வியாழன், 24 மே, 2018

வேதாந்தாவை காப்பாற்றிய பிஜேபி. Savukku

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியதில்லை என அந்த நிறுவனம் கூறியது.
பொதுமக்களை ஆலோசிக்காமல் ஸ்மெல்டரை விரிவாக்கம் செய்து உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க மத்திய அரசிடமிருந்து ஒரு சட்டப்பூர்வமான சுற்றுச் சூழல் அனுமதியைப் பெற்றுள்ளதாக வேதாந்தா நிறுவனம் கூறுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆவணங்களின்படி பிஜேபி அரசாங்கம் 2014 டிசம்பரில் பசுமை விதிமுறைகளுக்கு  புதிய விளக்கமளித்தது. இது தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஆலை போன்ற ஆலைகளை அத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை கலந்தாலோசிக்காமல் கட்டி உற்பத்தியை தொடங்க வழிவகுத்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளில் இந்த விதிவிலக்கு பல்வேறு தொழில்சாலைகளின் வேண்டுகோளின்படி செய்யப்பட்டது என்பதை “பிஸினஸ் ஸ்டாண்டர்டு“ பத்திரிகையால் ஆய்வு செய்யப்பட்ட பல்வேறு அரசு மற்றும் நீதிமன்ற ஆவணவங்கள் காட்டுகின்றன. இந்த விதிகளுக்கு விதிவிலக்கு அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சரின் உத்தரவின்பேரில் உருவாக்கப்பட்டது. ஒரு ‘விளக்கம்’ என கூறப்பட்டது.  வேதாந்தா மற்றும் பலரையும், தூத்துக்குடியில் உள்ளதுபோல, அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்காமல் தங்களது ஆலைகளை கட்டியெழுப்ப இந்த விளக்கம் இனிவரும் மாதங்களில் உதவும். பிஜேபி அரசாங்கத்தின் இந்த விளக்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. ஏனெனில், தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவினுடையது போன்ற திட்டங்களுக்கு முதலில் பொதுமக்களின் ஆலோசனைகளை பெறவேண்டும் என காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இருந்த சுற்றுச்சூழல் அமைச்சகம் 2014ம் ஆண்டு வலியுறுத்தியிருந்தது.
வேதாந்தாவுக்கு ஆதரவான பிஜேபி அரசாங்கத்தின் டிசம்பர் மாத உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2016ம் ஆண்டில் கண்டறிந்தது. இந்த விஷயத்தில் தகவல்களை வெளியிட மறுத்த  சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிவரும் என மிரட்டும் அளவுக்கு தேசிய பசுமைத் தீரப்பாயம் போக வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு பிஜேபி அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக எடுத்த முடிவுகளின் விபரங்களை வெளியிட மறுத்தது. அரசாங்கத்தின் டிசம்பர் 2014 ஆணைகளை திரும்பப் பெறுவது பல தொழில் திட்டங்களை கடுமையாக பாதிக்கும் என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறுதியில், அரசாங்கத்தின் டிசம்பர் 2014 உத்தரவுகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல்களின் பேரில், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், தொழிற் பூங்காக்களில் உள்ள திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். அதற்கு பிறகே சுற்றுச்சூழல் அனுமதி என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால், அப்போதே, பொதுமக்களின் கருத்துகேட்கும் கூட்டம் நடத்த தேவையின்றி, தூத்துக்குடியில் தனது விரிவாக்க திட்டத்திற்கான பசுமை அனுமதியின் நீட்டிப்பை வேதாந்தா பெற்றிருந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 2016ம் ஆண்டின் உத்தரவு மற்றும் இந்த வழக்கின்போது வெளிச்சத்துக்கு வந்த உண்மைகளை மேற்கோள்காட்டி, விரிவாக்கத்தை நிறுத்துங்கள் என்றும், முதலில் மக்களை கலந்தாலோசியுங்கள் என்றும் வேதாந்தாவுக்கு உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பசுமை அனுமதிக்கான வழக்கமான கட்டுப்பாடுகள்
கிட்டத்தட்ட பெரிய அளவிலான அனைத்து தொழிற்துறை திட்டங்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்து ஒரு கட்டாயமான சுற்றுச்சூழல் அனுமதி (தடையில்லாச் சான்று) தேவை. திட்ட இடத்தின் அருகே வசிக்கும் மக்களையும், சுற்றுப்புற சூழலையும் இத் தொழிற்சாலை எவ்வாறு பாதிக்கும் என திட்ட மேம்பாட்டாளர் முதலில் ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும். பின்னர், மாநில அரசின் மேற்பார்வையில் அந்த அறிக்கையை பொதுமக்களுக்கு கலந்தாலோசிக்க தர வேண்டும். இத்திட்டத்திற்கு அனுமதி தரலாமா அல்லது வேண்டாமா என முடிவு செய்ய, இந்த ஆலோசனைகளின் முடிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆகியவற்றை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கலந்துரையாடலின்போது இந்த திட்டத்தை மக்கள் தடுக்க முடியாது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் அம் மக்களின் கவலைகளை அந்த நிறுவனமும், மத்திய அரசும் தீர்க்க வேண்டும்.
2006ம் ஆண்டுக்கு முந்தைய சுற்றுச்சூழல் அனுமதி விதிமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழில்களுக்கு விதிவிலக்கு அளித்தது.  அது என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய தொழில்கள் சில, ஏற்கனவே சுற்றுச் சூழல் அனுமதி பெற்ற தொழிற் பூங்காக்களில் தொடங்கப்பட்டால், தனியாக அனுமதி தர வேண்டியதில்லை என்று அந்த விதி இருந்தது.
2014 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பதவி காலத்தில் இந்த விதிவிலக்கு பற்றி அரசாங்கத்திடம் கேள்வி  எழுப்பப்பட்டது. அதாவது,  2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்னர் அந்த தொழிற் பூங்கா நிறுவப்பட்டிருந்தால் அந்த தொழிற் பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலிருந்தால் என்ன செய்வது ? அத்தகைய சந்தர்ப்பங்களில், அந்நிறுவனங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை கலந்தாலோசிக்க வேண்டியதில்லையா  என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
மே 16, 2014 அன்று UPA அரசாங்கத்தின்கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெளிவுபடுத்தியது. தொழிற் பூங்காக்களுக்கு உள்ளே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைகள், ஒரு சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்று பெற்றிருந்தால் மட்டுமே, பொது ஆலோசனைகளை  கடந்து செல்ல முடியும். தொழில்துறை பூங்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் 2006 விதிமுறைகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படவில்லையெனில், அதன் உள்ளே வரும் தொழில்கள் அவசியமாக மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் அளிக்கப்படும் லாஜிக் என்னவெனில், ஒட்டுமொத்த தொழில் வளாகம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை மதிப்பீடு செய்திருந்தால், அப்போது அந்த தொழில் வளாகத்தில் அமைந்துள்ள தனித் தனி அலகுகள் பொது ஆலோசனைகளை உள்ளடக்கிய விரிவான அனுமதி வழக்கமான நடைமுறைகளை கையாள வேண்டியதில்லை.
ஆனால் மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் “எளிமையாக தொழில் தொடங்குதல்“ (Ease of Doing Business) என்ற வாக்குறுதியை அளித்து பதவியேற்றது.
இந்த பிரச்சினையில் பல தொழில் நிறுவனங்களிடமிருந்து அது கோரிக்கைகளை பெற்றது என ஆவணங்கள் காட்டுகின்றன. டிசம்பர் 10, 2014 அன்று, தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அப்போதைய சுற்றுச் சூழல் அமைச்சர் ஒப்புதல் அளித்த அலுவலக குறிப்பாணை (மெமோராண்டம்) வடிவத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டது. குறிப்பிடப்பட்ட தொழில்துறை மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்றாலும், மக்களை ஆலோசனை செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த விளக்கம் தெரிவித்தது.
நடைமுறையில், சட்டபூர்வமாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை, ஒரு சாதாரண விதியாக தளர்த்தி, அச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்படி, “விளக்கம்” என்று சட்டத்தையே மாற்றியது பிஜேபி அரசு.
இது வேதாந்தா உட்பட நாடெங்கிலும் உள்ள பல தொழில்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.  பின்னர், இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த மாற்றப்பட்ட கொள்கையை  பிஜேபி அரசாங்கம் பதவிக்கு வந்த ஓர் ஆண்டுக்குள் செய்த முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்றாக முன்னிலைப் படுத்தியது.
வேதாந்தா எப்படி பயனடைந்தது
ஒரிஜினலாக, வேதாந்தாவின் காப்பர் மெல்டர் எனப்படும் செப்பு உருக்காலை தூத்துக்குடியில் “சிப்காட்“ எனப்படும் தொழிற் பேட்டையின் உள்ளே கட்டப்பட்டது, 2006-ம் ஆண்டின்  சுற்றுச்சூழல் அனுமதி விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே இந்த தொழில் வளாகம் வந்தது. அதன் காப்பர் ஸ்மெல்டர் ஆலையை விரிவுபடுத்த வேதாந்தா முதலில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை 2099ம் ஆண்டு பெற்றது. அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழான சுற்றுச்சூழல் அமைச்சகம், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த தேவையின்றி, அனுமதி வழங்கியது.


இந்த அனுமதி ஐந்து ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது. அந்த அனுமதி காலாவதியானவுடன், ஒரு நீட்டிப்பை பெற வேதாந்தா 2013ம் ஆண்டு மீண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சென்றது. 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் (இன்னும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி) சுற்றுச்சூழல் அமைச்சகம், வேதாந்தாவின் விரிவாக்கத் திட்டங்கள் போன்றவை மக்கள் ஆலோசனை பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் 2014 டிசம்பரில், பிஜேபி அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது, மார்ச் 2015 இல் சுற்றுச்சூழல் அமைச்சகம் டிசம்பர் 2018 வரை வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. பல்வேறு வகையான தொழிற் பூங்காங்களின் திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பதன் அவசியம் குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது வேதாந்தாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை அந்த அமைச்சகம் வழங்கியது. இது கட்டுமானத்தை தொடங்க அந்த நிறுவனத்தை அனுமதித்தது.
விரிவாக்கத்திற்கான கட்டுமானப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் 100 நாட்களுக்கு சென்றன. பின்னர் மே 25-ம் தேதி, மாவட்ட நிர்வாகம் குற்றவிசாரணை முறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடையுத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர் என்றும்,  இது வன்முறைச் சம்பவங்களுக்கும், அதைத் தொடர்ந்து மாநில போலீஸாரால் 11 பேர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் வழிவகுத்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.
– நிதின் சேத்தி
நன்றி தி பிசினெஸ் ஸ்டான்டர்ட்

கருத்துகள் இல்லை: