புதன், 7 ஜூன், 2017

தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு: 3-வது அணியால் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம்

tamilthehindu.com  : அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை என தகவல் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட தினகரன், கடந்த 2-ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 3-ம் தேதி சென்னை திரும்பிய அவர், ‘‘கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற அதிமுக தொண்டர்கள் என்னை அழைக்கின்றனர். எனவே, கட்சிப் பணியை மீண்டும் தொடர்வேன்’’ என அறிவித்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ‘‘தினகரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என கடந்த ஏப்ரல் 17-ம் தேதி எடுத்த முடிவில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் யாரும் தினகரனை சந்திக்க மாட்டோம்’’ என நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் கூட்டாக அறிவித்தனர்.
இந்தச் சூழலில் பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பி.பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பி.வெற்றிவேல் (பெரம்பூர்), தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), சுப்பிரமணியன் (சாத்தூர்), எஸ்.டி.கே.ஜக்கையன் (கம்பம்), பார்த்திபன் (சோளிங்கர்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி), கே.பழனி (பெரும்புதூர்), ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), கே.கதிர்காமு (பெரியகுளம்), எஸ்.முத்தையா (பரமக்குடி), கே.உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்), ஆர்.சுந்தரராஜ் (ஒட்டப்பிடாரம்), ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), எஸ்.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), பி.சத்யா (பண்ருட்டி), தூசி கே.மோகன் (செய்யாறு), வி.பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), கோதண்டபாணி (திருப்போரூர்), சந்திர பிரபா (வில்லிபுத்தூர்) உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் நேற்று தினகரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய பி.வெற்றிவேல் எம்எல்ஏ, ‘‘தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாகக் கூற நிதியமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு எந்த அதிகாரமும் இல்லை. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரன் தொடர வேண்டும் என்பது எங்களது விருப்பம். முதல்வர் பழனிசாமி அரசுக்கு நாங்கள் நெருக்கடி தர மாட்டோம்’’ என்றார்.
இதற்கிடையே, கட்சிப் பணிகளில் தினகரன் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். முன்னாள் எம்.பி. இரா.செழியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச்செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே அறிவித்தபடி கட்சிப் பணியை அவர் தொடர்வதையே இந்தச் செய்தி காட்டுவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு பக்கம் தினகரனை எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் முதல்வர் பழனிசாமியும் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் தரமாட்டோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறினாலும், அமைச்சர் ஜெயக் குமார் உள்ளிட்ட சிலர் மீது அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
தினகரனை நேற்று மாலை சந்தித்து பேசிய பிறகு தங்க தமிழ்ச்செல்வன் கூறும்போது, ‘‘அதிமுக கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மட்டுமே எடுக்க முடியும். துணைப் பொதுச்செயலாளர் என்பதால் தினகரனை சந்தித் தோம். ஓபிஎஸ் போல ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் செயல்பட்டு வருகிறார். தினகரனை ஒதுக்கி வைக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்றார்.
அமைச்சருக்கு எதிராக தினகரன் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது கட்சிக்குள் மேலும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அதிமுகவில் நிலவிவரும் குழப்பங்களால் முதல்வர் பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றி வருவதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: