வியாழன், 4 அக்டோபர், 2018

திருத்தப்பட்ட தீர்ப்பு.. ஐந்து செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்கள் கைது...

www.savukkuonline.com: இந்த ஆண்டின் தொடக்கத்தில் பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஐந்து செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது செப்டம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த மனு, இவர்கள் விடுதலை செய்யப்படக் கோரியதோடு, நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவிடம் இந்த வழக்கை ஒப்படைக்கப்படவும் கோரியது. ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சார்பில் கன்வில்கரால் எழுதப்பட்ட பெரும்பான்மைத் தீர்ப்பு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆனால், செப்டம்பர் 27 மாலை வரை, இந்த வழக்கில் ஒரு தீர்ப்பு மட்டுமே இருக்கும் என உணர்த்தியது. அது மாற்றுத் தீர்ப்பை வழங்கிய சந்திரசூட்டின் தீர்ப்பு.

உச்ச நீதிமன்றப் பதிவேடு ஒவ்வொரு நாளும், மறுநாள் ஒவ்வொரு அமர்விலும் விசாரிக்கப்பட உள்ள வழக்குகளின் பட்டியலைத் தனது இணையதளத்தில் வெளியிடும். ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்க உள்ள நீதிபதியின் பெயர், வழக்கு விசாரணை நேரம், தீர்ப்பை வழங்கும் நீதிபதிகள் ஆகிய விவரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.

பீமா கோரேகான் வழக்கு மனுவைப் பொறுத்தவரை, செப்டம்பர் 27இல் வெளியான பட்டியல் – இதற்கான ஸ்கிரீன்ஷாட் இருக்கிறது – ஒரே ஒரு தீர்ப்பை, அதாவது, நீதிபதி சந்திரசூட் வழங்க இருக்கும் தீர்ப்பை மட்டுமே, சுட்டிக்காட்டியது. விசாரணை அன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு மூலம் பதிவேடு, டாக்டர் டி.ஒய். சந்திரசூட்டால் வழங்கப்படும் தீர்ப்பு என்பதை, ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரால் வழங்கப்படும் என வாசிக்கவும் என தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
வழக்கப்படி பார்த்தால், உச்ச நீதிமன்றப் பதிவேடு, பீமா கோரேகான் வழக்கு பட்டியலில் சந்திரசூட் பெயருடன் கன்வில்கர் பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். உதாரணமாக, சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவு தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 28இல் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில், “தலைமை நீதிபதி, நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன், நீதிபதி. சந்திரசூட் மற்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஐந்தி நீதிபதி அமர்வால் விசாரிக்கப்பட்டு, நான்கு பேர் தீர்ப்பு வழங்கினர் (கன்வில்கர் ஐந்தாவது நீதிபதி). இந்த வழக்கில் யார் ஆதரவு அல்லது எதிர்ப்பு தீர்ப்பு வழங்குவார்கள் எனக் குறிப்பிடப்பவில்லை எனினும், நான்கு நீதிபதிகள் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. (மல்கோத்ரா தீர்ப்பு எதிராக அமைந்திருந்தது).
கன்வில்கர் தீர்ப்பு வழங்குவார் என தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றப் பதிவேடு, இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என விளக்கம் அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றப் பட்டியல் பதிவாளர் ராஜ்குமார் செள்பே, இந்த வழக்கு பற்றிப் பேச மறுத்துவிட்டார்.
மனுதாரர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கன்வில்கர் பெயர் விடுபட்டது தற்செயலானது அல்ல என்கிறார். “அரசுக்கு இது முக்கியமான வழக்கு,” என்று அவர் கூறினார். சந்திரசூட் தீர்ப்பை எழுதுகிறார் என அறிந்த அரசு அச்சமடைந்திருக்கலாம் என அவர் கூறினார்.

இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞரான அபிஷேக் மனு சங்வி, இந்த வழக்கில் தானும் ஒரு வழக்கறிஞர் என்பதால் இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். கூடுதல் அரசு வழக்கறிஞரான துஷார் மேத்தாவும், தான் ஆஜராகும் எந்த வழக்கு தொடர்பாகவும் விவாதிப்பதில்லை எனும் கொள்கை வைத்திருப்பதாகக் கூறிப் பேச மறுத்துவிட்டார்.
சந்திரசூட் தீர்ப்பின் ஒரு அம்சத்தை குறிப்பிட்டு, முதலில் இது மூன்று நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பாக இருந்திருக்கலாம் என்பதற்கான குறிப்பைச் சுட்டிக்காட்டுகிறார் பிரசாந்த் பூஷண். சந்திரசூட் தனது தீர்ப்பின் இறுதிப் பத்தியில்,“சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பதற்கான ஆணை தொடர்பாக இந்த மனுவை மூன்று நாட்களுக்கு பிறகு பட்டியலிட உத்தரவிடுகிறேன்” என எழுதினார். மாற்றுத் தீர்ப்பு வழங்கும் நீதிபதி, அதிலும் குறிப்பாக பெரும்பான்மை நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்த நிலையில், வழக்கை மீண்டும் பட்டியலிடச் சொல்வது புதிராக இருக்கிறது. “இது எதிர்ப்பாக இருந்திருந்தால் இத்தகைய தீர்ப்பை எழுதியிருக்க மாட்டார் என்கிறார் பூஷண். அதாவது, சந்திரசூட்டின் தீர்ப்பே இந்த வழக்கின் தீர்ப்பாக இருந்திருக்க வேண்டியது என்பதே இதன் பொருள்.
சந்திரசூட் கருத்து, எதிர்ப்புத் தீர்ப்புக்கே உரிய மற்ற அம்சங்களையும் பெற்றிருக்கிறது. முன்னதாகக் கடைசிப் பத்தியில், “சிறப்புப் புலனாய்வு குழு, துவக்கத்தில் மாதாந்தர அடிப்படையில் இந்த நீதிமன்றத்திற்கு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் மீண்டும், பெரும்பான்மைத் தீர்ப்பு நீதிமன்ற மேற்பார்வையிலான சிறப்புப் புலனாய்வுக்கு வழக்கை மாற்றும் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து, புனே காவல் துறை விசாரணையைத் தொடர அனுமதிக்கிறது. குறிப்பாக, சந்திரசூட் இந்த வரியின் கீழ், இது எதிர்ப்புத் தீர்ப்பு என்பதை உணர்த்தும் அடிக்குறிப்பைச் சேர்த்து, ஆனால் கடைசிப் பத்தியில் கொஞ்சம் தெளிவை அளிக்கிறார்: “நான் பேசுவதைப் போல, சிறுபான்மைக்காகப் பேசும்போது, சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை. இந்த நிலை உண்டானால், மேலும் வழிகாட்டுதலுக்கு இந்த நீதிமன்றத்தை அணுகலாம்.”
தன்னுடையது எதிர்ப்புத் தீர்ப்பு என்பதை உணத்தும் மேலும் சில குறிப்புகளை சந்திரசூட் வழங்குகிறார். இவற்றில் சில, இந்த எதிர்ப்பு முதலில் ஒருமித்த கருத்தாக இருந்திருக்கலாம் எனக் கருத வைப்பதற்கான காரணமாக பூஷண் கூறும் இன்னொரு காரணத்தை உணர்த்துகின்றன. கன்வில்கரின் பெரும்பான்மைத் தீர்ப்பு அவசரத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் புலனாய்வு அமைப்பு மாற்றம் அல்லது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வு உள்ளிட்ட குறிப்பிட்ட வகை விசாரணையைக் கோர முடியாது என்பதன் அடிப்படையில் பெரும்பான்மைத் தீர்ப்பு அமைந்துள்ளது. எனினும் இந்த உணர்த்தப் பயன்படுத்தப்பட்ட வழக்குகளின் பொருதத்தை சந்திரசூட் கேள்விக்குள்ளாக்கி, கன்வில்கர் சுட்டிக்காட்டிய நான்கு வழக்குகள் குறித்த அடிப்படையான சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சுட்டிக்காட்டப்பட்ட வழக்குகளில் 2 வழக்குகளில் – ஒரு வழக்கு கன்வில்கர் தீர்ப்பு வழங்கியது – உச்ச நீதிமன்றத்தால், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணைக்காக சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. புலனாய்வு மாற்றப்படுவதை நிராகரிக்கப் பயன்படுத்தப்பட்ட மற்ற இரண்டு வழக்குகளில், சந்திரசூட் கையில் உள்ள வழக்கிலிருந்து வேறுபடுத்தும் முக்கிய அம்சங்களைக் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வழக்கில் மனுதரார் அனாமதேயம் என்பதால் வழக்கு மாற்றக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் மனுதாரர் சுத்தமில்லாத கைகளுடன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பீமா கோரேகான் வழக்கில் மனுதாரர்கள் அனாமதேயமானவர்களும் இல்லை; மனுதாரர்கள் தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காகச் செயல்பட்டுள்ளனர் என்பதற்கான வாதமும் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பான்மைத் தீர்ப்பை குறிப்பாக சுட்டிக்காட்டமலே, சந்திரசூட்டின் எதிர்ப்புத் தீர்ப்பு, அந்தத் தீர்ப்பில் உள்ள முக்கியமான குறைகளை உணர்த்துகிறது. இந்த நான்கு வழக்குகளைச் சுட்டிக்காட்டிய பிறகு கன்வில்கர், “புலனாய்வு அதிகாரியால் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான தகவல்கள் மற்றும் விவரங்கள் மனுவில் இல்லை” என எழுதுகிறார். இருப்பினும் தனது எதிர்ப்பில் சந்திரசூட், மனுதாரர் அளிக்கும் இத்தகைய பல வாதங்களைக் குறிப்பிடுகிறார்; ஏற்றுக்கொள்கிறார். உதாரணமாக, மனுதாரர்கள், மோவோயிசத் தொடர்புக்கான ஆதாரமாக காவல் துறை வெளியிட்ட 13 சரிபார்க்கப்படாத கடிதங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். “கடிதங்கள் கையெழுத்திடப்படவில்லை. இமெயில் முகவரி அல்லது தலைப்பு போன்ற அடையாளம் காணும் விவரங்களைக் கொண்டிருக்கவில்லை” என சந்திரசூட் எழுதுகிறார்.
இந்த 13 கடிதங்களில் ஏழு, “காம்ரேட் பிரகாஷ்” என்பவரால் எழுதப்பட்டுள்ளன அல்லது அவருக்கு எழுதப்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். தில்லிப் பேராசிரியரான ஜி.என்.சாய்பாபாவின் குற்றம் உறுதி செய்யப்பட்ட வழக்கில் அவர் பிரகாஷ் எனும் புனைப்பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  சாய்பாபா, நாக்பூர் சிறையில் 2017 மார்ச் முதல் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்குப் பிறகு அவர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என உணர்த்துகின்றன என மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
கைதுகளுக்காகக் காவல் துறை புனேவிலிருந்து சாட்சியங்களைக் கொண்டுவந்தது தொடர்பான சிங்வியின் கருத்துக்களையும் சந்திரசூட் குறிப்பிடுகிறார். கைது, தேடல் மற்றும் பறிமுதல் தொடர்பான ஒட்டுமொத்த சட்ட மீறலாக இது அமைவதாக மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளும் எதிர்ப்புத் தீர்ப்பு நீதிபதி, “இரண்டு சாட்சிகள் புனே நகராட்சியின் ஊழியர்கள். அவர்கள் கைது செய்யக் காவல் துறைக் குழுவுடன் பயணம் செய்தனர் என்பது இந்த நீதிமன்றம் முன் மறுக்கப்படவில்லை” எனக் குறிப்பிடுகிறார். அவர் இறுதியாக இவ்வாறு குறிப்பிடுகிறார்:
இந்த விசாரணை தடை செய்யப்படக் கூடாது எனும் கருத்தை நான் கொண்டிருந்தாலும், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பதற்குப் பொருத்தமான வழக்கு இது. மகாராஷ்டிரா காவல் துறை இந்த வழக்கில் நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்துகொண்டுள்ளனரா எனும் சந்தேகத்தை எழுப்பும் சூழல்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. சுயேச்சையான விசாரணையைக் கோருவதற்கான போதுமான தகவல்கள் நீதிமன்றம் முன்வைக்கப்பட்டுள்ளன”.
கன்வில்கரின் தீர்ப்பு கடைசி நேரத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்க வைப்பதற்கான இன்னொரு குறிப்பு, புனே காவல் துறையின் விசாரணை நடவடிக்கை தொடர்பான மனுதாரர்களின் சந்தேகங்களை விரிவாக கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கான தயக்கம் அமைகிறது. விசாரணை நியாயமாக, பாரபட்சம் இல்லாமல் நடக்கிறதா என்பதைத் தீர்மானிக்க இத்தகைய பரிசீலனை மிகவும் அவசியம். “இவை உண்மையானவையா அல்லது ஜோடிக்கப்பட்டவையா என விசாரிக்க, ஆதாரங்களின் தகுதி அல்லது போதுமான தன்மையை ஆய்வு செய்வதற்கு இது நேரம் அல்ல என கன்வில்கர் குறிப்பிடுகிறார். இந்த விஷயம் குறித்து நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. காரணம், இந்த நீதிமன்றத்தில் இல்லாத, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் இணைந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரபட்சம் காட்ட இது வழி செய்யும்.
இதே வாசகத்தை, பின்னர் தீர்ப்பில் அவர் பயன்படுத்துகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் பாரபட்சத்தை உண்டாக்கும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் எழுப்பிய தகவல்கள் தொடர்பான விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனக் குறிப்பிடுகிறார்.  பெரும்பான்மைத் தீர்ப்பின் இறுதியில், ஐந்து செயற்பாட்டாளர்களும் வீட்டுக் காவலில் மேலும் நான்கு வாரங்கள் தொடவார்கள் என தெரிவிக்கும் முன் கன்வில்கர் இதே வாசகத்தைப் பயன்படுத்துகிறார்: “பொருத்தமான ஆவணங்கள் கொண்ட பதிவேடு மற்றும் மகாராஷ்டிரா காவல் துறையின் கேஸ் டைரியை நாங்கள் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். ஆனால், அவற்றிலிருந்து கிடைக்கும் தகவல் சார்ந்த நிலையை தவிர்த்துள்ளோம், காரணம் குற்றம்சாட்டப்பட்டவர் அல்லது அரசு தரப்புக்கு எதிராக எந்தப் பாரபட்சமும் ஏற்படக் கூடாது என்பதால்தான்”.
அர்ஷு ஜான், தி கேரவன் துணை ஆசிரியர். அவர் இதற்கு முன்னர் தில்லியில் கிரிமினல் சட்டத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
அர்ஷு ஜான்
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/governance/law/was-chandrachuds-dissent-in-the-bhima-koregaon-case-a-unanimous-verdict-until-the-previous-evening

கருத்துகள் இல்லை: