செவ்வாய், 6 ஜூன், 2017

தினகரன் கடும் கோபம் ... கூவதூரில் உங்களை அடைத்து பாதுகாத்து ஆட்சியை காப்பாற்றியது மறந்து விட்டதா?

பெங்களூரு வந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் விபரம்: இன்பதுரை, தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், தங்கதுரை, ஏழுமலை, ஜக்கைய்யன், கதிர்காமு, ஜெயந்தி.
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறியதாவது:சசிகலா, தினகரன் பற்றி பேசுவதற்கு, கட்சியில் யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. கூவத்துாரில், 122 எம்.எல்.ஏ.,க்களை ஒருங்கிணைத்து, பழனிசாமியை முதல்வராக்கி, ஜெயகுமாருக்கு நிதி பொறுப்பை கூடுதலாக கொடுத்த சசிகலா, தினகரனை, யாரும் பார்க்கக் கூடாது என, சொல்வதற்கு, ஜெயகுமாருக்கு யோக்கியதை இல்லை
அ.தி.மு.க.,வில் இருந்து, தன்னை ஒதுக்கிய, முதல்வர் பழனிசாமி அணியினருக்கு, துணை பொதுச் செயலராக தன்னை நியமிக்க வைத்த தினகரன், திடீர் கெடு விதித்துள்ளார். சசிகலா அறிவுரையை ஏற்று, 60 நாட்கள் ஒதுங்கியிருந்து, கட்சியை கண்காணிக்கப் போவதாகவும், 'அதற்குள் ஒன்றுபடாவிட்டால், எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வேன்' என்றும், அவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தன்னுடைய பதவியை, யாராலும் பறிக்க முடியாது என்றும் கொக்கரித்து உள்ளார். அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வீரமணி உள்ளிட்ட சிலரை நீக்கும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதை நிறைவேற்ற மறுத்தால், ஆட்சியை கலைக்க, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களால், சட்டசபையில் வெட்டு தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், தினகரன் தரப்பில் மிரட்டல் விடப்பட்டது.


அமைச்சர்கள் கூட்டம்

இது குறித்து விவாதிக்க, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க, நேற்று காலை, தினகரன் புறப்பட்டுச் சென்றார்.அப்போது, நிருபர்களை சந்தித்த தினகரன், 'எதிர்கால செயல்பாடு குறித்து, அறிவுரை பெற, சசிகலாவை சந்திக்க செல்கிறேன். கட்சி, ஆட்சியை பாதுகாக்குமாறு, என்னிடம் தொண்டர்கள் கோரிக்கை வைக்கின்றனர்' என்றார்.
தினகரன் பெங்களூரு சென்ற நேரத்தில், சென்னை, தலைமை செயலகத்தில், நிதியமைச்சர் ஜெயகுமார் தலைமையில், அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. செங்கோட்டையன், சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உட்பட, 19 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள்
பேசியதாவது:யாருடைய தலையீடும் இல்லாமல், அச்சுறுத்தல் இல்லாமல், சுதந்திரமான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், தினகரன், தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் பதவி கேட்டு மிரட்டுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது.
ஏப்., மாதத்தில், இரு அணிகளும் இணைய இடையூறாக இருக்கும் தினகரனையும், அவரை சார்ந்தவர்களையும் ஒதுக்கி வைப்பது என, முடிவெடுத்தோம்; அதில்,எந்த மாற்றமும் வேண்டாம். அந்த முடிவில், நாம் தொடர வேண்டும்.
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களால், ஆட்சிக்கு ஆபத்து வரும் நிலை ஏற்பட்டால், பன்னீர்செல்வம் அணி ஆதரவு கிடைக்கும்; ஆட்சி கவிழ வாய்ப்பில்லை. இரு அணிகளும் ஒருங்கிணைந்து செயல்படும் போது, இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிடும்.
இவ்வாறு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.

காத்திருந்த தினகரன்

இந்த முடிவை, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அமைச்சர்கள் தெரிவித்தனர். அவரும் ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, அதை, பத்திரிகையாளர்களிடம், அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.
ஜெயகுமார் தலைமையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டவர்கள் கூட்டாக வெளியிட்ட, இந்த அறிவிப்பு பற்றிய தகவல், பெங்களூரு சிறை வாசலில் காத்திருந்த தினகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, எந்த பதிலும் அளிக்க, அவர் மறுத்துவிட்டார்.
சிறையில் சசிகலாவை சந்தித்து, ஒரு மணி நேரம், 20 நிமிடம், இதுபற்றி தினகரன் பேசினார். வெளியே வந்த பின், இது குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம், பழனிசாமி அணியினருக்கு இல்லை. பொதுச் செயலருக்கு தான், அந்த அதிகாரம் உள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து, சசிகலாவிடம் பேசினேன்.அவர், 'இரண்டு மாதம் காத்திருக்கலாம்' என, அறிவுரை கூறினார். அதன்படி, 60 நாட்கள் காத்திருந்து, கட்சியை கண்காணிக்க முடிவு செய்துள்ளேன்.அதற்குள், கட்சியை ஒன்று சேர்க்கின்றனரா என, பார்ப்போம். 60 நாட்களுக்குள், கட்சியை சரி செய்தால் வரவேற்போம். இல்லையென்றால், என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்.
இவ்வாறு தினகரன் கூறினார்.

விபரீத விளைவுகள்...!

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறியதாவது:சசிகலா, தினகரன் பற்றி பேசுவதற்கு, கட்சியில் யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. கூவத்துாரில், 122 எம்.எல்.ஏ.,க்களை ஒருங்கிணைத்து, பழனிசாமியை முதல்வராக்கி, ஜெயகுமாருக்கு நிதி பொறுப்பை கூடுதலாக கொடுத்த சசிகலா, தினகரனை, யாரும் பார்க்கக் கூடாது என, சொல்வதற்கு, ஜெயகுமாருக்கு யோக்கியதை இல்லை.
கட்சியில், 10 அமைச்சர்கள் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவை, ஏற்க முடியாது. முதல்வர் பழனிசாமி, எந்த கருத்தையும் தெரிவிக்காதது ஏன்?தினகரன், சிறை சென்று, 42 நாள் கழித்து வெளியே வந்தார். இரு அணிகளும் இணைந்திருக்கும் என, நினைத்தார். இரட்டை இலையை மீட்பதற்கான பணிகளை செய்திருப்பர் என்றும் நினைத்தார்; ஆனால், செய்யவில்லை.
ஒன்றரை கோடி தொண்டர்கள் எடுக்க வேண்டிய முடிவை, சில அமைச்சர்கள் எடுப்பதை ஏற்க முடியாது. இந்த நிலை தொடருமானால், விபரீத விளைவுகள் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினகரனுடன் வந்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் விபரம்:


இன்பதுரை, தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், தங்கதுரை, ஏழுமலை, ஜக்கைய்யன், கதிர்காமு, ஜெயந்தி.

- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: