாறு சட்டமன்றப் பேரவை விதிகள் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.
அதாவது கருணாஸ் கொடுத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் தற்போது சபாநாயகர் பதவியில் தனபால் இல்லை. அடுத்த சட்டசபை கூட்டப் படும் போது துணை சபாநாயகர் அல்லது வேறு ஒரு எம்.எல்.ஏ.தான் சபையை நடத்த வேண்டும். (இது பற்றி தெளிவான விளக்கம் சபை விதிகளில் இல்லை)
அப்போது முதல் நாளில் கேள்வி நேரம் முடிந்த உடனேயே இத்தீர்மானத்துக்கு எத்தனை பேர் ஆதரவு என்பதை பேரவையை நடத்தக் கூடிய நபர் அறிவிக்க வேண்டும். தற்போதைய நிலையில் கருணாஸின் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு அளித்தால் விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். இதுதான் சட்டசபை மரபு.
தமிழக சட்டசபையில் 1972ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1972ஆம் ஆண்டு திமுகவில் எம்ஜிஆர் கலகக் குரலை எழுப்பிய காலம். அப்போது சபாநாயகராக இருந்த மதியழகன் எம்.ஜிஆர். ஆதரவாளராக மாறியிருந்தார்.

1972 நவம்பர் 13இல் சட்டசபை கூடிய போது கருணாநிதி அமைச்சரவை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக எம்ஜிஆர் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த கருணாநிதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் என பதிலடி கொடுத்தார்.
அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த மதியழகனோ, கருணாநிதி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதையடுத்து சபாநாயகர் மதியழகனுக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு 185 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஆனால் சபாநாயகர் மதியழகனோ சபையை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து 1972 டிசம்பர் 2ஆம் தேதி கூடிய சட்டசபையில் ஆர்க்காடு வீராசாமி எழுந்து தாமும் 184 எம்.எல்.ஏக்களும் சபாநாயகர் மதியழகன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
அத்துடன், அரசியல் சாசனத்தின் 179ஆவது பிரிவின்படி சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தையே முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஆர்க்காடு வீராசாமி வலியுறுத்தினார். மேலும் அரசியல் சாசனத்தின் 181ஆவது பிரிவின் படி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் போது சபாநாயகர் சபைக்கு தலைமை தாங்கக் கூடாது என வலியுறுத்தினார் நெடுஞ்செழியன்.
ஆனால் மதியழகன் இதை நிராகரித்தார். சபாநாயகர் நாற்காலியில் இருந்தபடியே திமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றார் மதியழகன்.
திமுக அரசோ துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசனை மற்றொரு நாற்காலியில் அமர வைத்து தற்காலிக சபாநாயகராக்கி சபையை நடத்தியது. இது தமிழக சட்டசபையில் நடந்த வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் தனபால் தனது இருக்கையில் இருந்து விலகி தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அனுமதிப்பாரா என்பதே இப்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு!
மா.ச. மதிவாணன்

கருத்துகள் இல்லை: