ஞாயிறு, 13 மே, 2018

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டை விட்டு வெளியேற தடை

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டை விட்டு வெளியேற தடை
தினத்தந்தி : மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், மலேசியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நஜிப் ரசாக்கின் ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்தக் கூட்டணியின் 60 ஆண்டு கால ஆட்சியை 92 வயது மகாதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி முடிவுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து அங்கு புதிய பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார்.
அதைத் தொடர்ந்து அதிரடி திருப்பமாக ஊழல் மற்றும் செக்ஸ் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிமுக்கு பொது மன்னிப்பு வழங்க மன்னர் முன் வந்து உள்ளார்.
இந்தநிலையில், அரசுக்கு சொந்தமான நிதி 700 மில்லியன் டாலரை (சுமார் ரூ.4,690 கோடி) முறைகேடாக தன் கணக்கில் சேர்த்து விட்டார் என்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான பிடி இறுகுகிறது. வெற்றி பெற்ற உடனே பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவோம் என்று கூறிய மகாதீர் முகமது அரசு, நஜிப் ரசாக் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.


இது பற்றி நஜிப் ரசாக் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில் அவர், “நானும் என் குடும்பத்தினரும் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என தங்களுக்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதாக குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்” என்று குறிப்பிட்டு உள்ளார். எதற்காக இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

அதே நேரத்தில் இந்த உத்தர வின்படி நடந்து கொள்ளப்போவதாக தெரிவித்து உள்ளார். மேலும் தேர்தல் தோல்வியை தொடர்ந்து தான் ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணி தலைவர் பதவியில் இருந்தும், ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை: