திங்கள், 14 மே, 2018

ராமதாஸ் : காவிரி.. தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது

தினகரன் :சென்னை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள
காவிரி வரைவுத் திட்டம் தமிழக நலன்களுக்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ள யோசனை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலம் தான்  தங்களின் தீர்ப்பை செயல்படுத்த முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியிருந்த நிலையில், அதற்கு மாறாக மேற்பார்வை வாரியம் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என சாடியுள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுத் திட்டம் தமிழக மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றும் வேலை என குறிப்பிட்டுள்ளார்.


இவ்விகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்றால், மத்திய அரசின் வரைவுத் திட்டம் சரியா, தவறா? என்பதை ஆராய்வது எங்களின் வேலையல்ல; அதை செயல்படுத்த வைப்பது தான் எங்களின் வேலை என கூறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு அமைக்கப்போவதாக கூறியிருக்கும் மேற்பார்வை வாரியம் எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பு. அந்த அமைப்பால் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது. மாறாக மேற்பார்வை மட்டுமே செய்யும். அப்படியானால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை யார் தான் செயல்படுத்துவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2016-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி சிக்கலை தீர்க்க மேலாண்மை வாரியம் தான் சரியான அமைப்பு என்று கூறியிருந்தது. ஆனால், இப்போது கர்நாடகத்தில் கட்டுப்பாட்டில் தொடர்ந்து அணைகளை வைத்துக் கொள்ள வகை செய்யும் அமைப்பை மத்திய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை: