வெள்ளி, 25 மே, 2018

திருச்சி சமயபுரம் யானைக்கு மதம் பிடித்தது: பாகனை அடித்துக்கொன்றது

பாகன் ராஜேந்திரன்
tamilthehindu :திருச்சி சமயபுரம் கோவில் முன் பக்தர்கள் கூட்டம், யானை மாசினியுடன் கொல்லப்பட்ட பாகன் ராஜேந்திரன்(பழையபடம்) கோவிலுக்குள் பாகன் உடலுடன் யானை படம்: ஞானவேல் முருகன் ;
சமயபுரம் கோயில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததில் பாகனைக்
கொன்றது. யானைக்கு மதம் பிடிப்பதற்கு சற்று நேரம் முன்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அமைச்சர் துரைக்கண்ணு உயிர் பிழைத்தார்.
சமயபுரம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் வருவது உண்டு. 9 வயதாகும் மாசினி என்றழைக்கப்படும் பெண் யானை, கடந்த 2006-ம் ஆண்டு ஆறுமாத குட்டியாக தாயைப் பிரிந்த நிலையில் திருச்சி வனப்பகுதியில் மாசினி கோயில் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அதன் பெயர் மாசினி என்று அழைக்கப்பட்டது.

காலையிலிருந்து கோயில் யானை வித்தியாசமான நிலையில் நடந்துள்ளது. இதைப் பார்த்து பாகன் கஜேந்திரன் சந்தேகமடைந்துள்ளார். இன்று முக்கியமான நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர், அமைச்சர் துரைக்கண்ணுவும் கோயிலுக்கு வந்தார். அவர் வந்துசென்ற சிறிது நேரத்தில் பாகன் யானையின் அருகில் சென்றார். அப்போது யானை அவரை திடீரென தூக்கி வீசியது. பாகனை மிதித்துக் கொன்றது.
யானைக்கு மதம் பிடித்ததை அறிந்த பக்தர்கள், அலறி அடித்து ஓடினர். அப்போது மேலும் சில பக்தர்களை யானை துதிக்கையால் தள்ளி விட்டதில் 9-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். இதனால், கோயில் பிரகாரத்தை விட்டு பக்தர்கள் வெளியே ஓடி வந்தனர். உடனடியாக கோயில் ஊழியர்கள் கதவைச் சாத்தியதால், கோயிலுக்குள்ளேயே யானை சிக்கிக்கொண்டது. அது வெளியே வரமுடியாமல் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தது.  பாகனின் உயிரற்ற உடல் பக்கத்தில் வந்து நின்று கொண்டது. இதனால் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். யானையின் அருகே யாரும் நெருங்க முடியவில்லை. யானை மாசினியை கட்டுக்குள் கொண்டுவர மற்ற பாகன்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. யானைக்கு மதம் பிடித்த சம்பவம் கேள்விப்பட்டு, பொதுமக்கள் கோயில் முன் கூடினர். அவர்களை போலீஸார் கட்டுப்படுத்தி கோயிலுக்குள் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
மதம் பிடித்த யானையைக் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினரும், போலீஸாரும் பெரிய கயிறு மற்றும் சங்கிலியைக் கொண்டு யானையின் காலக்ை கட்டிவிட எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்ததை அடுத்து, கும்கி யானை மூலம் யானையைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று யோசித்தனர். இதையடுத்து கும்கி யானை ஜெயா வரவழைக்கப்பட்டது.
கோயிலுக்குள் கும்கி யானையைக் கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. யானை பிரகாரத்தையே சுற்றி வந்ததால், யானையைக் கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டது. யானைக்கு மதம் பிடித்தாலும், பாகனை மட்டும் கொன்ற யானை பின்னர் யாரையும் எதுவும் செய்யாமல் கோயிலில் உள்ள கடைகளைக் கூட எதுவும் செய்யாமல் கோபத்துடன் சுற்றி சுற்றி மட்டுமே வந்தது. பாகன் உடலைக் காலால் திரும்பத் திரும்ப மிதித்து தூக்கி எறிந்தது.
இந்நிலையில், கோயிலுக்குள் புகுந்த வனத்துறையினர், மற்ற யானை பாகன்கள் உதவியுடன் அதைச் சுற்றி வளைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் காலில் சங்கிலியால் பிணைத்து பிரகாரத் தூணில் பிணைத்தனர்.
பின்னர் யானை அமைதி அடைந்தது. பின்னர் பாகனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. யானைக்கு மதம் பிடித்ததால் கோயில் வளாகம், அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பக்தர்கள் பரபரப்புடன் சுற்றி வந்தனர்

கருத்துகள் இல்லை: