வெள்ளி, 18 மே, 2018

கர்நாடகா: எம்.எல்.ஏக்கள் கொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

கர்நாடகா: எம்.எல்.ஏக்கள் விலை போகாமல் தடுக்க கொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்தினத்தந்தி :கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்.எல்.ஏ.க்கள், பேருந்து மூலம் கொச்சி மற்றும் ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பெங்களூரு, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாரதீய ஜனதாவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜூக்கு ஒரு இடமும் கிடைத்தன. 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். தேர்தலுக்கு பிறகு காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்தன. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவுக்கு, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார்.சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் 15 நாட்கள் அவகாசம் வழங்கி ‘கெடு’ விதித்து இருக்கிறார்.


கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 221. (ஜனதாதளம் (எஸ்) தலைவரான குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்).இதன் அடிப்படையில் பார்த்தால், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே பாரதீய ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இன்னும் 7 பேரின் ஆதரவுதான் அந்த கட்சிக்கு தேவைப்படுகிறது. இந்த ஆதரவை எளிதில் திரட்டிவிட முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.

தென் மாநிலங்களை பொறுத்தமட்டில், கர்நாடகத்தில் தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால், அதை தக்கவைத்துக்கொள்வதில் பாரதீய ஜனதா மேலிடம் மிகவும் உறுதியாக இருக்கிறது. மெஜாரிட்டிக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டி ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக அக்கட்சி மேலிடம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

இதற்காக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்காக வலை வீசப்படுகிறது.காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி பாரதீய ஜனதா இழுப்பதை தடுக்க அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு பெங்களூரு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அங்கிருந்து உம்னாபாத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகர் பட்டீல் ரகசியமாக வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடியூரப்பா முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து, அந்த சொகுசு விடுதிக்கு போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, சொகுசு விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் விலை போகாமல் இருக்க, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், பேருந்து மூலம் கொச்சி மற்றும் ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

கருத்துகள் இல்லை: