வியாழன், 26 அக்டோபர், 2017

குஜராத் .. அத்தனை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற ஆய்வு .... ஒட்டு இயந்திரத்தில் .....?

tamilthehindu : குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை பாரதிய ஜனதா அன்றாடம் மதிப்பீடு செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதற்கு அக்கட்சிக்கு காங்கிரஸுடன் ஏற்பட்டுள்ள கடும் போட்டியே காரணமாகக் கூறப்படுகிறது.
குஜராத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பாஜக அசைக்க முடியாமல் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிக்கு காங்கிரஸுடன் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தல் முடிவுகள், 2019-ல் வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் ஆகும். இதனால் பாஜகவின் கவுரவமாகக் கருதப்படும் குஜராத்தில் வெற்றி பெறுவது அக்கட்சிக்கு மிகவும் அவசியமாகி விட்டது.
இதனால் குஜராத்தின் 182 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை அன்றாடம் மதிப்பீடு செய்து, அதில் கூறப்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

இது குறித்து பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்தமுறை குஜராத்தில் பாஜக வெற்றி பெறுவது சுலபமல்ல என்பதை தலைமை நன்கு உணர்ந்துள்ளது.
இதனால், உ.பி.யில் பயன்படுத்திய தனியார் நிறுவனம் மூலம் அன்றாடம் சர்வே நடத்தி வருகிறோம். இதன் அறிக்கையில் கூறப்படும் பிரச்சினைகளில் கட்சியின் தலைமை நேரடியாகத் தலையிட்டு சரிசெய்து வருகிறது. இதன் பலனாக இந்தமுறை தொகுதி எண்ணிக்கை குறைந்தாலும் வெற்றி எங்களுக்கே கிடைக்கும்” என்று தெரிவித்தனர்.
வழக்கமாக, தேர்தல் நேரங்களில் ஒரு தொகுதியில் நடைபெறும் அரசியல் கட்சியின் கூட்டம் அதன் வாக்காளர்கள் மனநிலையை மாற்றி விடுவதாகக் கருதப்படுகிறது. சில சமயம், அப்பகுதி ஆளும் கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கை வாக்காளர்கள் இடையே அதிருப்தியை உருவாக்கி விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் மனம் மாறி தங்களுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என பாஜக கருதுகிறது.
இதற்காகவே அக்கட்சி சர்வே மேற்கொண்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி குஜராத்தில் வெளியிட்டு வரும் அறிவிப்புகளும், இதன் அடிப்படையிலானவை என கூறப்படுகிறது.
மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் கடந்த 2012 சட்டப்பேரவை தேர்தலில் 119 தொகுதிகள் பாஜக வசமானது. காங்கிஸ் 57, தேசியவாத காங்கிரஸ் 2, ஐக்கிய ஜனதா தளம் 1, இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

கருத்துகள் இல்லை: