வெள்ளி, 25 மே, 2018

14 பேரின் நிலைமைக் கவலைக்கிடம்: ஆட்சியர்!

14 பேரின் நிலைமைக் கவலைக்கிடம்: ஆட்சியர்!மின்னம்பலம : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 14 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் மருத்துவமனைக்கு சென்று 15 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளார். அதுவும் மருத்துவரின் அறையில் பத்து நிமிடம் இருந்துவிட்டு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் வந்ததால், அங்கிருந்த மக்கள் “கொலைகார ஆட்சியரே ஓடு” என முழக்கமிட்டனர்.

தூத்துக்குடியில் நடந்துவரும் சம்பவங்களால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது வெறுப்பு வளர்ந்துவருகிறது. அந்த வெறுப்பைத் தணிக்கும்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்குப் புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அங்கு 144 தடை போடப்பட்டிருப்பதால், நான்கு நாட்களாக மக்கள் எந்தப் பொருளையும் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை கிடைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார். காய்கறிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளை அதிக நேரம் திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் இயல்பு நிலைமை திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் எங்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலித்துவருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே மக்களின் முதன்மையான கோரிக்கை. தமிழக அரசின் முடிவும் அதுவே என முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, ஆலைக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கத்துக்கு தமிழக அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை. இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். இயல்புநிலை திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசினோம். தூத்துக்குடியிலிருந்து நெல்லைக்குப் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப அவ்வப்போது போராட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் சந்தித்துப் பேசிவருகிறோம் எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: