செவ்வாய், 3 ஜூலை, 2018

ஸ்டெர்லைட் அரசாணையை எதிர்த்து வேதாந்தா மனு!

அரசாணையை எதிர்த்து வேதாந்தா மனு!மின்னம்பலம்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று (ஜூலை 3) மனுத் தாக்கல் செய்துள்ளது.
வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், . கடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. அன்றைய தினம் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் தமிழக அரசின் உத்தரவின் பேரில், ஸ்டெர்லைட் ஆலைக்கு மே 28 ஆம் தேதி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று கூறப்பட்டது
எனவே ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மே 31ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்தது.. அதில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டால், தங்கள் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரப்பட்டது.
இதற்கிடையே, ஆலை இயங்குவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலைத் தொடுத்த வழக்கு ஜூன் 5 ஆம் தேதி சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஆணையை எதிர்த்து மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் சுந்தரேசன் தெரிவித்திருந்தார்.
தற்போது ஸ்டெர்லைட் மூடப்பட்டதற்கான தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலைச் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருவதாகவும் ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வந்ததாகவும் ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலை வாய்ப்பு இழந்து தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: