திங்கள், 19 ஜூன், 2017

திருமாவளவன் : 2019 - தேர்தல் வெற்றிக்காக தலித்துகளைக் குறிவைக்கும் முயற்சியில் பாஜக!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
அறிக்கை:  குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தலித் சமூகத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை பாசக அறிவித்துள்ளது. இது தலித் மக்களின் மீதான கரிசனம் என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சியே ஆகும். தலித் மற்றும் பழங்குடியினரின் மதமாற்றத்தைத் தடுக்கவும், பாரதிய சனதாவுக்கு எதிரான தலித் மக்களின் எதிர்ப்பு நிலையை நீர்த்துப்போகச் செய்யவும்தான் தலித்துகளைக் குறிவைத்து பாரதிய சனதா செயல்பட்டு வருகிறது.  அதற்குச் சான்றாகவே இந்தத் தேர்வு என நம்புகிறோம்.


பாசக தனது வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் தலித் வேட்பாளர் ஒருவரை அறிவிக்கவேண்டும்’ என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், பாசக வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்காகக் காத்திருந்தது, இப்போது எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் எதிர்க்கட்சிகளின்  பொதுவேட்பாளராக தலித் ஒருவரை அறிவித்திட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தலித் மற்றும் பழங்குடியின வாக்கு வங்கியைக் குறிவைத்து பாசக காய்நகர்த்தி வந்தது. அதைச் சரியான விதத்தில் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ளாததால் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தலித் வேட்பாளரைத்தான் பாசக நிறுத்தப்போகிறது என்கிற தகவல், கடந்த சில மாதங்களாகவே பரவி வந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் விழிப்போடு இருந்து வேட்பாளரை அறிவிப்பதில் பாசகவை முந்திக்கொண்டிருக்கவேண்டும்.

குடியரசுத் தலைவராக தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை காங்கிரசு கட்சிதான் முதன் முதலில் கொண்டுவந்தது. காங்கிரசால் முன் மொழியப்பட்டிருந்தாலும் கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, ஒரு அம்பேத்கரியவாதியாகவே செயல்பட்டார். அப்போது, ஆட்சியில் இருந்த பாசகவின் வகுப்புவாதச் செயல்திட்டங்களை அவர் துணிவோடு தடுத்து நிறுத்தினார். இப்போது, பாசகவால் முன்மொழியப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் , கே.ஆர்.நாராயணன் அவர்களைப்போல ஒரு அம்பேத்கரியவாதி அல்ல. அவர் முழுக்கமுழுக்க பாசகவின் கெள்கைகளை உயர்த்திப்பிடிப்பவர். எனவே, அவரை ஒரு பாசக மற்றும் ஆர்எஸ்எஸின் வேட்பாளராகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

பாசக நிறுத்தியிருக்கும் தலித் வேட்பாளரை எதிர்த்து தலித் அல்லாத ஒருவரை வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தினால், ‘அவர்கள் தலித் விரோதிகள்’ என்ற விமர்சனத்துக்கு ஆளாகநேரிடும். பாசக அதைத்தான் எதிர்பார்க்கிறது. எனவே, பாசகவின் தந்திரத்தை எதிர்கொள்ள காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தலித் ஒருவரை வேட்பாளராக அறிவிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

.;2019 தேர்தலிலும் வெற்றிபெறவேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் பாசக தலித் ஆதரவு தோற்றத்தை முன்வைத்து வருகிறது. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதனை முறியடிக்கும் வகையில் தலித் மக்களுக்கு ஆதரவான உத்திகளை வகுப்பதில் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டவேண்டும். அதில்தான் எதிர்க்கட்சிகளின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறோம்.நக்கீரன்

கருத்துகள் இல்லை: