புதன், 4 ஜூலை, 2018

சென்னை ரவுடி சுட்டு கொலை.. போலீஸ் மீது வாளால் வெட்டி அட்டகாசம் செய்த ....

சென்னை,வாலாட்டிய,ரவுடி,சுட்டுக்கொலைதினமலர் சென்னை : போலீஸ்காரரை அரிவாளால் கொடூரமாக வெட்டி, அட்டூழியம் செய்த ரவுடி ஆனந்தனை பிடிக்க சென்ற போலீசார் மீது அவன் தாக்குதல் நடத்தியதால், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டான். சென்னை,ராயப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறையைதொடர்பு கொண்டு, ராயப்பேட்டை, பி.எம். தர்கா அருகே, குடிபோதையில் ரவுடிகள் சிலர், பெண்களை கிண்டல் செய்வதாக புகார் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து, ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அங்கிருந்த தலைமைக் காவலர், ராஜவேலு, 35, தன் இருசக்கர வாகனத்தில், சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு, ரவுடிகள் ஆனந்தன், அரவிந்தன் மற்றும் அவனது கூட்டாளிகள், பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இதை, தலைமைக் காவலர் ராஜவேலு தட்டிக் கேட்டார்.


போதையில் இருந்த ஆனந்தனும் கூட்டாளிகளும், சீருடையில் இருந்த ராஜவேலுவை தாக்க முயன்றனர். காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல, ராஜவேலு முயன்றார்.
ஆத்திரமடைந்த ஆனந்தன் உட்பட ரவுடிகள், தாங்கள் வைத்திருந்த, கத்தி, அரிவாளால், ராஜவேலுவை சரமாரியாக, 16 இடங்களில் வெட்டினர்.

ரவுடிகளின் பிடியில் இருந்து, ராஜவேலு ரத்தம் வழிய தப்பி ஓடினார். ஆட்டோவில் ஏறி, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று, போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை அறிந்த,ராயப்பேட்டை போலீசார், போலீசை வெட்டிய கும்பலை பிடிக்க, இரண்டு தனிப்படைகளை அமைத்தனர்.

ரவுடி ஆனந்தனின் கூட்டாளிகளான அரவிந்தன் மற்றும் சிலர், பல்லவன் சாலை அடுத்துள்ள கல்லறை அருகே பதுங்கி இருப்பது தெரிந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், அரவிந்தன், 25, உட்பட, 23 - 26 வயதுடைய ஆறு பேரை சுற்றி வளைத்து, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தப்பி ஓடி, சோழிங்கநல்லுாரில் பதுங்கியிருந்த ரவுடி ஆனந்தன் உள்ளிட்ட நான்கு பேரை, கூடுதல் கமிஷனர், சாரங்கன் தலைமையிலான போலீசார், நேற்று இரவு கைது செய்தனர். போலீஸ்காரர் ராஜவேலுவை தாக்கும் போது, அவரின் வாக்கிடாக்கி கருவியை திருடி சென்றிருந்ததால், அது எங்கே உள்ளது என, அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

தரமணி பாலிடெக்னிக் அருகே புதைத்து வைத்திருப்பதாக, ரவுடிகள் தெரிவித்ததை அடுத்து, அவர்களை அங்கே, போலீஸ் அதிகாரிகள் அழைத்து சென்று தேடினர். அப்போது, ஆனந்தன், அந்த இடத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கண் இமைக்கும் நேரத்தில் எடுத்து, போலீஸ் எஸ்.ஐ., இளையராஜாவை வெட்டினான். உடனிருந்த போலீஸ் அதிகாரிகளையும், வெட்ட துணிந்தான். அப்போது போலீசார், தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், ஆனந்தன் படுகாயம் அடைந்தான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவன் இறந்தான். அவனது உடல், சென்ட்ரல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனந்தன், ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்தவன். இவன் மீது, கொலை, கொலை முயற்சி உட்பட, 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ஆறுதல் :

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜவேலுவை, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் அன்பு உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனந்தன் உள்ளிட்ட ரவுடிகள் குறித்து, ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயரங்கனுக்கு, நுண்ணறிவு போலீசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது அலட்சியத்தால், போலீஸ்காரரை ரவுடிகள் கொல்ல முயன்ற குற்றம் நிகழ்ந்தது.இதை அறிந்த, கமிஷனர், ஏ.கே.விஸ்வ நாதன், நேற்று இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளார்.

கருத்துகள் இல்லை: