வெள்ளி, 25 மே, 2018

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி.. 117 எம்எல்ஏக்கள்

மாலைமலர் :கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை
தீர்மானித்தின் மீது இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 117 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பெங்களூரு: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.< இதற்கிடையே, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.
இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவின் எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.


இந்நிலையில், முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானித்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. முன்னதாக தனது அரசின் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் பற்றி சட்டசபையில் குமாரசாமி பேசினார். அப்போது, காங்கிரஸ் - மஜத கூட்டணி ஐந்து ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும். நாங்கள் மக்களுக்காக உழைப்போம். எங்கள் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை, என்றார்.

அவரைத்தொடர்ந்து எடியூரப்பா பேசினார். எடியூரப்பா பேச்சின் இடையிடையே காங்கிரஸ் உறுப்பினர்கள் சப்தமாக சிரித்தனர். முதல்-மந்திரி குமாரசாமியும் இடையில் எழுந்து பேசினார். பின்னர் பா.ஜ.க. உறுப்பினர்களை அனைவரும் ஒட்டு மொத்தமாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதைத்தொடர்ந்து அவையில் இருந்த 117 எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம்,  ஆதரவளித்ததை தொடர்ந்து குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்

கருத்துகள் இல்லை: