செவ்வாய், 24 அக்டோபர், 2017

2 ஜி வழக்கு தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கபடலாம் ..

மின்னம்பலம் : இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்புத் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மொத்தம் மூன்று வழக்குகளை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரித்துவருகிறது. முதலாவதாகத் தொடர்ந்த வழக்கில் 2011-ஆம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டது.
இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஏடிஏஜி தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.

இரண்டாவது வழக்கில், எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும் அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மூன்றாவதாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை 2011 நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. வழக்கின் இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்தது. எல்லாத் தரப்பினரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி ஷைனி வழக்கை ஆகஸ்டு 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மீண்டும் ஆகஸ்டு 25ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘’வழக்கின் தீர்ப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 20ஆம் தேதி தெரிவிக்கப்படும். வழக்கின் முழு ஆவணங்கள் முழுமையாகத் தயாராகாததால் தீர்ப்பு வழங்கக் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவேதான் இந்தக் கால தாமதம் ஏற்பட்டது” என்று நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அக்டோபர் 25ஆம் தேதி வெளியிடப்படும். வழக்கின் ஆவணங்கள் ஏராளமாக இருப்பதால் தீர்ப்பை எழுதும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஒருவேளை அக்டோபர் 25ஆம் தேதி தீர்ப்பு தேதியை அறிவிக்க முடியாவிட்டால் அதற்கடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்ப்பு அளிக்கப்படும் என ஷைனி வழக்கை ஒத்தி வைத்தார்.
நாளை (அக்.25) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நாளையே தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நவம்பர் 15ஆம் தேதியை ஒட்டித் தீர்ப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: