வியாழன், 26 அக்டோபர், 2017

இசக்கிமுத்து குடும்பம் கருகிப்போன கனவுகள் ....

vincentraj: எரியூட்டும் கூடத்தில் கரிக்கட்டை சடலமாக சுப்புலட்சுமியின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது.அவரது இடது பக்கத்தில் 4 வயது மகளும் வலது பக்கத்தில் 16 மாத மகளும் கரிந்த நிலையில் அவர்களது அம்மாவின் உடலோடு ஒட்டி சடலமாக கிடந்தனர்.பாதங்கள் ஒரே நிலையில் வைக்கப்பட்டு இருக்க சின்ன குழந்தை இடுப்புக்கு கீழ் பெரிய குழந்தை இடுப்புக்கு மேல் இருக்கும் அந்த காட்சியை பார்க்கும்போது ஒரு கணம் உயிரோடு மூவரும் நடந்து வருவது போன்று தோன்றியது.
இசக்கிமுத்து பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.இசக்கிமுத்து 10 வகுப்பு படித்து இருக்கிறார்.சுப்புலட்சுமி பி.காம்.படித்து இருக்கிறார்.வங்கி தேர்வு எழுதி இருக்கிறார்.இசக்கிமுத்துவுக்கும் சுப்புலெட்சுமிக்கும் நிறைய கனவு இருந்தது.அந்த கனவினை கந்துவட்டி கொன்று தீர்த்து விட்டது.

கடந்த 2003 ம் ஆண்டு கந்துவட்டி ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.இதனை தொடர்ந்து 2014 ம் ஆண்டு உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து கந்துவட்டி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கவேண்டும் என்று தீர்ப்பு எழுதியது.கந்துவட்டி கொடுமைகள் குறித்து மாவட்ட அளவிலும் தாலுகா அளவிலும் கண்காணிப்பு குழு போட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.ஆனால் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மெத்தனம் என்பதைவிட நமத்துபோன மெத்தனமாக இருந்தனர்.
மூன்று உயிர்கள் போனபிறகு இப்போது கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தை அதிகாரிகள் பதிவு செய்து இருக்கின்றனர்.மாவட்ட ஆட்சியர் மீதும் காவல் உயர் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.அதற்கு உயர் நீதி மன்றத்தில் மனு போட வேண்டும் என்றேன்.இசக்கிமுத்துவின் தந்தையும் அவரது தம்பியும் உறவினர்களும் வழக்கு பதிவு செய்யுங்கள் சார்..நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்றார்கள்.நீதியின் பயணத்தை துரித படுத்துவோம்.

கருத்துகள் இல்லை: