வியாழன், 26 அக்டோபர், 2017

BBC : உத்தர பிரதேசத்தில் சுவிஸ் ஜோடி மீது தாக்குதல்; செல்ஃபி எடுக்குமாறு மிரட்டல்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் பிரபல சுற்றுலா தளமான ஃபதேபூர் சிக்ரியில் சுவிட்ஸர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு ஜோடி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹாலிலிருந்து சுமார் 44 கி.மீட்டர் தொலைவில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. கடந்த ஞாயிறன்று ஆக்ரா மாவட்டத்தில், சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த குவென்டின் ஜெரீமி கிளர்க் மற்றும் மார்க் டிரோஸ் ஆகியோரிடம் நான்கு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து தம்பதியர் மீது தாக்குதல் நடத்தியதாக பிபிசியிடம் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலையடுத்து தலையில் எலும்பு முறிவால் கிளர்க் அவதிப்பட்டதாகவும், டிரோஸுக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் நேற்றைய தினம் (புதன்கிழமை) உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் எவ்வித கைதுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
போலீஸார் மேற்கோள் காட்டிய அறிக்கையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் டிரோஸுடன் செல்ஃபி எடுக்க கட்டாயப்படுத்தியதாகவும், கம்புகளால் வைத்து தாக்குவதற்குமுன் அவர்களை தாக்குதல்காரர்கள் ஒருமணி நேரமாக பின்தொடர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

''தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்களை பிடித்துவிடுவோம்'' என்று ஆக்ராவின் காவல் கண்காணிப்பாளர் அமித் பதாக் கூறியுள்ளார்.

 ''தாக்குதலுக்குள்ளான ஜோடி காவல் நிலையம் வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்க நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவர்கள் புகார் ஏதும் பதிய விரும்பவில்லை.
ஆனால், நாங்கள் நான்கு ஆண்களுக்கு எதிராக புகார் ஒன்றை பதிவு செய்துள்ளோம்,'' என்றார் அவர். தாக்குதல் சம்பவம் குறித்து உத்தர பிரதேச மாநில அரசு அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்<

கருத்துகள் இல்லை: