சனி, 10 ஜூன், 2017

முதல்வர் உறுதி:விவசாயிகள் போராட்டம் வாபஸ்!

முதல்வர் உறுதி:விவசாயிகள் போராட்டம் வாபஸ்!
minnambalam: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம், விவசாயக் கடனை தள்ளுபடி செய்தல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பலகோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 45 நாட்களாகப் பல முறைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வேலைநிறுத்தப்போராட்டமும், கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றன.
இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தை முடித்து தமிழக முதல்வரை கடந்த மே 23-ஆம் தேதி சந்திக்க சென்ற போது அய்யாக்கண்ணு,” எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வேளாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு சேப்பாக்கத்தில் காந்திய வழியில் தொடர்போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்திய விவசாயிகளுக்கு தற்போது ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது எப்படி வட இந்தியாவில்இட ஒதுக்கீடு பற்றி பேச யாரும் இல்லாமல் தமிழகத்தில் இருந்து போய் தான் இட ஒதுக்கீட்டை முதலில் பேசினார்கள். அதுபோல தான் தற்போது இந்திய விவசாயிகளுக்குப் போராடும் உணர்வு ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அறிவித்திருந்தபடி ஜூன் 9- ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய, மாநில அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் தோடர்பாக அய்யாக்கண்ணு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஜூன் 10-ஆம் தேதி(இன்று) சந்தித்தார்.
முதல்வரை சந்தித்த பின் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்,” 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்துவிவசாயிகளுக்கும் மகன் மற்றும் மகள் இருந்தாலும், நிலம் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்வர் கூறினார். அதேபோல் தமிழகத்தில் தேசிய வங்கிகள் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுகிறார்கள்,விவசாயிகளின் நிலங்களை ஏலம் விடுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றுஉறுதியளித்துள்ளார். மேலும், விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் முதல்வர் உறுதியளித்துள்ளார். எனவே, முதல்வரின் வாக்குறுதிகளை ஏற்றுப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். இரண்டு மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் மீண்டும் போராட்டம் தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: