வெள்ளி, 18 மே, 2018

தென்னகத்தைப் பழிவாங்குமா பாஜக?

ஜெ.ஜெயரஞ்சன்<: br="">   சிறப்புக் கட்டுரை: தென்னகத்தைப் பழிவாங்குமா பாஜக?மின்னம்பலம்:  <: br="">கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது பாஜகவின் டெல்லி தலைமையகத்தில் நடந்த விழாவில் உரையாற்றிய தலைமையமைச்சர், “பிரித்தாளும் அரசியலுக்குக் கிடைத்த சம்மட்டி அடிதான் பாஜகவின் கர்நாடக வெற்றி” எனக் கூறியுள்ளார். மோடி ‘பிரித்தாளும்’ அரசியல் எது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக, வடக்கு - தெற்கு என்ற பகுப்பாய்வு பிரிவினை எனக் கருதுகிறார் மோடி. இரண்டாவதாக, இந்தி மொழி. இவை இரண்டுமே ஒரு பிரச்சினையாக கர்நாடக மக்களால் கருதப்படாததால்தான் பாஜக இந்த வெற்றியைப் பெற்றதாகவும், வடக்கு - தெற்கு என்று பிரச்சினையைக் கிளப்பிய காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 40 - 45 டிகிரி தகிக்கும் வெயிலில் தன்னைத் தனக்குத் தெரிந்த மொழியில் பேசுமாறு மக்கள் பணித்ததாகவும் தங்கள் பேராதரவைத் தனக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளார் மோடி.
வடக்கு - தெற்கு என்ற விவாதம் தற்போது பேசுபொருளானதற்குக் காரணமே மோடி தலைமையிலான அரசு 15ஆவது நிதிக் குழுவுக்கு அளித்த பணி வரன்முறைதானே? அதில்தானே 1971 மக்கள்தொகைக்குப் பதிலாக 2011 மக்கள்தொகையைக் கணக்கில் கொள்ளுமாறு கூறப்பட்டது? இந்த அடிப்படை மாற்றத்தால் சந்திக்கப்போகும் இழப்புகளைக் கணக்கில்கொண்டு வெகுகாலமாகவே மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுத்துவரும் திமுக, அதன் செயல் தலைவர் வாயிலாக இந்தியாவின் 10 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் அனுப்பியது. அதுதான் மோடியின் முடிவுக்கு எதிராக எழுந்த முதல் குரல்....  
 <: br="">எது பிரித்தாளும் அரசியல்? எது சம்மட்டி அடி?


அதைத் தொடர்ந்து ஆந்திரத்து சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவின் சந்திரசேகர ராவ், கர்நாடகத்தின் சித்தராமையா, கேரளத்தின் பினராயி விஜயன் எனப் பல குரல்கள் எழுந்தன. கேரளம் தென்னக நிதியமைச்சர்களின் கூட்டத்தை முதலில் கூட்டியது. அதன் இரண்டாவது கூட்டம் ஆந்திரத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கேரள நிதியமைச்சர் பேராசிரியர் தாமஸ் ஐசக் நிதியமைச்சர்களுக்கு ஒரு திறந்த மடலை எழுதினார்.
இக்குரல்களுக்கு மோடியும் ஜேட்லியும் என்ன எதிர்வினையாற்றினார்கள்? எல்லாம் முறையாக நடைபெறுகிறது; இவர்கள் தேவையில்லாமல் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள் என்றனர். இவர்களுக்கு ஒத்து ஊத ஒரு ‘நிபுணர் குழு’ பட்டாளம் வேறு. அவர்கள் கூறியது என்னவென்றால், நிதியைப் பகிர்ந்தளிப்பது சூத்திரத்தின் வாயிலாகத்தான்; இதில் வடக்கு - தெற்கெல்லாம் இல்லை என்றார்கள். தென்மாநிலங்கள் கூக்குரலிட்டதே இந்தச் சூத்திரம் குறித்துதானே? அந்தச் சூத்திரத்தில் மக்கள்தொகைதான் தீர்மானிக்கும் ஒரு காரணி. அதனால்தான் 1971 மக்கள்தொகையைக் கணக்கில்கொள்ள வேண்டும் என்ற ஓர் உடன்பாடே ஏற்பட்டது. அது தொடர்ந்தது. இப்போது உடன்பாட்டுக்கு எதிராக ஏன் இதனை அறிமுகப்படுத்துகிறீர்கள் என்பதுதானே இவர்களது குரல். இதற்குத் தகுந்த பதிலளிக்காமல் எல்லாம் சூத்திரப்படிதான் நடக்கிறது என அதன் பின்னால் ஒளிந்துகொள்வது ஏன்?
இப்போது, கர்நாடகத் தேர்தல் முடிவுக்கும் இக்குரலுக்கும் முடிச்சுப்போட்டு, அந்தக் குரலுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பது போல் மோடி பேசியிருப்பது மோடித்தனம்தானே?

தேர்தலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?
முதலில் மோடி இதுகுறித்து கர்நாடகத் தேர்தல் கூட்டங்களில் எங்குமே பேசவில்லை. இதை முன்வைத்தா அத்தேர்தல் நடந்தது? எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாமா கூடாதா என்ற ஒரு வாக்கெடுப்பு நடந்து, அதன் முடிவில் ‘வெளியேறு’ அதிக வாக்குகள் பெற்றதால் பிரிட்டன் வெளியேறுகிறது. அது போன்ற வாக்கெடுப்பா கர்நாடகத் தேர்தல்? “கர்நாடகம் வளர்ந்த தென்மாநிலம். வளராத வடமாநிலங்களுக்காக உங்கள் பங்கைக் குறைத்து வடமாநிலங்களுக்கு அதிக நிதி அளிக்க ஆதரவு தாருங்கள்” என மோடியோ, அமித் ஷாவோ வாக்கு கேட்டார்களா? அதற்கு மக்கள் ஆதரவளித்தார்களா? இல்லையே? பின் எப்படி இந்த முடிவைத் தனக்கும் தான் கொண்ட கொள்கைக்கும் தனது முடிவுக்கும் சாதகமாக மோடி திருப்பிக்கொள்கிறார்?
இரண்டாவதாக, பாஜக என்ன வெற்றி பெற்றுள்ளது? அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கைப்பற்றியும் பெரும்பான்மை கிடைக்காமல் ஆளுநர் அதிகாரத்தின் வாயிலாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக இதனோடு எப்படி முடிச்சுப் போடுகிறது? மோடியும் அமித் ஷாவும் இந்தக் கொள்கையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்தானே எனக் கூறினால் அவர்கள் பெற்ற வாக்குகள் வெறும் 36 விழுக்காடு மட்டுமே. அவர்களுக்கு எதிரான வாக்குகள் 64 விழுக்காடு.
ஆக, ‘வடக்கு - தெற்கு’ என்ற ‘பிரித்தாளும்’ குரலை மோடி கூறுவது போல் காங்கிரஸ் கட்சி முன்வைக்கவில்லை. தென்மாநிலம் ஒன்றில் ஆட்சியிலிருந்த காங்கிரஸின் சித்தராமையா முன்வைத்தார். அவ்வளவே. மற்ற கட்சிகள் எழுப்பிய, எழுப்பும் கேள்விகள் அப்படியேதான் உள்ளன.
இரண்டாவதாக, இவர்கள் கூறுவது போல் இப்பிரச்சினை மக்கள் முன் வைக்கப்படவுமில்லை; மக்கள் இவர்களுக்குப் பெரும்பான்மை ஆதரவை அளிக்கவுமில்லை.
இது ஒருபுறமிருக்க, கர்நாடகத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன் 15ஆவது நிதிக் குழுவின் பணி வரன்முறையை ஆராய்ந்து அறிக்கையும் திருத்தமும் அளிக்க உயர்மட்டக் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது ஏன்? இப்போது கர்நாடகத்தில் வெற்றி பெற்றுவிட்டதால் அக்குழுவை செயலிழக்கச் செய்துவிடுவார்களா அல்லது வரன்முறை சரிதான் எனக் கூறவைப்பார்களா? தென்மாநிலங்கள் (கர்நாடகம், தமிழகம் தவிர்த்து) எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

மோடியின் ‘இந்தி’யும் தேர்தல் வெற்றியும்
மோடி வெற்றிக் களிப்பில் கூறிய மற்றுமொரு சங்கதி ‘தான் இந்தியில் பேசியது’ குறித்து. அதை மக்கள் வரவேற்றார்களாம். இக்கூற்று உண்மையா? டைம்ஸ் ஆஃப் இந்தியா (17.05.2018) ஏடு இரண்டு செய்திகளை வெளியிட்டுள்ளது. முதலாவதாக, காங்கிரஸும் மஜதவும் இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால், அக்கூட்டணி 151 இடங்களைப் பெற்றிருக்கும்; பாஜகவுக்கு 69 இடங்களே கிடைத்திருக்கும். மோடிக்கு மக்கள் அளித்த ஏகோபித்த ஆதரவு இன்னும் துல்லியமாகத் தெரியவருவது, மோடி பரப்புரையின்போது 21 தொகுதிகளில் பேசினார்; அவற்றில் பாஜக வென்றது 11 மட்டுமே. அவர் மிகச் சிறந்த இந்தி மொழிப் பேச்சாளராக இருக்கலாம். மக்களும் அதை (வடக்கே) ரசிக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் அவர் நம்புவது போலவும், பரப்புவது போலவும் எல்லாம் ‘சூறாவளி’ வீசவில்லை. மோடி மந்திரம் நினைத்த அளவு பலிக்கவில்லை. எனவே ‘இந்தி’ ஒரு சிக்கலே இல்லை எனக் கூறுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை.
பாசிசத்தில் மிகப் பெரிய சிக்கலே அவர்கள் திரும்பத் திரும்பக் கூறும் பொய்யை அவர்களே நம்பத் தொடங்குவதுதான். பாஜகவும் அப்படித்தான் நம்பும். அதன் விளைவாக, 15ஆவது நிதிக் குழுவின் பணி வரன்முறையை மாற்றாமலே முன்செல்ல எத்தனிப்பர். அதே போலத்தான் இந்தித் திணிப்பும். அதனால்தான் தென்மாநிலங்கள் மிகுந்த விழிப்புடனும் போராட்டக் குணத்துடனும் இப்போது இருக்க வேண்டியது அவசியமாகும்.
கட்டுரையாளர் குறிப்பு:



ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.
மின்னஞ்சல் முகவரி: feedback@minnambalam.com

கருத்துகள் இல்லை: