திங்கள், 23 அக்டோபர், 2017

ஷாலின் :எந்த மாநிலத்து பெண்கள் அழகு தமிழ்நாடா கேரளாவா ?


Shalin mariya lawrence : உண்மை பேசுவோம் வாருங்கள் .
எல்லாம் தொடங்கியது பாரதியாரிலிருந்து .
சிந்து நதியின் மிசை நிலவினிலே என்று அவர் எழுதிய ஹெடோனிச (hedonism ) பாடலிலே இந்தியாவின் எல்லா பகுதிகள் பற்றிய சிறப்பான விஷயங்களை சேர்த்திருப்பார் .அந்த லிஸ்டில் பெண்கள் என்று வரும்போது "சேர நன்னாட்டிளம் பெண்களுடனே " என்று எழுதிய அந்த வரிதான் தமிழ் நாட்டு ஆண்களின் உளவியல் சார்ந்தது .
ஆண்டு 2001 நான் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் சேர்ந்தேன் .அந்த கல்லூரியை பற்றிய பரவலான பார்வைகளில் பல ,மேட்டுக்குடி ,நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்கள் ,அதீத நேர்த்தியான உடை ,காரில் கல்லூரி வரும் பெண்கள் என்று பட்டியல் நீளும் ,அதில் முக்கியமானது அங்கே அதிக அளவில் கேரள பெண்கள் படிக்கின்றனர் என்பது .
ஆம் அங்கே கேரள பெண்களின் எண்ணிக்கை சற்றே அதிகமாய் தான் இருந்தது . அதில் 90 சதவிகித்தினர் மேட்டுக்குடி கேரளத்தினராய் இருந்தார்கள் .மிளிரும் தங்க நிறம் ,மீன் போன்ற கண்கள் ,பஞ்சு போன்ற தோல் ,நல்ல உயரம் ,சுருட்டை மூடி சகிதம் அவர்கள் தனியே தெரிவார்கள் . அதுவும் எத்தினிக் டே என்கிற ஒரு நாள் வரும் ,அன்று இந்த பெண்கள் சந்தன நிற புடவை ,பொன்னிற பார்டருடன் அணிந்து வரும்போது நானே வாயை பிளந்து கொண்டு பார்த்திருக்கிறேன் .இதை நான் மிக நேர்மையுடன் சொல்லுகிறேன் .இல்ல நான் அப்போவே பெண்ணிய பிஸ்து நான் அப்போவே எல்லாம் பெண்களையும் ரசித்தென்னலாம் பொய் சொல்ல மாட்டேன் .அந்த 18 வயதிற்கான எல்லா முட்டாள்தனமும் இருந்தது . அதெல்லாம் இருந்தால்தான் 18 வயது .

கல்லூரிக்கு எதிரே உள்ள ஜூஸ் கடைக்கு கூட்டம் குவிந்தது இவர்களை காண்பதற்காகதான் .அவர்கள் அதிகமாக சைட் அடிக்கப்பட்டார்கள் ,அவர்கள் அதிகமாக ரசிக்கப்பட்டார்கள் .
மலையாள பெண்கள்
தமிழ்நாட்டு ஆண்களுக்கு கேரளா பெண்களை அதிகமாக பிடிக்கும் .ஆயிரம் தான் தமிழக பெண்கள் பார்ப்பதற்கு அழகாய் (worldy terms ) இருந்தாலும் அவர்களுக்கு கேரளா என்கிற வார்த்தையை கேட்டாலே ஒரு கிளர்ச்சி .கேரள பெண்களுக்கு அவர்களிடத்தில் மவுசு இருந்தது .இருக்கிறது .
இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் ,அதில் இருவருமே சமூகம் சொல்லும் தரத்தில் சரி சமமான அழகாக இருந்தாலும் ,அதில் ஒரு பெண் வாயை திறந்து மலையாளத்தில் பேசினால் அந்த பெண்ணை தான் பையனுக்கு பிடிக்கும் .ஒரே காரணம் தான் ,அவள் மலையாளீ.
இக்கரைக்கு அக்கரை எப்பொழுதுமே பச்சைதான் உளவியல்படி ,ஆனால் தமிழக ஆண்களை பொறுத்தவரை தமிழ் கரைக்கு அப்பால் இருக்கு கேரளக்கரை கொஞ்சம் பச்சை பசேல் ,அடர் பச்சை ரகம்.
இதற்கு சினிமாவும் ஒரு காரணம் .
மலையாள பெண்கள் என்றாலே அழகு ,கிறக்கம் என்று காட்டியது தமிழ் சினிமா .சின்ன வீடு படம் நல்ல உதாரணம் ,அந்த தெருவில் ஒரு மலையாள பெண் வந்ததும் ,திருமணம் ஆன பாக்கியராஜ் துள்ளி குதித்து பண்ணும் சேஷ்டைகள் நமக்கு தெரியாதது அல்ல . இது போல் பல தமிழ் படங்களில் ,கேரள பெண்களின் அழகை பற்றிய வசனங்களும் ,பாடல்களும் ,கிளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் கேரள உடையணிந்த கேரக்டர்கள் என்று தமிழ் சினிமா பண்ணாத அராஜகங்களுக்கு அளவே கிடையாது ,அதிலும் கேரள பெண்களின் பெயர்கள் எப்பொழுதும் ஓமனக்குட்டி தான் .
அதுமட்டுமில்லாது இந்த கேரள பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் இருக்கிறதே அது தான் இன்னும் சிறப்பு .அதிகமாக கள்ள காதல் வைத்து கொள்ளுகிறவர்களாகவும் ,easy going types ,கிறங்க கிறங்க பேசுபவர்கள் என்று தமிழ் சினிமா கேரள பெண்களை வடிவமைத்தது .
இதோடு சினிமாக்காரர்கள் நின்றார்களா என்றால் இல்லை .
அவர்கள் மலையாள கரையிலிருந்து நடிகைகளை தேடி தேடி கொண்டுவந்தார்கள் ,மற்ற நடிகைகள் திரையில் செய்யாத பல துணிச்சலான விஷயங்களை கேரளா நடிகைகள் செய்தார்கள் .பட்டினத்தில் பூதம் படத்தில் வந்த கேயார் விஜயாவின் நீச்சலுடை பாடல் கூட இதில் சேரும் .தீபா ,ஊர்வசி ,ராதா ,அம்பிகா ,ரேகா ,ரேவதி என்று மலையாள நடிகைகள் 80 களில் ஆதிக்கம் செலுத்திய காலம் இருந்தது . 90 களில் வட இந்திய நடிகைகளின் ஆதிக்கம் . ஆனால் 2000 இற்கு பின்பு தமிழ் சினிமா இயக்குனர்களின் சொர்கம் கேரளாவாகி போனது .
நடிப்பில் ,அழகில் சிறந்த தமிழ் பெண்கள் இருந்தாலும் இவர்கள் நடிகைகள் வேண்டி கேரளா படையெடுத்தனர் .முதலில் சேரநாட்டிற்கு படையெடுத்த இயக்குனர் சேரன் கோபிகா ,நவ்யா நாயர் ,பத்மப்ரியா என்று இங்கு கொண்டுவந்தார் .
அதற்குபின் பாவனா ,அசின் ,நயன்தாரா ,மம்தா மோகன்தாஸ் ,இனியா ,ரம்யா நம்பீசன் ,பார்வதி மேனன் ,லட்சுமி மேனன் ஓவியா என்று இன்றுவரை தமிழ்நாட்டில் சினிமா துறையில் ஆட்சியிலிருப்பது கேரள இளவரசிகள் தான் .
இயக்குனர் சசிகுமாரின் மலையாள பாசத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் .
இவையெல்லாம் தமிழக ஆண்களில் என்ன உளவியல் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது ?
பெரும்பாலான தமிழக ஆண்களில் மனதில் ,மலையாள பெண்கள் தான் அழகு என்கிற ஒரு அநியாயமான விஷயம் ஏறிவிட்டது .
மலையாள நர்ஸுகளிடம் வழிவதும் ,அலுவலகத்தில் புதிதாய் மலையாள பெண் சேர்ந்தால் குதூகலிப்பதும் இந்த காரணத்தினால்தான் . நம் வீடுகளில் தமிழ் பெண் தெய்வங்களின் படங்களை விட கேரளத்து பெண்களை மாடலாக கொண்டு ராஜா ரவிவர்மாவால் வரையப்பட்ட லட்சுமி சரஸ்வதி படங்கள் தான் அதிகம் இருக்கின்றது .இதன் உளவியலும் என்ன ?
மேலும் மலையாள பாலியல் படங்களை அதிகம் பார்த்த நம்மூர் பையங்களுக்கு மலையாள பெண்கள் என்றால் அதீத போதை .
எது அழகு ,எது ஒருவருக்கு பிடிக்க வேண்டும் என்று நாம் யாருக்கும் உபதேசம் செய்ய முடியாது ,அது தனி நபர் விருப்பம் .ஆனால் மேல் சொன்ன காரணங்களால் தமிழ் நாட்டில் என்ன நமது கொண்டிருக்கிறது . வெறும் ரசிப்பதோடு நின்று விடாமல் ,இளம் தலைமுறைகளிடத்தில் மலையாள பெண்கள் மட்டுமே அழகு என்றும் ,தமிழ் பெண்கள் மொக்கை என்றும் கேலி பேசும் பழக்கம் உருவாகி உள்ளது .
மலையாளி பெண்கள் ஒன புடவை கட்டும்போது ஆஹா ஓஹோ என்று ரசிக்கும் சில அற்ப பதர்கள் ,ஏதோ ஒரு ஆசையில் தமிழ் பெண்கள் அந்த சேலையை உடுத்தினால் அவர்களை ,மொக்கை பிகர் ,அசிங்கம் ,ஆன்டி என்று வாய்க்கு வந்தபடி உளறுகின்றனர் .
சில உதாரணங்கள் ,
ஓணம் பண்டிகையின் நேரங்களில் ஆபிசுக்கு ஓணம் உடைவை அணிந்து வரும் தமிழ் பெண்களையும் மலையாள பெண்களையும் ஒப்பீடு செய்து தமிழ் பெண்களை அசிங்க படுத்தும் மீம்கள் .
ஏதெனிக் டே நாட்களில் புடவை அணிந்து வரும் தமிழ் பெண்களை மழையால் பெண்களின் படத்தை வைத்து ஓட்டுவது ஒன்று .
ப்ரேமம் படம் வெளியான நேரத்தில் மலர் டீச்சர் என்னும் கேரக்டரை வைத்து தமிழ் டீச்சர்களை அசிங்க படுத்திய மீம்கள் என்று சொல்லி கொண்டே போகலாம் . மீம் மட்டுமல்ல ,புகை பிடிக்க ஆண்கள் கூடுமிடமெல்லாம் இதை பேசுவார்கள்.
சமீபத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் பாடலை எடுத்து கொள்ளவோம் .
அந்த பாடலுக்கு ஒரு பெண் தன் கல்லூரியில் நடனமாடினார் .நன்றாக நடனம் தெரிந்த என்னை கேட்டால் அவர்கள் ஆடிய ஆட்டம் மொக்கை நடனம் என்று கூறுவேன் ,ஆனால் அந்த பாடல் ஒரே நாளில் வைரல் ஆகியது .பல லட்சம் பேர் தமிழ்நாட்டில் அதை பார்த்தனர் .காரணம் ஒன்றே தான் ஆடியது ஒரு மலையாள பெண் . கேரளா சேச்சிகள் என்று இவர்கள் செல்லமாக அழைக்கும் மலையாள பெண்கள் என்றாலே இவர்களுக்கு கொண்டாட்டம்தான் .அந்த விடியோவுக்கு வந்த பின்னூட்டங்களும் ,பதிவுகளும் நமக்கு இதை நன்றாக உணர்த்தும் . இதற்கு பின்னே நம் தமிழ் பெண்கள் அதை பாலோ செய்து போட்ட நடன விடீயோக்களுக்கு நினைத்தது போலவே நம் தமிழ் பையன்கள் அவைகளை கிட்ணன்ஸ் செய்து தீர்த்தார்கள்
இந்த விஷயம் எல்லாம் நன்றாக தெரிந்த மலையாள பெண்களில் பலர் இதை ஒரு superiority காம்ப்ளெக்ஸாக எடுத்துக்கொள்கிறார்கள் .அவர்கள் பேரழகிகள் போல ,தமிழ் பெண்கள் அசிங்கம் போல பல இடங்களில் நடந்து கொள்ளுவதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் .
சில வருடங்களுக்கு முன் என் மாமா நண்பர் ஒருவர் மலையாள பெண்தான் வேண்டுமென்று ஆடம் பிடித்து ஒரு திரிசூர் அழகியை மணந்தார் .திருமணத்திற்கு பின் எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பெண் சொல்லுவது " என்ன மாதிரி அழகான மலையாளம் பொண்ணு கிடைக்க உன்ன மாதிரி தமிழ் கருப்பன் குடுத்து வச்சி இருக்கணும் " இந்த ஊர் கருப்பிங்கன்னு நெஞ்சகியா என்ன ?" என்பதுதான் .
நான் தெளிந்துவிட்டேன் ,தத்துவார்த்த ரீதியாக அழகு என்றால் உண்மையில் என்ன என்கிற விஷயங்களை உணர்ந்து விட்டேன் . என்னை பொறுத்தவரையில் இந்த உலகில் பேரழகி முதலில் நான்தான். என்னை போலவே பல தெளிந்த பெண்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த அழகியல் ஒப்பீடுகள் எந்த பிரச்னையும் ஏற்படுத்தாது . ஆனால் பல பெண்களுக்கு இதெல்லாம் இன்னும் கூட பெரியவிஷயம் தான் .சமூகம் கட்டமைத்தில் எது அழகு எது அழகில்லை என்கிற சிறையில் சிக்கி தவித்து கொண்டுதான் இருக்கிறார்கள் . உளவியல் ரீதியாக பல இளம் பெண்கள் இந்த அழகு என்கிற விஷயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் . அதன் காரமாக வெள்ளை நிற மாற்று கிரீம்கள் ,முகத்தை சீரமைக்கும் அறுவை சிகிச்சைகள் போன்ற விஷயங்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள் . தற்கொலை வரி சென்றிருக்கிறார்கள் .உளவியல் ஆராய்ச்சியாளர்களை கேட்டால் இந்த விஷயத்தின் வீரியம் புரியும் .
இந்த சமூக உளவியல் பிரச்சனைக்கு கடந்த ஞாயிறு நடக்கவிருந்த #நீயா_நானா நிகழ்ச்சி ஒரு நல்ல அசலாக இருந்திருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத கருத்து.
அழகியல் சார்ந்த பல கேள்விகள் ,மாயைகள் அங்கே அடைக்கப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து .
வெறும் ஐம்பது பேர் பேசி என்ன ?
அங்கே பேசுவது பல லட்சம் பெண்களை தொலைக்காட்சி மூலமாக சேர்ந்திருக்கும் . வரதட்சணை பிரச்சனை விவாதத்தில் நடந்ததும் இது போன்ற ஒரு மாயை உடைப்புதான் .myth busting . அங்கே வரும் நடுநிலையாளர்களும் ஒரு நல்ல counselling ஐ கொடுத்திருப்பார்கள் .
இங்கே பெண்ணியம் என்பதை காபி ஷாப் பெமினிஸ்டுகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் .
3000 அடி உயரத்தில் இருந்து பார்க்காமல் ,300 டி உயரத்தில் இருந்து பார்க்க வேண்டும் . Feminism is never linear ,one has to deal into different layers and dimensions .
அழகியல் சார்ந்த பிரச்னையும் ,பிரச்சனைதான் .
படிப்படியாக தான் இங்கே மாற்றங்களை கொண்டு வரமுடியும் ,ஒரே இரவில் இங்கே யாரும் அருந்ததி ராய் ஆகிவிட முடியாது .உங்கள் பெண்ணியம் இன்னும் பரவலாய் போய் சேராததற்கு காரணம் நீங்கள் இன்னும் global feminism பேசி கொண்டிருப்பதுதான் . இங்கே இந்தியாவில் பேச வேண்டியது வேற . உங்கள் கம்யூனிசம் இந்தியாவில் பெரிதாய் வராததற்கு காரணம் இதுதான் . அம்பேத்கர் சொன்னதுபோல் ,இந்தியாவில் கம்யூனிசம் எடுபடாது ,ஏன்னென்றால் இந்தியாவின் பிரச்சனைகள் வேறு .
கடைசியாக ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன் .
இங்கே அழகு என்பது ஒருவரின் தோற்றம் தான் என்று நினைத்து கொண்டிருக்கும் so called பெண்ணியவாதிகளுக்கு ஏன் அழகு என்பது ஒருவர் செய்யும் ஒரு விஷயமாக இருக்கும் என்பது தோன்றவில்லை ?
ஆண்களிடம் கேட்டால் சொல்லுவார்கள்,ஒரு பெண் எப்பொழுது அழகென்று ,
ஒருத்தி கோவப்படும்போது அழகு ,ஒருத்தி புரட்சியாய் பேசும்போது அழகு ,ஒருத்தி பைக் ஓட்டும் விதம் அழகு ,ஒருத்தி காமுகன் ஒருவனை அடிக்கும்போது கொள்ளை அழகு ,ஒருத்தி பெரியார் என்று உச்சரிக்கும்போது அவ்வளவு அழகு .
அழகு என்பது தோற்றமன்று அது காரியங்களை பொறுத்ததென்று அந்த நிகழ்ச்சியில் சொல்ல பட்டிருக்கலாம் அல்லவா ?அதற்கு தலைப்பை அப்படி ஈர்க்கும் விதத்தில் வைத்திருக்கலாம் அல்லவா ?
பொக்கிஷப்பெட்டியை திறந்து பார்க்காமல் அது பாம்பு பெட்டி என்று எண்ணி கடலில் தூக்கி போட்ட மூடனின் கதை ஞாபகம் வருகிறது .
பிகு : அழகு சார்ந்த விஷயங்களில் radical மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கும் இடதுசாரி பெண்ணியவாதிகள் பலர் இன்னும் ஏன் சாரிகளிலும் (புடவை ) டிசைனர் பிளவுஸ் சகிதம் உலா வருகிறார்கள் ? புடவை என்பது பெண்களை காம பொருளாய் காட்ட வடிவமைக்கப்பட்ட ஒன்றுதானே ?
பொட்டு வேறு வைத்திருக்கிறார்கள் , இந்து மதத்தில் பொட்டுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தும் வைத்திருக்கிறார்களா ?
ஷாலின்

கருத்துகள் இல்லை: