வியாழன், 24 மே, 2018

தூத்துக்குடி உயிரிழந்தவர்கள் உடலைப் பதப்படுத்தும் விவகாரம்.. தமிழக அரசு:கோரிக்கை.. உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

tamiltheyhindu :தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் உடலை வரும் 30-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற தமிழக அரசு வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
17-year-old Snowlin
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்ட்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர் உடற்கூறு ஆய்வில் தனியார் மருத்தவரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, மறு உத்தரவு வரும்வரை உடற்கூறு ஆய்வு செய்த உடல்களைப் பாதுகாக்க உத்தரவிட்டு அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு வழக்கு மே 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி உடல்களைப் பாதுகாக்கும் நிலையில், உடலைக் கேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்துவதால் அரசு எப்படி செயல்பட வேண்டும் என விளக்கமளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்து இன்று முறையிட்டது. இந்த வழக்கை இன்று மதியம் நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அமர்வு விசாரித்தது.

அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, உடல்களைக் கேட்டு உறவினர்களிடமிருந்து கடிதம் வந்துள்ளது, நீதிமன்ற உத்தரவால் உடலைத் தர முடியவில்லை என்பதால் அங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், இறந்தவர்கள் உடல்களின் மீதான கண்ணியத்தைக் காக்க வேண்டியுள்ளது என வாதிட்டார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, அரசின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன் குடும்பத்தினரையே கொன்று ஆதரவற்றோர்களாக மாற்றிய காவல்துறை அவர்களின் கண்ணியத்தைக் காக்கிறோம் என்று தெரிவிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், உடலை ஒப்படைக்கக்கூடாது என்ற உத்தரவில் மாற்றம் கோரி குடும்பத்தார் யாரும் வராத நிலையில் அரசு ஏன் விளக்கம் கேட்கிறது என கேள்வி எழுப்பினர்.
பின்னர் அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், பலியானவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அரசின் இன்றைய இடைக்கால மனு மீது மனுதாரர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: