வெள்ளி, 27 அக்டோபர், 2017

ஜெயலலிதா கலைஞரை நடுஇரவில் கைது செய்த வரலாறு ... முத்திரைத்தாள் மோசடி முகமதலி உட்பட எவருமே பின்பு நிம்மதியாக...

savukku22.blogspot.com : /ஜுன் 30, 2001. இந்த நாளை தமிழகம் மறந்திருக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நாள் அது. தி.மு.க.ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இரவோடு இரவாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் விசாரணைக்கு அப்பாற்பட்டவரோ, விசாரிக்கப்படக் கூடாதவரோ கிடையாது. ஆனால், 1996-ல் ஜெயலலிதாவை கைது செய்வதற்கு முன், திமுக அரசு,எப்படி முழுமையான பூர்வாங்க விசாரணையை முறையாக நடத்தி, அதன் பிறகு,
ஜெயலலிதாவை கைது செய்ததோ, அப்படியல்லவா அதைச்செய்திருக்க வேண்டும்? ஆனால், அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகப் போய், வலுக்கட்டாயமாக கருணாநிதியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
பழிவாங்கும் உணர்ச்சிதான். அதைத்தவிர ஜெயலலிதாவிற்கு அதில் வேறு காரணம் இருக்கவே முடியாது. ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா, தனது கைதுக்கு காரணம் கருணாநிதிதான் என்று உறுதியாக நம்பினார். ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியில் வந்ததும், மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, என்னை 27 நாட்கள் சிறையில் வைத்த கருணாநிதியை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று வெளிப்படையாகவே பேசினார். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ள ஜெயலலிதாவுக்கு,அவரின் எதிரியை பழிவாங்கிவிட்டு, குருவாயூர் கோவிலுக்கு யானையை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுளோடு வாழலாம்... எதிரிகள் அழிவார்கள்... என்று சொன்னதன் அடிப்படையிலேயே இரவோடு இரவாக கருணாநிதியை கைது செய்ய உத்தரவிட்டார் என்பது அப்போது பரவலாக பேசப்பட்டது.


 கருணாநிதியின் கைது, ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகர ஆணையாளராக இருந்த முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி.யின் டிஐஜி முகமது அலி, டி.ஜி.பி.ரவீந்திரநாத் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக திமுக ஆட்சி காலத்தில் இருந்த ஜாபர் சேட் அப்போது போக்குவரத்து இணை ஆணையர். அவர்தான்
கருணாநிதி செல்லும் வழிகளையெல்லாம் ரூட் போட்டுக் கொடுத்தார்.

மைலாப்பூர் காவல் நிலையத்தில் அமர்ந்து, அந்த கைது நடவடிக்கையை மேற்பார்வை செய்ததே ஜாபர் சேட்தான். ஆனால், இந்த ஜாபர் சேட்டையை முழுமையாக நம்பி 2006-ல் தி.மு.க.தலைவர் கருணாநிதி பல்வேறு தவறுகளை இழைத்தது தனிக்கதை.;

 கருணாநிதியின் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகள் ஒருவர் கூட நிம்மதியாக இல்லை. முகம்மது அலி முத்திரைத்தாள் மோசடிவழக்கில் சிறை சென்றார். முத்துக்கருப்பன் ஜெயலலிதா ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ரவீந்திரநாத்தும் ஜெயலலிதா ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அடுத்த மாதமே, மு.க.ஸ்டாலினுக்கு ஏழு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, வாக்குமூலம் அளிக்கும்படி, ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் நாராயணன் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். இந்த ஆபரேஷனையும் முன்னின்று செயல்படுத்தியது சென்னை மாநகர காவல்துறைதான். 15 ஜுலை 2001அன்று ரமேஷ், அவரது மனைவி காஞ்சனா, மூன்று மகள்கள், மோனிஷா, சர்மிளா மற்றும் 11 மாதக் குழந்தை டிங்கு ஆகியோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். ஸ்டாலினுக்கு எதிராக சாட்சி சொல்லாவிட்டால், ஹெராயின் வழக்கில் கைது செய்யப்படுவாய் என்றுமிரட்டப்பட்டதாலேயே குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் ரமேஷ்

 ரமேஷின் அச்சம் அர்த்தமில்லாதது கிடையாது. எந்த வளர்ப்பு மகனின் திருமணத்துக்காக 100 கோடியை செலவழித்தாரோ, அதே வளர்ப்பு மகனை, ஹெராயின் வழக்கில் சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. முதலில் சுதாகரன் வீட்டிலிருந்து 16 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறை, மெல்ல மெல்ல அதைப் 16 கிராம் என்று மாற்றினார்கள்.

கருணாநிதியின் கைதைக் கண்டித்தும், காவல்துறை அராஜகங்களைக் கண்டித்தும், திமுக பேரணி நடத்துவது என்று, ஜுலை 27 அன்று நடந்த திமுக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.   இதை  அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்து, பல்வேறு வழிகளில் அலைக்கழித்தது. இருப்பினும் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டு, பேரணி சென்னை மெரினாவை அடைந்தபோது, வன்முறை வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர்.

பத்திரிக்கையாளர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.  இந்து புகைப்படக் கலைஞர் மூர்த்தி, எக்ஸ்பிரஸ் புகைப்படக்கலைஞர் பி.ஏ.ராஜு, ஸீ டிவி கேமராமேன் மணீஷ் தனானி, அவர் உதவியாளர் ஏசைய்யா, விகடன் புகைப்படக் கலைஞர் விவேகானந்தன், நக்கீரன் நிருபர் பிரகாஷ் மற்றும் புகைப்படக்கலைஞர் சம்பத், தினமலர் நிருபர் அருட்செல்வம் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

கடற்கரையில் அயோத்திக்குப்பம் அருகே, ஆயுதங்களோடு காத்துக் கொண்டிருந்த ரவுடிகள், திமுகவினரை, உருட்டுக்கட்டைகளாலும், கத்திகளாலும் கடுமையாக தாக்கினர்.    திமுக இந்த வன்முறை திட்டமிட்டு நடந்தது என்றது.  அதிமுக தலைவி ஜெயலலிதாவும், மாநகர ஆணையாளர் முத்துக் கருப்பனும், திமுகதான் வன்முறைக்குக் காரணம் என்றனர்.  ஜெயலலிதா, விஷயத்தை மூடி மறைக்க ஓய்வுபெற்ற நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார்.

மூத்த பத்திதிக்கையாளர் பகவான் சிங் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி வழக்க தொடுத்தார்.  அந்த வழக்கை விசாரணை செய்த, நீதிபதி கனகராஜ், அரசு, நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருவதால், சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து மதுரையில் சசிகலாவின் கணவரோடு (??) நெருக்கமானவர் என்று அறியப்பட்ட செரினா என்பவர் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வீட்டில் 1.40 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. ஒரு சாதாரண செரினாவின் ஜாமீன் மனுவில், மேஜிஸ்திரேட் கோர்டடில், கபில்சிபல் எப்படி வந்து வாதாடினார் என்பது விளங்காத மர்மம்.

கருத்துகள் இல்லை: