வியாழன், 17 மே, 2018

ஜெமினியின் மறுபக்கத்தை கிளறிவிட்ட .... நடிகையர் திலகம் என்ற மகாநதி

விகடன் -ஆ.சாந்தி கணேஷ் :
சாவித்திரி அம்மாவின் பயோபிக் `நடிகையர்
திலகம்’ படம் பார்த்து விட்டீர்களா டாக்டர்?’ நடிகையர் திலகம் பார்த்துவிட்டு வந்த உணர்ச்சிப் பெருக்கில் இப்படிக் கேட்டுத்தான் ஜெமினி கணேசனின் மகளும் புகழ்பெற்ற மருத்துவருமான கமலா செல்வராஜுக்கு போன் செய்தேன்.
“என் அம்மாவை எப்படி காண்பிச்சிருக்காங்க” என்கிற கேள்வியைத்தான் முதலில் கேட்டார். பிறகு “நான் இப்ப வெக்கேஷன்ல இருக்கேன். போற வழியில மதுரையில படம் பார்த்துட்டு ஈவ்னிங் போல கூப்பிடுறேன்” என்றார். அவர் சொன்ன நேரத்தில் நானே கூப்பிட்டேன். காரில் சென்றுகொண்டே என்னிடம் பேசினார்.

தன் உடன்பிறந்தவர்களுடன் கமலா செல்வராஜ்“சாவித்திரியைக் கொண்டாடி ஒரு படம் எடுத்திருக்காங்க. அவங்களோட நடிப்புக்கு மக்கள்கிட்ட நல்ல மரியாதை இருந்தது. அதை படத்துல அப்படியே காட்டியிருக்காங்க. அவங்க ரோலுக்கு கீர்த்தி சுரேஷ் கன கச்சிதமா பொருந்திப் போயிருக்காங்க. இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே இது ஒரு ஃபிக்‌ஷன்னுதான் போடுறாங்க. அதனால இந்தப் படத்துல வந்ததெல்லாம் எந்தளவுக்கு உண்மை, உண்மையில்லைன்னு படம் பார்க்கிற யாருக்கும் தெரியப் போறதில்லை” என்றவரின் குரல் ஏகத்துக்கும் அதிர்ச்சி, வருத்தம் எனப் பல கலவைகளால் நிரம்பியிருந்தது.

சாவித்திரி “இந்தப் படத்தில் அப்பா எந்த வேலையும் செய்யாத மாதிரியும் அவரை ஒரு எடுபிடி மாதிரியும் காட்டியிருக்காங்க. அந்த நேரத்தில் அப்பாவும் ஒரு பிஸி ஆர்ட்டிஸ்ட்ங்க. இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தானே. அப்புறம் ஏன் அப்படி காட்சி வெச்சாங்க?  அப்பாவின் முதல் காதலே சாவித்திரி மேல வந்ததா காட்டியிருக்காங்க. ஆனா அதுக்கு முன்னாடி அப்பா எங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணியிருந்தார். அவர் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா. அப்போ எங்க அம்மா மேல எந்தவித காதலும் இல்லாமதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?
அதே மாதிரி, அப்பாதான் சாவித்திரிக்கு மதுப்பழக்கத்தை கத்துக்கொடுத்தார்னு படத்துல காட்டியிருக்கிறதைப் பார்த்துட்டு அதிர்ந்துட்டேன். சாவித்திரியை குடிக்கப் பழக்குற `குடிகாரர்’ மாதிரியில்ல இந்தப் படம் அவரை சித்திரிக்குது. எங்கப்பா டிரிங்க் பண்ணுவார். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அவர் சோஷியல் டிரிங்கர். பார்ட்டி, ஃபங்ஷன்னா மட்டும்தான் மது அருந்துவார். அவரைக் குடிகாரர் ரேஞ்சுக்கு காட்டினதை என்னால ஒத்துக்கவே முடியலை. இந்தப் படத்துல, அப்பாவை ரசிகர்கள் வெள்ளித்திரையில் ஏத்துக்கலைங்கிற மாதிரி காட்டியிருக்காங்க. அப்படி ஏத்துக்காமலா அவருக்குக் `காதல் மன்னன்’னு பட்டம் எல்லாம் கொடுத்துக் கொண்டாடினாங்க சொல்லுங்க…
கார் மேல ஏறி நின்னு அப்பா சாவித்திரிக்கு காதல் புரொபோஸ் செய்ற மாதிரி காட்சி அமைச்சிருப்பாங்க. அதை என்னால நம்ப முடியல. ஆனா சினிமான்னா மிகைப்படுத்தல் என்பது இயல்புதானே. அதனால அதைப் பத்தி நான் பெருசா கவலைப்படலை.
`பிராப்தம்’ படம் எடுக்கிறப்ப, இவ்வளவு பெரிய நடிகை கஷ்டப்பட்டு படம் எடுக்கிறாங்களேனு யாராவது அதுல ஃப்ரீயா நடிச்சு கொடுத்தாங்களா என்ன… அப்பா அந்தப் படத்தை எடுக்காதேன்னு அவங்ககிட்ட சொல்றதை படத்துல காண்பிச்சிருப்பாங்க. பெரிய பெரிய நடிகர்களுடன் நடிச்சு பேர் வாங்கின அவங்களை, அந்த நடிகர்கள் எல்லாம் உதவி செஞ்சு காப்பாத்தியிருக்கலாம் இல்லியா… ஆனா அப்படி யாரும் செய்யலைங்கிறதை படம் அப்பட்டமா காண்பிக்குது. அப்பாதான் அவங்களைக் காப்பாற்ற முயன்றார்.
எங்கம்மாவைப் பொறுத்தவரைக்கும் அவங்களோட உச்சகட்ட பொறுமையை படத்துல அப்படியே காட்டியிருப்பாங்க. அப்பா விஷயத்துல அம்மா மனசு ரொம்பவே புண்பட்டிருந்ததை நாங்க கண்கூடா பார்த்தோம், உணர்ந்தோம். ஒருதடவை நானும் அக்காவும், `அப்பாவை நீங்க டைவர்ஸ் பண்ணியிருக்கணும்மா’னு எங்க அம்மாகிட்ட சொல்லியிருக்கோம். `நாலு பொம்பளப்புள்ளைகளை வெச்சுக்கிட்டு உங்க அப்பாவைப் பிரிஞ்சிருந்தா, நீங்க எல்லாம் இப்படி ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாகியிருக்க முடியுமா?’னு அம்மா கேட்டாங்க. ஒண்ணு மட்டும் நிச்சயம்ங்க… அப்பா வாழ்க்கையில வந்த அத்தனை பொண்ணுங்களை தாண்டியும், அவரை அம்மா அப்படி நேசிச்சாங்க.
`நடிகையர் திலகம்’ படத்தைத் தாண்டி, சாவித்திரியைப் பத்தி சொல்லணும்னா அவங்களோட நல்ல பக்கமும் எனக்குத் தெரியும். கெட்ட பக்கமும் எனக்குத் தெரியும். நாங்க மணிப்பால்ல படிக்கிறப்ப எங்களைப் பார்க்க அப்பாவோட பலமுறை அவங்க வந்திருக்காங்க. எனக்கும் அக்காவுக்கும் ஃப்ரின்ஜ் கட் ஹேர்ஸ்டைல் பண்ணி விட்டிருக்காங்க. ஆனா இன்னைக்கும் என் மனசுல அவர்கள் செஞ்ச அந்தச் சம்பவத்தை நினைச்சா” என்றவர் சட்டென அமைதியாகிப்போனார். `டாக்டர்’ என்று நான் அழைத்த பிறகே நினைவுகளிலிருந்து மீண்டவராக `யெஸ் மா’ என்றபடி மறுபடியும் பேச ஆரம்பித்தார்
“அப்பாவைப் பத்தி சொல்லணும்னா… அவர் எந்தக் குடும்பத்தையும் கலைக்கவில்லை. கல்யாணமான எந்தப் பொண்ணு மனசையும் அவர் கெடுக்கலை. அவர் நேசிச்ச, அவரை நேசித்த பெண்களை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவ்வளவுதான்.

சாவித்திரி செஞ்ச ஒரு சம்பவம் என் மனசுல இன்னும் வடு மாதிரி படிஞ்சிருக்குன்னு சொன்னேன்ல… அது என்ன தெரியுமா? `பிராப்தம்’ படம் எடுக்கிற முடிவுல தீவிரமா இருந்தாங்க அவங்க. அப்பா அதைத் தடுத்தார். அவங்க வீட்டுக்கு நானும் அப்பாவும் போயிருந்தோம், அந்தப் படத்தை எடுக்க வேண்டாம்னு சொல்றதுக்காக. கூர்க்கா, அவங்க வீட்டு நாயை விட்டு எங்களைத் துரத்தி அடிச்சாங்க அந்தம்மா. பயத்துல கேட் ஏறி குதிச்சு நானும் அப்பாவும் வெளிய வந்தோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் அப்பா அவங்க வீட்டுக்குப் போகவே இல்லை” என்றபடி வலியுடன் பேசி முடித்தார் டாக்டர் கமலா செல்வராஜ்.
vikatan.com

கருத்துகள் இல்லை: