செவ்வாய், 15 மே, 2018

ஸ்டாலின் எடியுரப்பாவை அவசரப்பட்டு வாழ்த்தி விட்டாரா?

Sowmian Vaidyanathan : செயல் தலைவர் தளபதியார் அவர்கள் சட்டைல மேல்
பட்டனை சரியா போடல..., ரெண்டு கையையும் சரியா மடிச்சி விடல, தலைல கோணலா வாக்கு எடுத்திருக்கார், காப்பி கூட ஒழுங்கா குடிக்க தெரியாம ஒரு சொட்டு சட்டைல பட்டு அந்த கரை தெரியுது....
இப்படியெல்லாம் அவரையே உத்து உத்துப் பார்த்து குறை சொல்லி தினம் ஸ்டேடஸ் போட எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டத்தையே இணையத்தில் உலவ விட்டிருப்பது தெரிந்த கதை தான்..! அதே வேளையை இப்போ சில திமுக காரங்களே செய்ய ஆரம்பிச்சிட்டாய்ங்களோன்னு சந்தேகம் வருகின்ற அளவிற்கு... இங்கே இணையத்தில் சில திமுகவினரின் செயல்பாடுகள் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது..!
கர்நாடகா தேர்தல் முடிவுகளில் காலைல இருந்த டிரெண்டு உடனடியாக மாறி.... பாஜகவுக்கும் காங்கிரசுக்குமான சீட்டு வித்தியாசம் 30க்கும் மேல் எகிறி விட்ட நிலையில்.... பாஜகவும் 100க்கு மேல் முன்னனி மற்றும் வென்ற நிலையில்... அனைத்து ஊடகங்களும் எடியூரப்பா தான் அடுத்த முதல்வர் என்று பரைசாற்றிக்கொண்டிருந்த நிலையில்.... பாஜகவினரோ இந்தியா முழுவதும் வெடி வெடித்து, லட்டு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில்.... 
காங்கிரஸ் காரர்களும் மற்ற எதிர்க்கட்சியினரும் வோட்டிங் மிஷினில் தங்களுக்கான சந்தேகங்களையும், மற்ற மற்ற விஷயங்களையும், காங்கிரஸின் தோல்விக்கான காரணங்களாக விவாதங்களில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில்..., இணையதளங்களில் கூட சங்கிகள் ஆர்ப்பரித்தும், திராவிடர்களும் சிறுபான்மையினரும் விரக்தியான பதிவுகளை போட்டுக்கொண்டிருந்த நிலையிலும்...
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாகவும், அடுத்து ஆட்சிக்கு வரக்கூடிய முழு தகுதியுடனும், தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கரையுடனும் இருக்கக் கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆற்றல் மிகு செயல் தலைவர்....
பாஜகவின் கடந்த மூன்றாண்டுகால சட்டமன்ற பொது தேர்தல்களின் வரலாறுகளின் அடிப்படையில் பாஜகவே ஆட்சியமைக்கும் என்ற நிலையில்....
நமக்கு காவிரி பிரச்சினையில் முக்கிய எதிரியாக இருக்கக் கூடிய மாநிலத்தின் புதிய முதல்வராக எந்த நபர் அல்லது எந்த கட்சி வந்தால் என்ன? அவர்களுக்கு சொல்ல வேண்டிய வாழ்த்தினை முன்கூட்டியே சம்பிரதாயமாகச் சொல்லிவிட்டு.... நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல, சகோதரத்துவத்தை விரும்புகின்ற சக அண்டை மாநிலம் தான் என்பதை சொல்லாமல் சொல்லி.... வெறும் வாழ்த்தினை மட்டும் சொல்லாமல், கூடவே, எங்களுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக வழங்குங்கள் என்ற கோரிக்கையோடு தனது வாழ்த்தினை பதிவு செய்திருந்தார்...!
இதில் என்ன தவறு இருக்கின்றது?!
அவர் பாஜக என்ற கட்சிக்கு வாழ்த்துச் சொன்னாரா? இல்லவே இல்லை, அவர் கர்நாடக மாநில முதல்வராக வருபவருக்கு வாழ்த்துச் சொன்னார். எப்படியாவது தமிழகத்திற்கு உடனடியாக காவிரி நீர் வந்தே ஆக வேண்டும் என்ற ஆவலும், அக்கறையும் தான் அவரது வாழ்த்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
கட்டக் கடைசி நேரத்தில் ஒரு டிவிஸ்ட்.... வெறும் 40 தொகுதிகளே வைத்திருக்கும் குமாரசாமிக்கு 80 தொகுதி வைத்திருக்கும் காங்கிரஸ் ஆதரவு தந்து பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க ஒரு அதீத முயற்சி மேற்கொள்ளப்படுகிறது... அதற்குக் கூட இப்பொழுது முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது....
அதெல்லாம் அந்த மாநில அரசியல் பஞ்சாயத்துக்கள். அதன் மூலம் வேறு யார் முதல்வரானாலும், அதே வாழ்த்தினைத்தான் தளபதியார் மீண்டும் வழங்குவார். யார் வந்தால் என்ன? எங்களுக்கு காவிரி தண்ணீரை உடனடியாக கொடுங்கள் என்ற கோரிக்கையோடு அவரது வாழ்த்து இருக்கும்...!
இதையெல்லாம் ஒரு குற்றச்சாட்டாக தூக்கிக் கொண்டு... அதிலும் திமுகவினர் சிலரே விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏதோ நமக்கு சம்பந்தமே இல்லாத வட மாநிலத்தில் தேர்தல் நடந்து அதில் இப்படி முழு முடிவுகளும் வருவதற்கு முன்பாக தளபதியார் வாழ்த்துச் சொல்லியிருந்தால் கூட அதை விமர்சிப்பதற்கு சிறிதளவு இடம் இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால்....
நமது வாழ்வாதாரப் பிரச்சினை ஒன்று, இந்த தேர்தலுக்காகவே ஒரு மாதகாலமாக் இழுத்தடித்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் முடிவு வந்து விட்ட நாளில், எவனோ ஒருவனுக்கு வாழ்த்தினைச் சொல்லி, எங்க தண்ணீரை உடனடியாக கொடுங்கடா என்ற அளவில் ஒரு பொருப்புள்ள கட்சித் தலைவராக தளபதியார் கொடுத்த அந்த வாழ்த்துச் செய்தி, நிச்சயமாக பாராட்டுக்குறிய ஒன்றே...!
தளபதியார் ஒன்றும், தமிழகத்தின் துணை முதல்வர் போன்று கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல், கர்நாடகாவில் வென்றதற்காக அந்த கட்சி தலைவருக்கும் பிரதமருக்கும், தென்னகத்தில் காலூன்றியதற்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பவில்லை. அது தான் நியாயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு அறிக்கை.

கருத்துகள் இல்லை: