செவ்வாய், 2 அக்டோபர், 2018

சபரிமலையில் பெண்களுக்கு தனிவரிசை இல்லை - கேரள அரசு முடிவு

சபரிமலையில் பெண்களுக்கு தனிவரிசை இல்லை - கேரள அரசு முடிவு தினத்தந்தி :  சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்று கேரள அரசு முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் பல ஆண்டுகாலமாக அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. இந்த வயது பெண்கள் மாதவிடாய் நிலையை எதிர்கொள்வதால் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 28-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு அனுமதி அளித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நிர்வாகம் பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இந்த நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இதுபற்றி விவாதிக்க உயர் மட்டக்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் தேவசம் மந்திரி கடக்கம்பள்ளி சுரேந்திரனும் கலந்துகொண்டார். அப்போது சபரிமலை கோவிலில் பெண் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கென தனிவரிசை இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு பின்பு இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த மந்திரி சுரேந்திரன் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-

அய்யப்பன் கோவில் வளாகமான சந்நிதானத்தில் பெண்களுக்கு என்று தனிவரிசையை ஏற்படுத்தி தருவது சாத்தியமற்றது. அய்யப்பனை வழிபடுவோர் 8-10 மணி நேரம் வரை நீண்ட கியூ வரிசையில் தரிசனத்துக்காக காத்திருப்பார்கள். அதே நடைமுறையைத்தான் பெண் பக்தர்களும் பின்பற்றுவது அவசியம். எனவே நீண்ட வரிசையில் காத்திருக்க தயாராக இருப்பவர்கள் மட்டுமே கோவிலுக்கு வரலாம்.

பெண் பக்தர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் இதர பக்தர்களுடன் துணையுடன்தான் கோவிலுக்கு வருவார்கள். எனவே பெண்களை தனி வரிசைப்படுத்தினால், அவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனியே பிரிந்துவிடும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதேநேரம், பெண் பக்தர்களுக்காக தனியாக குளியல் அறைகள், கழிவறைகள் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். தரிசனம் முடிந்ததும், பக்தர்கள் வெளியேறாமல் சந்நிதானத்திலேயே வெகுநேரம் தங்கி விடுவதை தவிர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. பக்தர்கள் கூட்டம் கோவிலுக்குள் அலைமோதுவதை தடுக்க தரிசனம் முடித்த பக்தர்கள் வெளியேறுவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.

இந்த ஆண்டு பெருமளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தரிசன நேரம் மற்றும் பூஜை நாட்களை அதிகரிப்பது பற்றி கோவில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். திருப்பதி கோவிலில் இருப்பது போல் மின்னணு பதிவு முறை தரிசனம் மற்றும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை: