வியாழன், 26 அக்டோபர், 2017

நவம்பர் 8ஆம் தேதி கறுப்பு தினம் .. எதிர்க்கட்சிகள் முடிவு பணமதிப்பிழிப்பு ..

மின்னம்பலம் : பாஜக அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கண்டித்து வரும் நவம்பர் 8ஆம் தேதியைக் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், அன்றைய தினத்தைக் கறுப்புப் பணத்துக்கு எதிரான தினமாகக் கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.
நவம்பர் 8: நாடு முழுவதும் மல்லுக்கட்டு!கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லாது எனத் தெரிவித்திருந்த அவர், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இந்த நோட்டுகளை வங்கிகளிலும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இந்த அறிவிப்பு என அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட அளவு மட்டுமே வங்கியில் பணம் எடுக்க முடியும் என்பதால் இந்தியா முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் மிகுந்த துயரம் அடைந்தனர். இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. விவசாயம், வியாபாரம், போக்குவரத்து, கட்டுமானம் என அனைத்துத் துறைகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. பணமதிப்பழிப்பு என்பது தோல்வியடைந்த திட்டம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. இதைக் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் அக்.24ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், ‘பணமதிப்பழிப்பு நடவடிக்கை என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி. பணமதிப்பழிப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டத்தில் இருந்து இதுவரை 135 மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியைக் கறுப்பு தினமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இதில், 18 கட்சிகள் பங்கேற்கின்றன. மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் அன்றைய தினம் திமுகவினர் சார்பில் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்திய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியைக் கறுப்பு பணத்துக்கு எதிரான நாளாகக் கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அருண் ஜெட்லி நேற்று (அக்.25) செய்தியாளர்களிடம் கூறுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகப் பெரிய முடிவு. ரூபாய் புழக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் இருப்பதற்குப் போதுமான வாய்ப்பு கிடைத்தது. எனினும் கறுப்புப் பணத்துக்கு எதிராக அக்கட்சி எந்த நடவடிக்கையும் எடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை” எனக் கூறினார். மேலும், பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியைக் கறுப்புப் பணத்துக்கு எதிரான நாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: