வெள்ளி, 27 அக்டோபர், 2017

மெர்சல் ! மைனாரிட்டி இழிவைவிட பெரும்பான்மை மதவாதம் ஆபத்தானது.. எவிடென்ஸ் கதிர்!


ஆரோக்கியராஜ் ...ஒரு கொடூரமான வில்லனுக்கு தமிழக மருத்துவ மாபியாவுக்கு கொஞ்சமும் பொருந்தாத கிறிஸ்துவ அடையாளமும் பெயரும் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? அம்பேத்கர் படத்தை காட்டுகிற அட்லி, உடனடியாக பதட்டமாக சுபாஸ் சந்திரபோஸ் படத்தையும் காட்டுகிறார். ஏன் இந்த காம்ப்ரமைஸ்? பாட்சாவில் வில்லனுக்கு பெயர் அந்தோணி. மும்பையில் கிறிஸ்துவர்களில் எத்தனை பேர் தாதாவாக இருந்தார்கள்?
ஊருக்கு இளிச்சவாயர்கள் என்றால் கிறிஸ்துவ பெயரை வைத்துக் கொள்ளலாம். அதற்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். இந்த படத்தில் இதுபோன்ற காம்ப்ரமைஸ் மூலம் இன்னொரு சமூகத்தை இழிவுபடுத்துகிற வேலையையும் அட்லி செய்திருக்கிறார். சமூக ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட கிறிஸ்துவர்கள் இந்த படத்தை எதிர்க்காமல் கருத்து சுதந்திரம் காக்கின்றனர். அரசியல் ரீதியாக பிஜேபியை எதிர்த்ததனால் பிஜேபிக்காரர்கள் இப்படத்தை எதிர்க்கின்றனர். உரிமையை வலுவாக பேசுங்கள், இன்னும் வலுவாக பேசுங்கள். ஒரு மைனாரிட்டி சமூகத்தை இழிவுபடுத்தியும் அநீதிக்கு எதிராக பேசுங்கள். ஏன் என்றால் மைனாரிட்டி இழிவைவிட பெரும்பான்மை மதவாதம் ஆபத்தானது. அதற்காகவாவது இன்னும் பேசுங்கள் அட்லி. பொறுத்துக் கொள்கிறோம்.

kathir.vincentraj : உயிரை இயற்கை படைக்கலாம். அந்த உயிர் பறிபோகிற நிலையிருந்தாலும் அல்லது அந்த உயிர் சிதைந்து போகிற நிலை இருந்தாலும் அவற்றை மீட்கிற ஆற்றல் மருத்துவத்திற்கு உண்டு. அதனால் தான் மருத்துவர்களை கடவுளை போன்றவர்கள் என்று வழிபடுகின்றனர்.
ஆகவே மருத்துவம் என்பது மானுட சமூகத்தின் உயிர்ப்பு அடையாளம். அதற்கு நிகராக எதுவும் இல்லை. மருத்துவத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. விலைக்கும் விற்கக்கூடாது. அதனால் தான் அவை உலகத்தின் முதன்மை சேவையாக இருந்து வருகிறது. அந்த சேவை இன்றைக்கு வர்த்தகமாக மாறிவிட்டது. உலக சந்தையின் பெரும் பொருளாதார குவியலாக அதன் வளர்ச்சி வளர்ந்து நிற்கிறது. அதனால் தான் மருத்துவம் இன்றைக்கு மாபியா கையில் தஞ்சம் புகுந்துள்ளது. மாபியாக்கள் தான் நோய்களை டிசைன் செய்கிறார்கள். மாபியாக்கள் தான் அந்த நோய்களுக்கான மருந்தினை தயாரிக்கிறார்கள். மாபியாக்கள் தான் அந்த மருந்தின் மூலம் அந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதே நேரத்தில் மருத்துவத்தின் அறநெறியை சிதைக்காமல் இருக்கக்கூடிய மருத்துவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை சொற்பமாகிவிட்டது.

மருத்துவத்தை மானுட சமூகத்தின் அறநெறியாக நினைக்கும் நாயகனுக்கும் அவற்றை மாபியாவாக மாற்றுகிற வில்லனுக்கும் இடையே நடக்கும் கதைதான் மெர்சல். காலம் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள். அதுபோன்று காலம் தாமதிக்கப்பட்ட சிகிச்சை மறுக்கப்பட்ட உயிர்ப்புக்கு சமம் என்பதை இந்த கதைக்களம் தொடங்கி வைக்கிறது.
ஒரு சிறிய கிராமத்தில் மருத்துவ மாபியாவின் வெடிவிபத்து சூழ்ச்சியால் இரண்டு குழந்தைகள் கடும் காயத்துடன் உயிருக்கு போராட அவர்களை காப்பற்ற கதாநாயகன் விஜய் முயற்சி எடுக்கிறார். அந்த கிராமத்தில் மருத்துவமனை இல்லை என்பதனால் மதுரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு இருக்கக்கூடிய மருத்துவர்கள் 10 நிமிடத்திற்கு முன் வந்திருந்தால் இந்த 2 குழந்தைகளையும் காப்பாற்றியிருக்கலாம் என்று கூற இனிமேல் தனது கிராமத்தில் எந்த உயிரும் போக்கூடாது என்று மக்களோடு சேர்ந்து கதாநாயகனும் சபதம் எடுக்கிறார்.
ஒரு மருத்துவமனையை கட்டுகிறார். அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வரக்கூடாது எஸ்.ஜே.சூர்யா அதை வர்த்தகமாக மாற்ற சதி செய்கிறார். அந்த சதியின் முதல் பலி கதாநாயகன் விஜயின் மனைவி பலியாக, அந்த உண்மை தெரியும் விஜய் வில்லனுக்கு எதிராக கொதித்தெழ வில்லன் எஸ்ஜே.சூர்யா, கதாநாயகன் விஜயை கொல்கிறார்.
அவரது இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு இடத்தில் வளர்கின்றனர். ஒருவர் மக்கள் மருத்துவர், மற்றொருவர் மேஜிக்நிபுணர். மக்கள் மருத்துவர் மருத்துவ சேவை குறித்தும் மாபியாக்களின் அநீதி குறித்தும் பேசுகிறார், செயல்படுகிறார். மேஜிக்நிபுணர் விஜயோ தந்தையை கொன்றவரை பழி தீர்க்கிறார்.
ஒரு விஜய் மூலம் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக சேவையின் செயல்பாடுகளை விவரிக்க மற்றொரு விஜயின் மூலம் மருத்துவ மாபியாக்களை கொல்கிற வேலையும் நடக்கிறது. இது வழக்கமான பழிவாங்கும் படம் என்றாலும் இந்த படத்தின் விவரிப்பு மற்றும் உருவாக்கம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முதல் பாதி கதை நகர்வு விருவிருப்பும் திருப்பங்களும் பிரமிப்புகளும் ஏற்படுத்துகின்றன. இரண்டாம் பாதியில் வழக்கமான கதையும் அவற்றின் நகர்வில் தொய்வும் இருக்கிறது. ஆயினும் இரண்டு பகுதிகளில் மையப்புள்ளியை பார்வையாளர்கள் சேர்கிற ஆர்வத்தில் இருப்பதனால் அந்த தொய்வு பெரியதாக தெரியவில்லை.
கொஞ்சம் கத்தி படத்தின் பாதிப்பும், கொஞ்சம் தெறி படத்தின் பாதிப்பும், கொஞ்சம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாதிப்பும் இருக்கிறது. ஜிஎஸ்டி எதிர்ப்பு வசனம், டிஜிட்டல் இந்தியாவை வடிவேலு வசனத்தில் கிழித்து தொங்கவிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதனால் இந்த படம் பெரிய கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக பாஜக இந்த படத்தை எதிர்த்ததனால் தமிழகத்தில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. வர்த்தக ரீதியாக வெற்றி பெற வேண்டிய இந்த படத்தை பெரு வெற்றியாக மாற்றியது பாஜக தான். உண்மையில் விஜய் மற்றும் படக்குழுவினர் மனத்திற்குள் தமிழிசைக்கு நன்றி சொல்வார்கள்.
நிஜத்தில் நடக்கிற அநீதியை தட்டிக்கேட்பதை விட படத்தில் அநீதிக்கு எதிராக கதாநாயகன் தட்டிக் கேட்டால் கொண்டாடுபவர்களில் தமிழ் ரசிர்களுக்கு முதல் இடம் உண்டு. சமூக நீதி, மதவாத எதிர்ப்பு போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகளில் எல்லா மாநிலங்களை விட தமிழகம் வலுவாக இருக்கிறது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறது. ஆனால் நமது மாநிலத்தில் தான் கடந்த 35 ஆண்டு காலம் சினிமாவில் இருப்பவர்களே முதலமைச்சராக ஆக முடிகிறது. மற்ற மாநிலங்கள் நம்மைவிட பின்னோக்கி இருந்தாலும் அங்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இங்குதான் அரசியலை சினிமாவில் தேடிக் கொண்டிருக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது.
வெகுஜன மக்கள் எதிர்ப்பை சினிமாவில் வருகிறபோது அந்த கதாநாயகன் தலைவனாக மாறுகிற அந்த நிலை கவலைக்குரியது. ரஜினி, கமல் வரிசையில் நடிகர் விஜயையும் அரசியல் நகர்வில் வைக்கிற போக்கும் ஏற்பட்டிருக்கிறது. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழக ரசிகர்களின் நடவடிக்கையை பாராட்டுவதா? அதனால் அந்த கதாநாயகனையே தலைவனாக பூஜிக்கும் ரசிகர்களின் அறியாமை விமர்சிப்பதா? என்றே தெரியவில்லை.
ஒரு படமாக இந்த படம் பிடித்திருந்தாலும் விஜயை அரசியலுக்கு மாற்றுகிற நிலை ஏற்பட்டால் அவற்றை கடுமையாக விமர்ச்சிக்கிற தமிழக ரசிகர்கள் இருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தால் இந்த படம் கொண்டாடப்பட வேண்டிய படம் தான்.
விஜய் ஒரு கிறிஸ்துவர். அவர் பெயர் ஜோசப் விஜய். பாஜக உடனடியாக விஜய் ஒரு கிறிஸ்துவர் என்று மதரீதியாக அவர் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலை தந்திர ரீதியாக எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்கிற அறிவும் இயக்குனர் அட்லிக்கு தெரிந்திருக்கிறது. இந்த படத்தில் வருகின்ற மருத்துவ மாபியாவான எஸ்.ஜே.சூர்யாவிற்கு டேனியல் ஆரோக்கியராஜ் என்று பெயர் வைக்கிறார். அதாவது வில்லன் கிறிஸ்துவராம்.
இந்தியாவில் தமிழகத்தில் கல்வியையும் மருத்துவத்தையும் சேவையோடு செய்தது கிறிஸ்துவ சபையை சேர்ந்தவர்கள். அதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளின் எத்தனை தலைவர்கள் கிறிஸ்துவர்களாக இருக்கின்றனர்? அப்பல்லோ உள்ளிட்ட தமிழகத்தின் பல கார்ப்பரேட் மருத்துவமனைகளை நடத்துவது கிறிஸ்துவர்களா? வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி நீட்டிற்கு எதிராக துணிந்து குரல் கொடுத்ததே, இது என்ன சாதாரணமானதா? ஆரோக்கியராஜ் என்கிற பெயர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் வைக்கக்கூடிய பெயர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் நிறைய பேர் ஆரோக்கியராஜ், அந்தோணிசாமி, அபூர்வசாமி என்றெல்லாம் பெயர் வைப்பார்கள். ஒரு கொடூரமான வில்லனுக்கு தமிழக மருத்துவ மாபியாவுக்கு கொஞ்சமும் பொருந்தாத கிறிஸ்துவ அடையாளமும் பெயரும் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?
அம்பேத்கர் படத்தை காட்டுகிற அட்லி, உடனடியாக பதட்டமாக சுபாஸ் சந்திரபோஸ் படத்தையும் காட்டுகிறார். ஏன் இந்த காம்ப்ரமைஸ்? பாட்சாவில் வில்லனுக்கு பெயர் அந்தோணி. மும்பையில் கிறிஸ்துவர்களில் எத்தனை பேர் தாதாவாக இருந்தார்கள்?
ஊருக்கு இளிச்சவாயர்கள் என்றால் கிறிஸ்துவ பெயரை வைத்துக் கொள்ளலாம். அதற்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். இந்த படத்தில் இதுபோன்ற காம்ப்ரமைஸ் மூலம் இன்னொரு சமூகத்தை இழிவுபடுத்துகிற வேலையையும் அட்லி செய்திருக்கிறார்.
சமூக ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட கிறிஸ்துவர்கள் இந்த படத்தை எதிர்க்காமல் கருத்து சுதந்திரம் காக்கின்றனர். அரசியல் ரீதியாக பிஜேபியை எதிர்த்ததனால் பிஜேபிக்காரர்கள் இப்படத்தை எதிர்க்கின்றனர்.
உரிமையை வலுவாக பேசுங்கள், இன்னும் வலுவாக பேசுங்கள். ஒரு மைனாரிட்டி சமூகத்தை இழிவுபடுத்தியும் அநீதிக்கு எதிராக பேசுங்கள். ஏன் என்றால் மைனாரிட்டி இழிவைவிட பெரும்பான்மை மதவாதம் ஆபத்தானது. அதற்காகவாவது இன்னும் பேசுங்கள் அட்லி. பொறுத்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: