புதன், 25 அக்டோபர், 2017

கந்து வட்டி தற்கொலைகள் : குற்றவாளிகள் யார் ?

வினவு :இசக்கி முத்து ஏன் கடன் வாங்கினார், விரலுக்குத் தகுந்த வீக்கமாக செலவை அமைத்துக் கொள்ள வேண்டும், அறியாமை, குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடாமை, ஆன்மீக எண்ணம் குறைதல் … இப்படி சில பல விட்டைகளை பாஜக, அதிமுக மற்றும் கருத்து கந்தசாமி – காயத்ரிக்கள் இறைத்து வருகின்றனர்.
சக்கிமுத்து குடும்பத் தற்கொலையை பார்த்து தமிழகம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அந்தக் குழந்தை கையில் தின்பண்டத்துடன் தீயில் வேகும் காட்சி இப்போதைக்கு நம்மை விட்டு அகலாது. இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொலைக்காட்சிகள் முதல் நடுப்பக்க கட்டுரைகள் வரை பேசப்படுகின்றன.
நீட் அனிதா தற்கொலையின் போது அந்த மாணவி ஏன் வேறு படிப்பை தெரிவு செய்யவில்லை, அவளது தாழ்வு மனப்பான்மைக்கு கவுன்சிலிங் கொடுத்திருக்க வேண்டும், தரமான கல்வி – தேர்வு பயிற்சிக்கு தமிழகம்  தயாராக வேண்டும் என்று துக்க வீட்டில் சேட்டு கல்யாண விருந்தின் சரி தவறுகளை பீறாய்ந்தார்கள் பாஜக, அதிமுக மற்றும் கேரியருக்கு கொலை வெறியோடு வாரியராக அலையும் நடுத்தர வர்க்க அறிஞர்கள்.

கந்து வட்டிக்கும் அதே பீறாய்தல் தொடர்கிறது. இசக்கி முத்து ஏன் கடன் வாங்கினார், விரலுக்குத் தகுந்த வீக்கமாக செலவை அமைத்துக் கொள்ள வேண்டும், அறியாமை, குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடாமை, ஆன்மீக எண்ணம் குறைதல் … இப்படி சில பல விட்டைகளை பாஜக, அதிமுக மற்றும் கருத்து கந்தசாமி – காயத்ரிக்கள் இறைத்து வருகின்றனர்.
இசக்கி முத்துவின் முடிவுக்கு தள்ளிய கலெக்டர், காவலர்கள் மீது பலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். கந்து வட்டி தடைச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் என்கின்றனர். அவ்வளவுதானா?
“தி இந்து” கட்டுரை ஒன்றில் (25.10.2017) தெரியவரும் ஒரு செய்தியைப் பார்ப்போம். தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கந்து வட்டி கொடுமையால் மட்டும் சுமார் 823 பேர் தற்கொலை செய்ததாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்திலும் கூட இந்த மரணங்கள் நிகழ்வதாக கந்துவட்டிக்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் அமைப்பாளர் ரவி கூறுகிறார்.
இந்தியா ஒரு ஏழை நாடு. எல்லா ஏழை நாடுகளிலும் கடன் இல்லாமல் மக்கள் வாழ்க்கை இல்லை. குறிப்பாக 90 -களுக்குப் பிறகு உலகமயமாக்கத்தின் வருகைக்கு பிறகு கடன் என்பது  மிகவும் அதிகரித்து வருகிறது. கல்வி, மருத்துவம், வேலை ஆகியவற்று மக்கள் கடன் வாங்கியே முயற்சிக்கிறார்கள். அன்றாடம் சுமார் 500 ரூபாய் வருவாய் பெறும் ஒரு குடும்பம் தனது குழந்தைகளின் ஆண்டு கட்டணத்திற்காகவும், அவ்வப்போது வரும் பெரும் நோய்கள் சிகிச்சைகளுக்காகவும் பெருந்தொகையை கடனாக வாங்க வேண்டியிருக்கிறது. துண்டு துக்காணி நகைகளை கடன் வைப்பது முடிந்ததும் வேறு வழியின்றி கந்து வட்டிக்காரர்களிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது.
தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசு பள்ளிகளில் படித்தால் எதிர்காலம் இல்லை என்பது மிகத்தீவிரமாக மக்களிடம் உறுதியடைந்திருக்கிறது. தனியார் கல்வியை அறிமுகம் செய்து மிகத்தீவிரமாக அமல்படுத்தி வரும் அரசு அன்றி இதில் மக்களை எப்படிக் குற்றம் சாட்ட முடியும்?
தலையில் அடிபட்ட ஒரு நபரை அருகாமை தனியார் மருத்துவமனையில் அவசரம் கருதி சேர்க்கிறார்கள். முதல்வர் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், அதில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு எந்தெந்த சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தலை சிகிச்சை வராது எனும் போது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு வேறு அரசு மருத்துவமனைகளுக்கு போக முடியாது. வேறு வழி? கடன்தான்.
அரசு பேருந்துகளில் ஐயாயிரம் ரூபாய் தற்காலிக சம்பள வேலைக்கே சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் அறிஞர்கள், அந்த இளைஞர்கள் வேறு வழியின்றியே அதை கொடுக்கிறார்கள், அப்படிக் கொடுத்தாலும் அந்த வேலையில் நிம்மதியோ இல்லை உத்திரவாதமான வருமானமோ இல்லை என்பது தெரியாது.
பள்ளி இறுதி கல்வி முடித்த பிறகு பிள்ளைகள் ஆசைப்படும் கல்வியை அளிக்கவோ, இல்லை குடும்பத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் கனவுடன் கடன் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்வது என்பது பெற்றோர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
இதன்றி நுகர்வுக் கலாச்சாரம், திருமணங்கள். திருமணத்திற்கு குறைந்தபட்சமாக செலவு செய்வதாக இருந்தாலும் ஓரிரு இலட்சம் இன்றி சாத்தியமில்லை. நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வங்கி, அலுவலக கடன்கள் மூலம் வீடு, கார், நிலம் வாங்குகிறார்கள். பிறகு அதற்கே தமது ஆயுளை தாரை வார்க்கிறார்கள்.
சாதாரண மக்களுக்கு அந்த வங்கி, அலுவலக வாய்ப்பில்லை. கட்டிட வேலை மற்றும் திருப்பூரில் தொழிலாளியாக பணியாற்றிய இசக்கி முத்துவுக்கு ஐசிஐசிஐ வங்கியிலோ, இல்லை ஸ்டேட் வங்கியிலோ கடன் வாங்குவது குறித்து கனவு கூட  காண முடியாது.
மோடியின் பணமதிப்பழிப்பு, பொருளாதார வீழ்ச்சி, ஜி.எஸ்.டி வரி தாக்குதல் காரணமாக உழைக்கும் மக்கள் அடைந்துள்ள துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த தீபாவளிக்கு கடன் வாங்கித்தான் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று இலட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கருதவில்லையா?
பிறகு அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ்களுக்கு தர வேண்டிய லஞ்சம். நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தைக் கூட முழுசாக பார்க்க முடியாத நாடு இது. அதை வங்கியில் போட்டாலும் அந்தக் கழிவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். இது போக விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, ஆட் குறைப்பு என்று நமது மக்களை அச்சுறுத்தும் ஆயுதங்கள் ஏராளம்.
கந்து வட்டி கும்பலின் நெட்வொர்க்கில் தொந்தி வளர்க்கும் காவல் துறையை கூண்டோடு ஒழிக்காமல் கந்து வட்டிக் கும்பலை எப்படி ஒழிக்க முடியும்? இந்த வலைப்பின்னலில் ஓட்டுக் கட்சிகளின் வட்டார பிரமுகர்களும் உண்டு. அதிமுக எனும் கொள்ளைக் கூட்டத்தின் ஆட்சியில் கந்து வட்டிக் கும்பல்கள் இன்னும் வீரியமாக செயல்படுகின்றன என்பதை மிகவும் சாதாரண உண்மையில்லையா?
பொருளாதாரத்தில் ஏழ்மை, வருமானமோ வாழ்க்கைக்கு போதுமானது அல்ல, கடனோ கந்து வட்டியில் மட்டும்…. பிறகு இசக்கி முத்து சாகாமல் என்ன செய்வார்?

கருத்துகள் இல்லை: