புதன், 4 ஜூலை, 2018

ஒரிஜினல் "பொன்மகள் வந்தாள்" பாடலுக்கு நிகராக டுப்பிளிகேட் / ரீமிக்ஸ் பொன்மகள் வருமா?


எந்த காலத்திலும் கேட்போரை மகிழ்விக்க கூடிய சில பாடலகளில் இந்த பாடலுக்கு ஒரு இடம் இருக்கிறது. இதற்குள் ஒரு கதை இருக்கிறது. மர்லின் மன்றோவை அப்படியே கண் முன்னே கொண்டுவந்த விஜயலலிதாவின் அழகிய முகமும் .. வாள்வீச்சு போன்ற கண் அசைவும் இதுவரை தமிழ் திரை உலகம் கண்டிராத ஒரு மின்னலின் அழகு,
ஏழையின் வாழ்வில் ஒரு பொன்னுலகை பரிசாக கொண்டுவரும் பொன்மகள் அல்லவா ?
எப்படிப்பட்ட கவர்ச்சியும் குதுகலமும் துள்ளலும் இருக்கவேண்டும்?
அடடா இதற்கு மேல் எந்த தேவதையால் இந்த அழகை காட்டிவிட முடியும்?
அவரது ஒவ்வொரு அசைவும் எங்கிருந்தோ அந்த காட்சியின் ஆத்மாவை ஈஸ்ட்மன் கலரில் அள்ளி கொட்டுகிறதே!
ஒவ்வொரு பிரேமுக்குள்ளும் எவ்வளவு நுட்பமான கலையுணர்வு இருக்கிறது!
எவ்வளவு கடும் முயற்சி இருக்கிறது! அழகான கனவை உயிரோடு கண்ணுக்குள்ளும் காதுக்குள்ளும் கொண்டுவர ராமண்ணா ஆலங்குடி சோமு விஸ்வநாதன் ஹீராலால் விஜயலலிதா சிவாஜி போன்றவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்!
இப்படிப்பட்ட பாடல்களில் வழக்கமாக ஆண் பெண் பாத்திரங்கள் காதலில் அல்லது காமத்தில் வீழ்ந்து புரண்டு துள்ளி என்னென்னவோ பண்ணி விட்டு போய்விடுவார்கள். அவற்றில் பெரிதாக ஒரு செய்தியோ கதையோ இருக்காது.


ஆனால் இந்த பாடல் காட்டும் கனவு உலகம்தான் அந்த படத்தின் கதையே ... அதிலும் சிவாஜியின் பாத்திரம் வெறும் பொருள் ஆசை கொண்ட சராசரி மனிதன் . அந்த மனிதனின் கனவுக்குள் தெரிவது ஒரு அற்புத உலகம் .. உலகத்தின் அழகெல்லாம் ஒரு சேர விரியும் பொன் உலகம் .
இதற்கு நடனம் அமைத்தவர்கள் மிகவும் நுட்பமாக கதையை புரிந்து அதற்கேற்ற விதத்தில் முழுக்க முழுக்க விஜயலலிதாவின் ராஜாங்கமாகவே காட்டி இருக்கிறார்கள் .. நடன அமைப்பு அன்றய பம்பாய் ஹீராலால் . அவரும் மர்லின் மன்றோவின் முகசாயலில் விஜயலலிதாவை காட்டி இருக்கிறார். அபூர்வமாக அசலை விட நகல்கள் அழகாக இருக்கிறது.
பாடலின் நடனத்தில் எந்த கட்டத்திலும் சிவாஜியின் வழக்கான தழுவல் முகத்தை அப்படியே நாயகியின் மேல் ஓவராக உரசுவது போன்றவை இடம்பெறாமல் முதல் மரியாதை சிவாஜியை போல அண்டர் பிளே பண்ண வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த் காட்சி என்றும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது .
சிவாஜிக்கும் விஜயலலிதாவுக்கும் ஆடை வடிமைத்தவர்கள் சும்மா அழகாக செய்திருக்கிறார்கள் என்று கூறிவிடமுடியாது ... என்ன ஒரு வர்ண ஜாலம் காட்டி இருக்கிறார்கள்! வர்ண பொருத்தங்கள் அப்படியே அரங்க நிர்மாணத்தோடு ஒன்றி இருக்கிறது .. மேதைகள்!
இந்த படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசன் எழுத இந்த பாடல் மட்டும் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றி இருக்கிறார். பாடிய டி எம் சவுந்தர ராஜன் இந்த பாடலில் பாடலாக வாழ்ந்தே காட்டி உள்ளார்.இசையமைத்த எம் எஸ் விசுவநாதன் பற்றி நான் என்ன சொல்வது பல நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழப்போகும் இசையும் பாடல் வரிகளும் அல்லவா ?

கருத்துகள் இல்லை: