வியாழன், 26 அக்டோபர், 2017

2 G வழக்கு - ஆ.ராஜா.தனக்காக வாதாடிய ஒவ்வொரு முறையும், அவரது வாதங்களில் அனல் பறந்தது... தினமலர்

தீர்ப்பு இன்னும் முழுமையாக எழுதி முடிக்கப் படாததால், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பை, 3-வது முறையாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஒத்திவைத்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு, அரசியல் ரீதியிலான முக்கியத்துவத்தை சிறிதும் இழக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு, தி.மு.க.,வின் அரசியல் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த லாம் என்றும், அதன்மூலம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தின் முகம் மாறலாம் என்றும், யூகங்கள் நிலவி வருகின்றன.
தி.மு.க., மட்டுமல்லாது, தேசிய அரசியலில் காங்கிரசுக்கும் இந்த தீர்ப்பினால், அரசியல் ரீதியாக சாதக பாதகங்கள் ஏற்படுமென்றும், அதன் மூலம், 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போக்கு தீர்மானிக்கப்படலாம் என்ற கருத்தும் உள்ளது. தவிர, குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு இடையிலான இந்த யுத்தத்தில்,
ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு, உடனடியாக, பெரும் விளைவு களை ஏற்படுத்தலாம் என, கூறப்படுகிறது.
பாஜகவே முரளிமனோகர் ஜோஷியின் மூலம் CAG அதிகாரிகளை மிரட்டி  மாற்றி எழுதி வாங்கி வெளியிட்டு சு.சாமியை வைத்து 2ஜி  வழக்குக்கு   காரணமாக இருந்தார்கள்
தி.மு.க.,வின் தெரிந்த முகங்களான, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, எம்.பி., கனிமொழி ஆகிய இருவரது அரசியல் எதிர்காலம் தாண்டி, இந்த தீர்ப்பின் வழக்கு, பல்வேறு கோணங்களில் விஸ்வரூபம் எடுத்து, தமிழகம் மற்றும்தேசிய அரசியலின் ஆட்டங்களை, திணறடிக்க
காத்திருக்கிறது.

கடந்த ஏப்ரலில் இறுதி விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின், பல முறை தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது, நவ., 7ம் தேதி, தீர்ப்பு தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், கூறியதாவது:


ஸ்பெக்ட்ரம் குறித்த, ஆறு வழக்குகள், நீதிபதி, சைனி முன், விசாரணைக்கு வந்தன. இதில், 'ஏர்செல் மேக்சிஸ்' உட்பட 3 வழக்குகளில், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ளது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் கலைஞர், 'டிவி'க்கு வந்த பணம் குறித்த வழக்குகள்.
இவ்வழக்கில் ஆரம்பம் முதலே, உறுதி குலை யாமல் நிற்கிறார், ராஜா. காரணம், இவ் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்.ராஜா மீதான முக்கியகுற்றச்சாட்டே, தன்னிச்சையாக முடிவெடுத்தார், என்பது தான்.

தான் மட்டுமல்ல, தனது துறையின் முக்கிய அதிகாரிகள் மட்டுமல்லாது, நிதியமைச்சரில் துவங்கி பிரதமர் வரையில் ஒப்புதல் பெற்றே முடிவெடுத்தாக கூறி, அது குறித்த முக்கிய ஆவணங்களை, நீதிபதி முன் மலைபோல கொட்டி இருக்கிறார், ராஜா.தனக்காக, நீதிபதி முன், ராஜா வாதாடிய ஒவ்வொரு முறையும், அவரது வாதங்களில் அனல் பறந்தது. சி.பி.ஐ., தரப்பிடம், 'கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முரணாக ஆவணங்கள் உள்ளனவே' என, பலமுறை, நீதிபதியே கடிந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.

இந்த வழக்கில், தீர்ப்பின் ஒவ்வொரு அம்சமும், கச்சிதமாக இருக்க வேண்டுமென, மிகுந்த கவனத்துடன், நீதிபதி செயல்பட்டு வருகிறார். அதன் வெளிப்பாடே, கூடுதல் கால அவகாசம் எனத் தெரிகிறது.சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தின் ஆயுட்காலம், நவ.,30ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இதற்கு மேலும், இந்த தீர்ப்பு தாமதம் ஆக வாய்ப்பில்லை.

நவ., 7ல் தேதி அறிவிக்கப்பட்டு, அதிலிருந்து, ஒரு வாரத்திற்குள், தீர்ப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள், தெரிவித்தன.இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப் பட்ட அனைவரும், நவ., 7ம் தேதி ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: