வெள்ளி, 9 ஜூன், 2017

இங்கிலாந்தில் கூட்டணி ஆட்சி! மொத்தம் 650தொகுதிகள்.. ஆளுங்கட்சி 318 தொகுதிகள் ....

இங்கிலாந்தில் கூட்டணி ஆட்சி!மின்னம்பலம் :இங்கிலாந்தில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகிய நிலையில், கூட்டணியுடன் பிரதமர் தெரசா மே ஆட்சியமைக்க உள்ளார்.
ஜூன் 9-ம் தேதி காலையில் இங்கிலாந்து பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆரம்பத்திலிருந்தே ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை வகித்தே வந்தது. ஆனால் எந்த கட்சியுமே பெரும்பான்மை பெற முடியாத நிலை உருவானது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் தெரசா மேவின் கனவு தகர்ந்தது. எதிர்கட்சியான லேபர் கட்சியும் கூட்டணி அமைத்தாலும்கூட ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவானது. இதனால் இங்கிலாந்தில் தொங்கு நாடாளுமன்றம் உருவானது.
தேர்தல் முடிவுகள் மதியம் 1 மணியவில் வெளியாயின.
இங்கிலாந்து நாடாளுமன்றம் மொத்தம்  650தொகுதிகள்.
ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 318 தொகுதிகளில் வென்றது. 
எதிர்கட்சியான லேபர் கட்சி 261 தொகுதிகளிலும், 
ஸ்காட்டிஷ் தேசிய கட்சி 35 இடங்களிலும், 
லிபரல் டெமாக்ரட் 12 தொகுதிகளிலும், 
டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இதனால் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகி தொங்கு நாடாளுமன்றம் உருவானது.

எதிர்கட்சியான லேபர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் இதுகுறித்து பேசுகையில், “தெரசா மே பதவி விலக வேண்டும். இங்கிலாந்தில் அரசியல் நிலை மாறிவிட்டது. தெரசா மேவின் அதிகாரத்துவ அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர்” என அவர் கூறினார்.
ஆனால் பதவி விலகும் முடிவு எதுவும் இல்லையென தெரசா மே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக்காக தன் பலத்தை அதிகரிக்கவே இந்த தேர்தலை நடத்த தெரசா மே நடவடிக்கை எடுத்தார். ஆனால் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது அவருக்கு பலத்த பாதகமாக அமைந்துவிட்டது.
650 சீட்டுகள் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 326 சீட்டுகள் பெற்று பெரும்பான்மை பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும். 318 தொகுதிகள் பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சி உரிமை கோர மேலும் 8 தொகுதிகள் தேவைப்பட்டது. இந்நிலையில் 10 தொகுதிகள் பெற்றுள்ள டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி உரிமை கோர முடிவு செய்தார் தெரசா மே. இந்த கூட்டணியின் மூலம் 328 சீட்டுகள் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கான உரிமையை தெரசா மே பெற்றுள்ளார். எனவே இங்கிலாந்து அரசியை சந்தித்து ஆட்சி உரிமை கோர தெரசா மே பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றுள்ளார்.
இங்கிலாந்தில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியதால் அந்நாட்டின் நாணையமான பவுண்டின் மதிப்பு இரண்டு சதவிகிதம் சரிந்து 1 பவுண்டின் மதிப்பு 1.27 அமெரிக்க டாலர் என்றானது.

கருத்துகள் இல்லை: