வெள்ளி, 5 அக்டோபர், 2018

சோபியா கனடா சென்றார் .. மேற்படிப்பை தொடர .. தமிழிசைமீது சோபியாவின் தந்தை நீதிமன்றத்தில்

கனடா பறந்தார் சோபியா; கோர்ட்டுக்குப் போனார் தந்தை!மின்னம்பலம்: தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் விமானப் பயணத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா நேற்று முன் தினம் (அக்டோபர் 3) நள்ளிரவு 1.50 மணிக்கு கனடாவுக்குப் புறப்பட்டார்.
அவர் கனடா புறப்பட்டுச் சென்ற இரு நாட்களில் அதாவது இன்று (அக்டோபர் 5) தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சோபியாவின் தந்தை தூத்துக்குடி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 3 சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பயணம் செய்தார். அவரது பின் இருக்கையில் அமர்ந்து சோபியா என்ற மாணவியும் பயணம் செய்தார். விமானத்திலேயே தமிழிசைக்கு அருகே சென்று, ‘பாசிச பாஜக அரசு ஒழிக’ என்று சோபியா முழக்கமிட, அதை எதிர்த்து தமிழிசை தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் அம்மாணவியிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் மாணவி சோபியா சிறையில் அடைக்கப்பட்டார். பின் மறுநாளே சோபியா நிபந்தனை இன்றி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சரியாக ஒரு மாதம் கழித்து அக்டோபர் 3 ஆம் தேதி நள்ளிரவு சென்னை விமான நிலையத்திலிருந்து சோபியா கனடாவுக்கு புறப்பட்டார். அவரை அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
சோபியாவின் பாஸ்போர்ட் முடக்கப்படும் ஆபத்து உள்ளது என்று அப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் அவ்வாறு சோபியாவின் பாஸ்போர்ட் முடக்கப்படவில்லை. அதனால் அவர் தனது படிப்பைத் தொடர வெளிநாடு சென்றுள்ளார்.
சோபியா கனடாவுக்குப் புறப்பட்ட இரண்டாவது நாளே அதாவது இன்று (அக்டோபர் 5) அவரது தந்தை சாமி தூத்துக்குடி ஜே.எம். 2 நீதிமன்றத்தில், ‘பாஜக தலைவர் தமிழிசை மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இது குறித்து சோபியாவின் வழக்கறிஞர் அதிசயகுமாரிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம்.
“செப்டம்பர் 3 ஆம் தேதி விமானத்திலும் தூத்துக்குடி விமான நிலையத்திலும் நடந்த சம்பவம் தொடர்பாக சோபியாவின் தந்தை தூத்துக்குடி, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தமிழிசை மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் புகார் கொடுத்திருந்தார். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதையடுத்து செப்டம்பர் 14 ஆம் தேதி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்திலும் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில்தான் எங்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து தமிழிசை மீது வழக்குப் பதிய உத்தரவிடுமாறு இன்று ஜே.எம். நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். இதை வரும் அக்டோபர் 10ஆம் தேதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்” என்று கூறினார் வழக்கறிஞர் அதிசயகுமார்

கருத்துகள் இல்லை: