ஞாயிறு, 13 மே, 2018

தேனீ .பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையே திருமாவளவன் சமரச பேச்சு

தினமணி : இரு தரப்பினர் மோதல் விவகாரம்: பொம்மிநாயக்கன்பட்டியில் திருமாவளவன் சமரச பேச்சு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருதரப்பு மோதலால் பாதிக்கப்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியில், சனிக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமரச முயற்சியில் ஈடுபட்டார்.
பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பள்ளி வாசல் தெருவில் மூதாட்டி சடலத்தை கொண்டு செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக இருதரப்பையும் சேர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர்.
அதன்பின் கடந்த மே 5 -ஆம் தேதி மீண்டும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது 10- க்கு மேற்பட்ட வீடுகள், கடைகள், கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு தீவைக்கப்பட்டது.


மோதலில் ஈடுபட்ட 20 -க்குமேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். 50-க்கு மேற்பட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சனிக்கிழமை காலை பொம்மிநாயக்கன்பட்டியில் ஆதிதிராவிடர்கள் மக்கள் வசிக்கும் தெருவுக்குச் சென்றார். அப்பகுதி மக்களிடம் பிரச்னை குறித்து விசாரித்தார். அதன் பின் பள்ளிவாசலுக்கு சென்று அப்பகுதி முஸ்லிம் பிரமுகர்களிடம் கலவரம் குறித்து விசாரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள தலித் மற்றும் இஸ்லாமியர்கள் என இருதரப்பினரையும் சந்தித்து பேசினேன். இருதரப்பும் சுமூகமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவந்தவுடன் இருதரப்பையும் அழைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை: