திங்கள், 23 அக்டோபர், 2017

மலேசியாவிலிருந்து மணல் ! தூத்துக்குடியில் 55 ஆயிரம் டன் ஆற்று மணல் ..

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல்!
மின்னம்பலம்:  மலேசியாவிலிருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்ட 55 ஆயிரம் டன் ஆற்று மணல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.
மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் பெரும்பாலான இடங்களில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் போதுமான மணல் கிடைக்காத நிலையில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதன் முறையாக மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மலேசியாவிலிருந்து 55 ஆயிரத்து 445 டன் ஆற்று மணலை இறக்குமதி செய்துள்ளது. அன்னா டோரோதியா என்ற கப்பல் நேற்று முன்தினம் (அக்டோபர் 21) இரவு இந்த ஆற்று மணலுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. இறக்குமதி செய்யப்பட்ட மணல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த காலத்திலிருந்து தற்போது முதல் முறையாக வெளிநாட்டிலிருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: