சனி, 6 அக்டோபர், 2018

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாறும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தினத்தந்தி : தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாகவும், அடுத்த 3 நாட்களில் அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சென்னை, தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாகவும், அடுத்த 3 நாட்களில் அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
 தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று முன்தினம்) பரவலாக மழை பெய்து இருக்கிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. வருகிற 8-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. அடுத்து வரும் 2 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்தநாள் புயலாகவும் வலுப்பெற்று ஓமன் கரையை நோக்கி நகரக்கூடும். இந்த வானிலை மாற்றம் நடந்து கொண்டிருக்கும் போது, தெற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 8-ந்தேதி (நாளை மறுநாள்) மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.

தென்மேற்கு பருவமழை வட இந்திய பகுதிகளில் இருந்து அடுத்து வரும் 3 நாட்களில் படிப்படியாக விலகி, வருகிற 8-ந்தேதி வடகிழக்கு பருவமழை தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது.

இந்த வானிலை மாற்றம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு குமரிக்கடல், லட்சத்தீவுகள், தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

எண்ணூரில் 13 செ.மீ., செங்கல்பட்டில் 12 செ.மீ., சோழவரத்தில் 9 செ.மீ., மரக்காணம், வானூர், பொன்னேரியில் தலா 8 செ.மீ., பழனி, திண்டிவனம், நாகர்கோவில், பாளையங்கோட்டை, மாதவரம், ஆணைக்காரன்சத்திரத்தில் தலா 7 செ.மீ., செங்கம், ராதாபுரம், கேளம்பாக்கம், மதுராந்தகம், ஜெயங்கொண்டம், சாத்தனூர் அணை, செஞ்சி, செங்குன்றம், புழல், சென்னை விமானநிலையம், ஊத்தங்கரை, பூந்தமல்லியில் தலா 6 செ.மீ., உத்திரமேரூர், பேச்சிப்பாறை, வடசென்னை, திருவண்ணாமலை, திருத்துறைப்பூண்டி, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், ஆரணி, குடவாசல், செங்கோட்டை, திருவாரூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், செம்பரம்பாக்கம், காரைக்காலில் தலா 5 செ.மீ. உள்பட அனேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது.


‘ரெட் அலர்ட்’ குறித்து பீதி அடைய வேண்டாம்


தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்பட்டது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

‘ரெட் அலர்ட்’ குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெறும் போது, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்காகத் தான் அந்த அறிவிப்பே தவிர, மொத்த தமிழகத்துக்கும் அந்த அறிவிப்பு இல்லை. சென்னையில் மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை.

கருத்துகள் இல்லை: