ஞாயிறு, 4 ஜூன், 2017

நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜ் மையங்கள் ...

சுற்றுச்சூழல் மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க மின்சாரக் கார்களாக மாற்றப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் மிகக் குறைவான அளவிலேயே மின்சாரக் கார்கள் உள்ளது. ஆனால் அதற்கும் போதிய அளவில் நாடு முழுவதும் போதிய சார்ஜ் மையங்கள் இல்லை.
இந்நிலையில் மின் நிலைய திட்டங்கள், மின் உற்பத்தி உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி, தற்போது மின் வாகனங்களுக்கு, 'சார்ஜ்' செய்து கொடுக்கும் வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளது.
இதற்காக, முதன்முதலாக டில்லி மற்றும் நொய்டாவில் உள்ள, என்.டி.பி.சி அலுவலக வளாகங்களில், புதிய மின் சார்ஜ் மையங்கள் நேற்று (03.06.2017) திறக்கப்பட்டன. இதையடுத்து, பிற நகரங்களிலும் இது போன்ற மையங்கள் திறக்கப்படும் என, என்.டி.பி.சி., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்சாரக் கார்களை ஊக்குவிக்கும் வகையில் மின்சாரக் கார்களுக்கு தேவையான பேட்டரிகளை குறைந்த விலையில் தயாரிக்க உலகம் முழுவதும் உள்ள பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் மின்சாரக் கார்கள் பயன்பாடு பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் இந்தியாவிலும் மின்சாரக் கார்கள் எண்ணிக்கை பலமடங்கு உயரும். இதனால் மின் சார்ஜ் மையங்களின் தேவை அதிகம் இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: