செவ்வாய், 15 மே, 2018

காவிரி மேலாண்மை வாரியம் இனி கனவுதான்? அதிமுக ஆட்சியாளர்கள் இதை வரவேற்கிறார்களாம்..


-Sivasankaran Saravanan : காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசு
இன்று தாக்கல் செய்துள்ள வரைவுத் திட்டம் என்பது உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பையே மொக்கை பண்ணுவதுபோல இருக்கிறது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என எந்த இடத்திலுமே சொல்லவில்லை! சரி பெயரில் என்ன இருக்கிறது நமக்கு தேவை தீர்வு தானே என்று பார்த்தால் அதிலும் ஏகப்பட்ட குழப்பங்களை ஒன்றிய அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்துகிறது!
ஒரு இடத்தில் அமைப்பு, ஒரு இடத்தில் திட்டம், இன்னொரு இடத்தில் கமிட்டி என பல பெயர்களில் இது குறிப்பிடப்படுகிறது!
இரண்டு மாநிலங்களுக்குள் பிரச்சினை, இனி பேசிப் பிரயோஜனம் இல்லை என்று ஆன பிறகுதான் கோர்ட் வரைக்கும் போய் இனி தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போல தன்னாட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி நதிநீர் பங்கீட்டை அது உறுதி செய்யவேண்டும் என சொல்லப்பட்டது!
ஆனால் மத்திய அரசோ நான்கு மாநிலங்களின் ஒத்துழைப்பைப் பெற்று நீர் பகிர்ந்தளிக்கப்படும் என்கிறது! ஒத்துழைப்பு பெற முடியவில்லை என்பதால் தானே பிரச்சினை கோர்ட்டுக்கு போனது? அதிலும் இந்த அதிகாரம் மத்திய அரசின் கையில் இருக்கும் என்கிறது! மத்திய அரசின் கையில் இருக்கும் அதிகாரத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பலன் அல்லது என்ன நியாயம் கிடைக்கும்?
மத்திய அரசு என சொன்னாலும் அதை ஆட்சி அதிகாரம் செய்யப்போவதென்னவோ காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் தான்! அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்கு வங்கி இல்லை என்பதால் வழக்கம்போல கர்நாடக அரசியலை கட்டுப்படுத்த முடியாமல் தான் போகும்!
ஆறு வாரத்தில் வாரியம் அமைக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையே ஒரு மாநில தேர்தலுக்காக கிடப்பில் போட்டு காலத்தை வீணடித்தது யார்? பாகிஸ்தான் அரசா, சீனா அரசா? இதே இந்திய ஒன்றிய அரசு தான்! பிறகு அதனிடமே இறுதி அதிகாரம் என்பது திருடன் கையிலேயே பெட்டிச்சாவியை தருவது போலத்தான்!

ஒருவருக்கு பசி சாப்பாடு வாங்கி கொடுங்க என்றால் சாப்பாடு வாங்கித்தரவேண்டும்! முதல்ல சாப்பாடா ஜூஸா எனக்கேட்கவேண்டியது, இல்ல சாப்பாடு தான் என்றால் சாப்பாடு தான் தரனும் னு இல்லையே ப்ரட் கூட தரலாம் இல்ல? ஆனா ப்ரட் கடை இல்லை, சாயங்காலம் தான் பேக்கரி திறக்கும், வேணும்னா சமோசா கூட திங்கலாம்... சமோசா கடைக்காரர் தருவாரான்னு தெரியல, தரலைன்னா என்கிட்ட சொல்லுங்க நான் டீ வாங்கித்தர்றேன் இப்படி கேட்டுக்கொண்டே போவதற்கு என்ன அர்த்தம்? ஏங்க எது சாப்ட்டா என்னங்க வயிறு நிறைஞ்சா போதாதா என்று கேட்கலாம்! ஆனால் இதன் உண்மையான அர்த்தம் பசித்தவன் வயிற்றுக்கு எதுவுமே போகக்கூடாது என்பதுதான்!
இது முற்றிலும் உச்சநீதிமன்ற மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக, தமிழ்நாடு மாநில நலனுக்கு எதிரான ஒரு காரியம்! ஆனால் தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்களோ இதை வரவேற்கிறோம் என வெட்கமின்றி பேசுகிறார்கள்! இந்த கொடுமையை எங்கு போய் முறையிடுவது?!
-Sivasankaran Saravanan

கருத்துகள் இல்லை: