செவ்வாய், 15 மே, 2018

எடப்பாடி பழனிசாமியிடம் விலை போன திமுக எடப்பாடி வேட்பாளர் முருகேசன்

டிஜிட்டல் திண்ணை:  திமுக வேட்பாளர்களை முடிவு செய்யும் எடப்பாடி
எடப்பாடி திமுக வேட்பாளர் முருகேசன்  
மின்னம்பலம் : “கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி அமோகமாக வெற்றி பெற்றார். எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகேசனுக்கு  மூன்றாவது இடம்தான் கிடைத்தது. இந்தக் கதை இப்போ எதுக்கு என கேட்பது புரிகிறது. இது தொடர்பான ஒரு பஞ்சாயத்து இப்போது ஸ்டாலினுக்குப் போயிருக்கிறது. அவர் தனக்கு நெருக்கமான ஒருவரை விசாரிக்கச் சொல்ல, சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடந்திருக்கிறது. ஸ்டாலினுக்குப் போன புகார் என்னவென்று விசாரித்தோம்.
எடப்பாடி தொகுதிக்குக் கடந்த தேர்தலில் திமுகவில் யார் போட்டியிட வேண்டும் என முடிவு செய்ததே எடப்பாடி பழனிசாமிதான். யாரை விலைக்கு வாங்க முடியும் எனத் தெளிவாகக் கணக்குப் போட்டு, அப்படி ஒரு நபரைச் சென்னைக்கு அனுப்பி ஆந்திரா கிளப்பில் வைத்து சீட் வாங்குவதற்காக மட்டும் 50 லட்சத்தைக் கொடுத்தார். அந்த நபருக்குத்தான் கட்சியும் சீட் கொடுத்தது. சீட் வாங்கிக்கொண்டு வந்தவரிடம், கட்சித் தலைமையிலிருந்து ஒதுக்கப்பட்ட பணம் அப்படியே வேட்பாளர் வீட்டில் கொண்டுபோய் ஒப்படைக்கப்பட்டது.
எந்தத் தொகுதியிலும் பணத்தை வேட்பாளர் கையில் கொடுக்கவில்லை. ஆனால் எடப்பாடி தொகுதியில் மட்டும் இது நடந்தது.
தலைமை கொடுத்த பணத்தை வேட்பாளர் வெளியே எடுக்கவே இல்லை. இதற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவரும் உடந்தை. திமுக தலைமை கொடுத்த பணத்தைப் போல இரண்டு மடங்கு பணத்தைச் சத்தமே இல்லாமல் எடப்பாடி கொண்டுவந்து வேட்பாளர் வீட்டில் கொட்டினார். அவரும் அதற்கு மேல் வெளியே வரவே இல்லை. கட்சிதான் முக்கியம் என நினைத்த யாரையும் தலைமை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எடப்பாடியில் இன்று திமுக வேட்பாளராக நின்றவரின் இமாலய வளர்ச்சியைப் பார்த்தாலே தெரியும்.
இது ஒருபுறம் இருக்க, அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் ஜெயித்தே ஆக வேண்டும் என்பதால் முன்பு போட்டியிட்ட அந்த திமுக வேட்பாளரை வெகுவாக கவனித்துவருகிறார்கள் ஆளும் கட்சியினர். 'போன தடவை 50 கொடுத்து வாங்கினோம். இனி 1 அல்லது 2 கொடுத்து வாங்குவோம். எவ்வளவு கொடுத்தாலும் அது நமக்கு லாபம்தான். ஜெயிச்சு வந்து 5 வருசத்துல சம்பாதிக்கிறதை ஒரே மாசத்துல சம்பாதிச்சுட்டு செட்டில் ஆகிடணும்' என்று பழைய வேட்பாளர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் பேசிய ஆடியோ பதிவும் கிடைத்திருக்கிறது. அதையும் தலைமைக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த வேட்பாளரோ இது என் வாய்ஸ் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தில் கவுண்டர்களை திமுக புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டும் ஏற்கனவே உண்டு. எடப்பாடி தொகுதியில் பாமகவும் போட்டியிட்டது. திமுகவில் சீட் கொடுக்கப்பட்டவரும் வன்னியர். இதனால் வன்னியர் வாக்குகள் பிரிந்து, கவுண்டர் வாக்குகள் அப்படியே அதிமுகவுக்குப் போயின. திமுகவின் தோல்விக்கு இதுவும் காரணம். எடப்பாடியில் யாருக்கு சீட் கொடுத்தாலும் அவர்களை விலை கொடுத்து வாங்க இப்போதிருந்தே தயாராக இருக்கிறது அதிமுக. அதனால் எடப்பாடி மற்றும் சங்ககிரி தொகுதிக்கு மட்டும் விருப்ப மனு வாங்காமல் கடைசி நேரத்தில் கட்சியே வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என புகாரில் சொல்லியிருக்கிறார்கள்.
புகாரை விசாரித்த டீம், வந்த தகவல் அத்தனையும் உண்மை என ஸ்டாலினிடம் அப்டேட் செய்திருக்கிறது. எடப்பாடியை எப்படி சமாளிப்பது என இப்போதே ஸ்டாலினை யோசிக்க வைத்திருக்கிறார்கள்" என்று முடிந்தது மெசேஜ்.
அந்த மெசேஜை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது.
“ரஜினி மன்றத்தின் கோவை நிர்வாகி ஒருவரிடம் காந்திய மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் கடந்த வாரத்தில் பேசியிருக்கிறார். உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் நிர்வாகி சில அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதற்கு ரஜினி மன்ற நிர்வாகியோ, 'உறுப்பினர் சேர்க்க என்ன வழியோ எல்லாம் பண்ணிட்டுதான் இருக்கோம். நீங்க சொல்லணும்னு ஏதாவது சொல்லாதீங்க. என்ன செய்யணும்னு எங்களுக்கும் தெரியும்' எனச் சொல்லிவிட்டாராம். இந்தத் தகவல் தமிழருவி மணியன் கவனத்துக்குப் போயிருக்கிறது.
நொந்துபோன மணியன், ரஜினியிடம் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார். 'எங்க காந்திய மக்கள் இயக்கத்தில் இருக்கிறவங்க மனசுல பட்டதை சொல்லிடுவாங்க. பிடிச்சா கேட்கச் சொல்லுங்க. இல்லைன்னா விட்டுடச் சொல்லுங்க. யாரையும் புண்படுத்த வேண்டாம். எல்லோரும் என்னை நம்பி வந்தவங்க' என்று சொன்னாராம்.
'தெரியாமல் நடந்துடுச்சு, நான் பார்த்துக்குறேன்' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் ரஜினி. உடனடியாக ராஜு மகாலிங்கத்தையும் சுதாகரையும் வரவழைத்து, 'நான் வேறு தமிழருவி வேறு இல்லை. எனக்குக் கொடுக்கும் மரியாதையை அவருக்கும் கொடுக்கணும். அவங்க இயக்கத்தில் இருந்து யார் வந்தாலும் மரியாதையோடு நடத்தணும். மரியாதையோடு பேசணும். இதை உடனே எல்லா மாவட்ட நிர்வாகிகளுக்கும் சொல்லுங்க' என்று சொன்னாராம். மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவு போயிருக்கிறது’’

கருத்துகள் இல்லை: