திங்கள், 5 ஜூன், 2017

காயிதே மில்லத் பிறந்த நாள் ! அய்யாவின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லுங்கள் ..


Jothimani Sennimalai: சகோதரர் ஷாநவாஸ் இயக்கிய காயிதே மில்லத் ஆவணப்படத்தில், அவரது புகைப்படத்தைக் காட்டி யாரென்று கேட்டால் பெரியார் (தாடி வைத்திருப்பதால்), தெரியலை போன்ற பதில்களே கிடைக்கும்.
காயிதே மில்லத் அவர்களை வெறும் இஸ்லாமியராக மட்டும் சுருக்கிவிட முடியாது. தமிழுக்கு,அறிவியலுக்கு,கல்விக்கு,பெண்கள் முன்னேற்றத்திற்கு,மத நல்லிணக்கத்திற்கு ,ஒடுக்குமுறைக்கு எதிராக என்று பல்வேறு தளங்களில் ஒலித்த,தொலைநோக்கு சிந்தனை கொண்ட ,முற்போக்கான குரல் காயிதே மில்லத் அவர்களுடையது.
தமிழகத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவர்.பெரியார் ,காமராசர்,அண்ணா,ஜீவா வரிசையில் வைக்கப்பட்டிருக்க வேண்டிய உன்னதமான தலைவர் அவர்.
அவர் முன்னிறுத்திய அடையாளம் இந்திய சமூகத்தில் ஊடும் பாவுமாய் கலந்துள்ள அக்மார்க் தமிழ் இஸ்லாமிய அடையாளம். அவர் குரானின் வழியில் வாழ்ந்த உண்மையான இஸ்லாமியர்
அந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு சில கூட்டங்களில் காயிதே மில்லத் பற்றிக் கேட்டால் பலருக்கும் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்கவில்லை.

பொது சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய ஒரு தலைவரை இஸ்லாமிய சமூகமே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம்!
.
அவரை ஆதர்சமாகக் கொள்ளாமல் வேறெங்கோ இருந்து குரானுக்கு முரணான கொள்கைகளை,நம்பிக்கைகளை ஒருசிலர் இறக்குமதி செய்வது சரிதானா என்பதை இஸ்லாமிய சமூகம் சிந்திக்க வேண்டும்.
பெண்கல்வியும், முன்னேற்றமும்,அறிவியலும், நவீன சிந்தனைகளையும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த காயிதே மில்லத் அவர்களைவிடவா ஒரு சிறந்த வழிகாட்டி,தலைவர் இஸ்லாமிய சமூகத்திற்கு கிடைத்துவிடப் போகிறார்?
அவரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுங்கள். அவர் சிந்தனைகளை செயல்படுத்துங்கள்.
நவீனமான நியாயமான மாற்றங்களுக்கு செவிசாய்க்காத எந்த சமூகமும் வரலாற்றின் அடுத்த கட்டத்தை நோக்கிய பாய்ச்சலை நிகழ்த்த முடியாது. நான் இதை சொல்வதால் உங்களில் சிலருக்கு வருத்தம் கூட இருக்கலாம் .அதற்காக இதை நான் சொல்லாமல் இருக்க முடியாது.
இன்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்ததினம்

கருத்துகள் இல்லை: