ஞாயிறு, 4 ஜூன், 2017

வேலு பிரபாகரன் ஷெர்லி திருமணம்; கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை!

thetimestamil.com :இயக்குநர் வேலு பிரபாகரன் தீவிர நாத்திகர். பெரியார் தொண்டர். கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர். திரையுலகில் ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ படங்களில் நாத்திக கொள்கைகளையும், ஜாதி, மத எதிர்ப்புக் கொள்கைளையும் பறை சாற்றியவர்.
ஆனால் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற படத்தில் காமத்தை முன் வைத்து தமிழகத்தில் கலாச்சாரம் என்ற போர்வையில், நாம் காமத்தை மறைத்து வைப்பதால்தான் கற்பழிப்புகளும், முறை கேடான கள்ளக் காதல்களும் பெருகி வருவதாக அறிவுறுத்தினார்.

இதே ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில் நடித்த ஷெர்லி தாஸ் என்னும் 30 வயது மங்கையை, இன்றைக்கு காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் வேலு பிரபாகரன். வேலு பிரபாகரனுக்கு இப்போது வயது 60.
1949- ஜூன் 9-ம் தேதி தந்தை பெரியார்-மணியம்மை பதிவுத் திருமணம் நடைபெற்றது. பெரியாரின் சீடரான வேலு பிரபாகரனும் அதே ஜூன் மாதம்தான்.. ஆனாலும் ஆறு நாட்கள் முன்னதாக இன்று 3-ம் தேதியே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அவருடைய பெரியோரான தந்தை பெரியார் தனது 72வது வயதில் 26 வயது மணியம்மையை மணந்தது போல, இந்தத் திருமணமும் பொருந்தாக் காதலாகவும், ஒப்புக் கொள்ள முடியாத திருமணமாகவும் பலருக்கும் தெரிகிறது..!
இது தனி மனித உரிமையின் கீழ் வரும் என்பதால் யாரும் ஆட்சேபிக்க முடியாது. திருமண வயதைத் தாண்டிய மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்வதை யாரும் தடை செய்யவும் முடியாது..!
ஏன் 60 வயதில் திருமணம் என்று மணமகனையும், ஏன் இத்தனை வயதுக்காரனை திருமணம் செய்கிறாய் என்று மணமகளையும் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை..!
மணமகள் சின்னப் பெண் அல்ல. 30 வயதைத் தொட்டவர். வாழ்க்கை என்றால் என்னவென்று அறிந்தவராகத்தான் இருப்பார். அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கு எது நல்லது.. எது கெட்டது என்பதை அவரே உணர்ந்திருப்பார். அதன் அடிப்படையில் இத்திருமணத்தை அவர் ஆமோதிருப்பார்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குடும்பப் பிரச்சினைகள் இருக்கும். அவர்களுக்கு இதுதான் தங்களைச் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலையாக கிடைக்கும் வாய்ப்பாக இருந்தால், செய்து கொள்ளட்டுமே..? இது நல்லதுதானே..!?
அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில்.. அடுத்தவன் எதையும் எடுத்துக் கொடுக்கப் போவதில்லை. தாங்கிப் பிடிக்கப் போவதில்லை. தள்ளி நின்று வேடிக்கை பார்க்கப் போகிறவர்களின் விமர்சனத்தை ஏன் பொருட்படுத்த வேண்டும்..?
இயக்குநர் வேலு பிரபாகரனுக்கு எனது வாழ்த்துகள்..!
சரவணன் சவடமுத்து, ஊடகவியலாளர். உண்மைத்தமிழன் என்ற பெயரில் வலைத்தளத்தில் எழுதிவருபவர்.

கருத்துகள் இல்லை: