புதன், 23 மே, 2018

ஸ்டெர்லைட் இரண்டாவது நாளாக தொடர்ந்து துப்பாக்கி சூடு தடியடி.. இதுவரை 12 உயிரழப்பு

BBC :தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக தொடர்ந்து தடியடி நடத்தியது காவல்துறை. போலீசாருடனான மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசாங்க தரப்பில் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை  

விடுதலை :தூத்துக்குடி, மே 23 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக
மூடக்கோரி  144 தடை உத்தரவை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியாயினர். இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலக கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு சூறையாடப் பட்டது. அங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் தீவைக்கப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம் சூழ்ந்ததால், தூத்துக்குடி மாநகரமே ரணகளமாக மாறியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி  கடந்த  100 நாட்களாக பொதுமக்கள் பல்வேறு கிராமங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் 100ஆவது நாளான நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தது. ஆனால், இதற்கு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்து விட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட், தென் பாகம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து நேற்று முன்தினம் இரவு ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டார். முன்னெச்சரிக்கையாக போராட்டக் குழுவினர் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்ட அறிவிப்பால் தூத்துக்குடியில்  2 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். எனினும் 144 தடை உத்தரவை மீறி நேற்று காலை முதலே போராட்டக்குழுவினர் பல்வேறு இடங்களில் கூடினர். தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள பனிமய மாதா ஆலய வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்களை காவல்துறையினர் தடுத்தனர். ஆனால் தடையை மீறி அவர்கள் செல்ல முயன்ற போது காவலர் களுக்கும், பொதுமக்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  தூத்துக்குடி விவிடி சிக்னல், 3ஆவது மைல், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் போராட்டத்தினர் புகுந்து விடாமல் தடுத்தனர். ஆனால் பல திசைகளில் இருந்தும் வந்த போராட்டக் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறத் தொடங்கினர். அவர்களை கட்டுப்படுத்தத் தேவையான காவல்துறையினர் இல்லாததால், பாதுகாப்பு பணியில் இருந்த  காவல்துறையினர் செய்வதறியாது திகைத்தனர்.
போராட்டக் குழுவினர் அனைவரும் வி.வி.டி. சிக்னல் பகுதியில் வந்தபோது அங்கு நெல்லை சரக டி.அய்.ஜி. கபில்குமார் சரத்கர் தலைமையிலான காவல்துறையினர், ஊர்வலத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வைத்திருந்த பேரிகார்டுகளை தூக்கியெறிந்தபடி போராட்டக் குழுவினர் முன்னேறினர். இதனையடுத்து  காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனிடையே திட்டமிட்டபடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.

3ஆவது மைல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததால் அங்கும் பாதுகாப்புக்கு நின்றிருந்த குறைந்தளவு காவல்துறையினரால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் எப்சிஅய் குடோன் அருகே திரண்டு வந்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது.  அதையும் மீறி போராட்டக்காரர்கள் சற்றும் தளராமல் காவல்துறையினர் மீது கற்களை வீசியவாறு முன்னேறிச் சென்றனர். அப்போது 3ஆவது மைல் பைபாஸ் பாலத்திற்கு கீழ் நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.   அங்கிருந்து ஆட்சியர் அலுவலக வாயிலில் நுழைந்த போராட்டக் குழுவினருக்கும்  காவல்துறையினக்கும் மோதல் ஏற்பட்டது. எனினும் ஆவேசமாக முன்னேறிய போராட்டக்குழுவினர் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த அரசு வாகனங்கள், அரசு ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.

ஆட்சியர் அலுவலக வாயிலில் இருந்த கண்ணாடி ஜன்னல் களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வாகனம், சுங்கத்துறை வாகனம், நெடுஞ்சாலைத் துறைக்கு  சொந்தமான வாகனம்  உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தீக்கிரையாகின. இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தின்  முதல்  தளத்தில் இருந்த காவல்துறையினர் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து  பின்வாங்கிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வாகனத்தின் மீது நின்றபடி காவல்துறையினர் எந்திர துப்பாக்கியால் சரமாரி யாக சுட்டனர்.  இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள் ளத்தில் சிலர் துடிதுடித்து இறந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் தேனி  மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (67),  தூத்துக்குடி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கிளாஸ்டன் (40), சிலோன் காலனியை  சேர்ந்த கந்தையா (55), தூத்துக்குடி பள்ளி  மாணவி ஸ்நோலின் என்ற வெனிஸ்ட்டா  (17), குறுக்குச்சாலையைச் சேர்ந்த தமிழரசன்(45), மாசிலாமணி புரத்தைச்  சேர்ந்த சண்முகம் (30), அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்த அந்தோனி செல்வராஜ்  (35), தாமோதரநகரை சேர்ந்த மணிராஜ் (34), ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பிற்பகலில் தூத்துக்குடி எஸ்பி திரேஸ்புரத்தில் ரோந்து சென்ற போது நடந்த மோதலில் 2ஆவது முறையாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் வினிதா (32) என்பவர் பலியானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியைச்  சேர்ந்த கார்த்திக் (20) என்பவர் நேற்று இரவு இறந்தார்.  பலி எண்ணிக்கை 12 ஆனது.  பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


இந்த தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு  சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 70க்கும் மேற்பட்டோர்   காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும்,  சில தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வீச்சு மற்றும் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட  காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள் ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு  தாக்குதலுக் குள்ளான பெண் காவலர் உயிருக்குப் போராடிவருகிறார்.  

 2ஆவது துப்பாக்கி சூடு போராட்டம் கட்டுக்குள் வந்ததை அடுத்து நேற்று பிற்பகலில் தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன், திரேஸ்புரம்  பகுதியில் அதிவிரைவு படையுடன் ரோந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அவரது வாகனம்  மீதும் போராட்டக் காரர்களில் ஒரு பகுதியினர் கல்வீசி தாக்குதல்  நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் தான் வினிதா என்ற  பெண் பலியானார்.

கருத்துகள் இல்லை: